வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (18/09/2017)

கடைசி தொடர்பு:19:34 (18/09/2017)

ஹமீத் அன்சாரி மனைவி நடத்திவரும் பள்ளிக் குடிநீர்த் தொட்டியில் விஷம் கலப்பு!

 குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் மனைவி நடத்திவரும் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் எலி விஷத்தைக் கலந்ததாகப் புகார் எழுந்துள்ளது. 

ஹமீன் அன்சாரி மனைவி சல்மா

ஆக்ராவில் சாச்சா நேரு என்ற பெயரில் இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியை நடத்தி வரும் அல் நூர் அறக்கட்டளைக்கு குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் மனைவி சல்மா தலைவராக இருந்து வருகிறார். பள்ளியில் சுமார் 4,000 குழந்தைகள் படிப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் வெள்ளிக்கிழமையன்று இருவர் மாத்திரைப் போன்ற எதையோ கலந்துள்ளனர். இதைப் பார்த்த சில மாணவர்கள் அவர்களை என்ன ஏதுவென்று கேள்விக் கேட்டுள்ளனர். அப்போது, மாணவர்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர், பள்ளிச்சுவரைத் தாண்டி தப்பி ஓடிவிட்டனர். 

இது குறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தண்ணீர் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சல்மா அன்சாரி கூறுகையில், ''மிகவும் அச்சுறுத்தும் சம்பவமாக இதைப் பார்க்கிறேன். பள்ளி முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்த முடிவு செய்துள்ளோம்'' எனக் கூறியுள்ளார். 

ஹமீத் அன்சாரி குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற தருணத்தில், மதச்சார்பின்மை குறித்து சிலக் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமுற்ற ‘இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவரின் மனைவி நடத்தி வரும் பள்ளிக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க