வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (18/09/2017)

கடைசி தொடர்பு:17:41 (19/09/2017)

’என்னை அதிர வைத்த அந்த பாலியல் குற்றவாளி..!’ - 100 கைதிகளைப் பேட்டி கண்ட மதுமிதா பாண்டே

 

ந்தியாவில் பாலியல் வன்கொடுமை அன்றாடம் நடக்கும் அவலம். பெண்கள் அணியும் ஆடை, இரவு நேரத்தில் பெண்கள் செல்வது போன்றவற்றையே மேம்போக்கான காரணங்களாக்கி இந்தச் சமூகம் விவாதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு பாலியல் வன்முறை குற்றவாளியின் மனநிலை எப்படி இருக்கும் என்று நாம் சிந்தித்ததுண்டா? அப்படி யோசித்து, 100 பாலியல் குற்றவாளிகளைத் துணிச்சலுடன் சந்திந்துள்ளார் ஒரு பெண். லண்டன், அங்லியா ரஸ்கின் பல்கலைக்கழக (Anglia Ruskin University) மாணவி, மதுமிதா பாண்டே!

மதுமிதா பாண்டே

Photo Courtesy: Washington Post

இந்தியத் தலைநகரில் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறை செய்யப்பட்ட நிர்பயா சம்பவம் நடந்த 2012-ம் ஆண்டு, இங்கிலாந்தில் முதுகலைப் பட்டம் படித்துக்கொண்டிருந்தார் மதுமிதா. 'எந்த மனநிலை இவர்களை இப்படிச் செய்யவைக்கிறது? எத்தகைய சூழ்நிலை இவர்களை இதுபோன்ற வன்முறையில் ஈடுபடச் செய்கிறது?' என்கிற கேள்விகள் மதுமிதா மனத்தில் எழுந்தது. இதைத் தெரிந்துகொள்ள அத்தகைய குற்றம் புரிந்தவர்களைச் சந்திப்பதே ஒரே வழி என்று தீர்மானித்தார். 

சற்றும் தாமதிக்காமல் இந்தியாவுக்கு விமானம் பிடித்தார். திகார் சிறைச்சாலையில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளைச் சந்திக்க வந்தார். 2013-ம் ஆண்டிலிருந்து பல வாரங்கள் தொடர்ந்து 100 பாலியல் குற்றவாளிகளிடம் பேசியதில், பாலியல் குற்றங்களுக்கான அடிப்படை காரணங்களை தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். 

”திகார் சிறையில் உள்ள பல பாலியல் குற்றவாளிகள், ஆரம்ப நிலைப் பள்ளி படிப்பைத் தாண்டாதவர்கள். மூன்றாவது, நான்காவது வகுப்பைக்கூட தாண்டாதவர்கள். நான் என்னுடைய ஆய்வைத் தொடங்கும்போது, இவர்கள் கொடூரமானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவர்களிடம் பேசியதில் அவர்களும் சாதாரண மனிதர்கள்தான் என்பதைக் கண்டறிந்தேன். அவர்கள் வளர்ந்த விதமும் சிந்தனையுமே இத்தகைய செயல்களைத் தூண்டுவதாக இருந்துள்ளது. பலரும் தாங்கள் செய்த தவறை நியாயப்படுத்தினர். சிலர் சாக்குப்போக்கு கூறினார்கள். இன்னும் பலர், தான் பாலியல் குற்றமே செய்யவில்லை என்று மறுத்தனர். சிலரோ தான் செய்த தவறுக்குப் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டினர். அதில், நான் சந்தித்த ஒரு குற்றவாளியைப் பற்றி கூற விரும்புகிறேன். 

அவன் ஆரம்ப நிலைப் பள்ளிக்குக்கூடம் செல்லாத 23 வயது பாலியல் குற்றவாளி. ஐந்து வயது சிறுமியைப் பாலியல் வன்முறை செய்ததற்காக, 2010-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டான். கோயிலைச் சுத்தம் செய்யும் பணியில் இருந்திருக்கிறான். அப்போது, அந்தச் சிறுமி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். அவள் இவனைச் சலனப்படுத்தினாளாம். 'அந்தச் சிறுமி எப்படி உன்னைச் சலனப்படுத்தினாள்' என்று கேட்டேன். அதற்கு அவன், 'என்னை அவள் தகாத முறையில் தொட்டுப் பேசினாள். அதனால், அவளுக்குப் பாடம் புகட்ட நினைத்து அப்படிச் செய்தேன்' என்றான். மேலும், அந்தச் சிறுமியின் அம்மாவின் நடத்தையைப் பற்றியும் தவறாகவே கூறினான். இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம்சாட்டுவது தெரிந்தாலும், அவன் தான் செய்த தவறுக்காக, வெளியில் வந்ததும் அவளையே திருமணம் செய்துகொண்டு புண்ணியம் தேட நினைப்பதாகச் சொன்னான். நான் அந்தச் சிறுமியை சந்திக்க விரும்பினேன். அவன் பணிபுரிந்த கோயிலுக்குச் சென்று விசாரித்தேன். சில நாள்களிலேயே, அந்தச் சிறுமியையும் அவளின் தாயையும் கண்டுபிடித்துவிட்டேன். அந்தச் சிறுமியின் தாயிடம் விவரத்தைக் கூறியதும் மிகவும் அதிர்ச்சியடைந்தார். தன் மகளை பாலியல் வன்முறை செய்தவன் சிறையில் இருப்பதுகூட அந்தத் தாய்க்கு தெரியவில்லை. அவனை ஏன் இன்னும் தூக்கில் போடாமல் வைத்திருக்கிறார்கள் என்று கோபமாக கேட்டார். அதற்கு என்னால் எந்த விளக்கமும் கூற முடியவில்லை. 

இந்தியாவில் 90%  பாலியல்  குற்றங்கள் நீதிமன்றத்தின் படி ஏறாமலே போகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு மட்டும், 34,651  பாலியல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அதில் கிட்டதட்ட 14, 913 வழக்குகள், பாலியல் வன்முறைக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பாலியல் குற்றவாளிகளின் பின்னணி பற்றியும், அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும் இந்தியாவில் பல விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்தச் சமூகத்தில் உள்ள ஆண்களுக்கு, ஆண்மைத்தன்மை பற்றி பல தவறான பிம்பங்கள் இருக்கின்றன. பாலியல் கல்வி என்பதே இந்தியப் பள்ளிகளில் புறக்கணிக்கப்படுகிறது. பின்தங்கிய பொருளாதாரப் பின்னணியிலிருந்து வருபவர்களின் பெரும்பாலான வீடுகளில், 'பாலியல்' என்ற வார்த்தையே பயன்படுத்த மறுக்கிறார்கள். பாலியல் வன்முறையைத் தடுக்க எத்தனையோ வழிமுறைகள் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், அது ஒட்டுமொத்த சமூக மாற்றத்திலிருந்து தொடங்க வேண்டும். அப்போதுதான், பெண்ணுரிமையும் பாலின சமத்துவமும் ஏற்படும்'' என்கிறார் மதுமிதா பாண்டே.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்