வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (19/09/2017)

கடைசி தொடர்பு:09:45 (19/09/2017)

இவான்கா ட்ரம்ப்பை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ்

நியூயார்க் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்பை சந்தித்துப் பேசினார். 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவான்காவைச் சந்தித்து சுஷ்மா பேசினார். ஹைதராபாத்தில்,வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் தொழில்முனைவோர் மாநாட்டுக்கு இவான்கா தலைமையில் அமெரிக்கக் குழு வருகை தர இருக்கிறது. இதுதொடர்பாக, சுஷ்மாவுடன் இவான்கா விவாதித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார். இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், சந்திப்பின்போது ரோஹிங்கியா விவகாரம்குறித்து பேசப்படவில்லை என்றும் வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், டென்மார்க் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களையும் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார். முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இந்தியா தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில், கடல் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள்குறித்து விவாதிக்கப்பட்டது.