ஒடுக்குமுறைக்கு எதிராகச் 'சமூக நீதிக் கூட்டணி'! பரபரக்கும் ஹைதராபாத் மாணவ அமைப்பு தேர்தல் | social justice alliance in hyderabad central university

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (20/09/2017)

கடைசி தொடர்பு:21:40 (20/09/2017)

ஒடுக்குமுறைக்கு எதிராகச் 'சமூக நீதிக் கூட்டணி'! பரபரக்கும் ஹைதராபாத் மாணவ அமைப்பு தேர்தல்

ஹைதராபாத் பல்கலைக்கழகம்

ந்தியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் மாணவ அமைப்பின் பொதுக்குழுப் பதவிகளுக்கான ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக மாணவ அமைப்புக்கான தேர்தல் (HCU) செப்டம்பர்  21-ம் தேதி  நடைபெறவுள்ளது.இந்தத் தேர்தலில்,  'சமூக நீதிக் கூட்டணி' என்ற பெயரில் தலித், இடதுசாரிகள், முஸ்லிம், ஆதிவாசி மாணவ அமைப்பினர் ஒருங்கிணைந்து இந்தக் கல்வியாண்டுக்கான தேர்தலைச் சந்திக்கவுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமூலா இயக்கத்தில் மிகத் தீவிரமாகச் செயல்பட்ட அம்பேத்கர் மாணவர் சங்கம், அதன் நீண்டகால கூட்டணி மாணவ அமைப்பான முஸ்லிம் மாணவச் சங்கம் மற்றும் இஸ்லாமிய மாணவக் குழு ஆகியவற்றுடன் சேர்ந்து இந்த ஆண்டு இந்திய மாணவர் கூட்டமைப்பு, தலித் மாணவர் கூட்டமைப்பு, பழங்குடி மாணவர் கூட்டமைப்பு மற்றும் தெலங்கானா வித்யார்த்தி வேதிகா ஆகியவையும் கூட்டணி அமைத்துள்ளன.

‘'இது வெறும் தேர்தலுக்கான கூட்டணி அல்ல... பாசிசத்துக்கு எதிராகத் தேசிய அளவில் திரண்ட மிகப்பெரிய ஒற்றுமையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டணி. உயர்கல்வி மீதான தாக்குதல்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. எனவே, ஹெச்.சி.யு மாணவர்கள் வலதுசாரி அமைப்பான ஏ.பி.வி.பி-யை எதிர்த்து நிற்கவேண்டிய தேவையை உணர்ந்து தற்போது செயல்படத் தொடங்கியுள்ளனர்’' என முன்னாள் மாணவர் அமைப்புத் தலைவர் குல்தீப் சிங் நகி கூறியுள்ளார்.காங்கிரஸ் மாணவ அமைப்பான இந்திய தேசிய மாணவ அமைப்பு மற்றும் பகுஜன் முன்னணி மாணவர்கள் இந்தக் கூட்டணியில் இணையாமல், தனித்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றனர். சமூகநீதிக் கூட்டணியில் உள்ள மாணவ அமைப்பினர், ஏ.பி.வி.பி-வுக்கு எதிரான இந்தக் கூட்டணியில் 'எந்தவொரு தனி மாணவ அமைப்பின் பெயரையும் பயன்படுத்தப்போவதில்லை' என்ற உறுதிமொழியுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது மாணவ அமைப்பின் பெயர்களுக்குப் பதிலாகச் சமூகநீதிக் கூட்டணி என்ற பெயரையே பயன்படுத்தவுள்ளனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்த பொதுக்குழுவின் தலைவர் வேட்பாளர்களுக்கு இடையேயான தேர்தலுக்குமுன் நடக்கும் விவாத நிகழ்வும் இந்த ஆண்டுத் தேர்தலில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஹைதராபாத் மாணவ அமைப்புத் தேர்தல் நடக்கும் ஹைதராபாத் பல்கலைக்கழகம்

இந்தக் கூட்டணி, இந்த ஆண்டு ஏ.பி.வி.பி-க்கு எதிரான மிகப்பெரிய எதிர்ப்பைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அம்பேத்கர் மாணவர் சங்கம், முஸ்லிம் மாணவ அமைப்புடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. அந்த ஆண்டு, SFI தனித்துப் போட்டியிட்டது. ஆனால், இந்த ஆண்டு ரோஹித் வெமூலாவுக்கான சமூகநீதிப் போராட்டம் அனைத்து மாணவ அமைப்புகளையும் ஒரே அணியின்கீழ் கொண்டுவந்து செயல்பட வைத்திருப்பதாக இப்பல்கலைக்கழக மாணவர்கள் கருதுகின்றனர். இந்தத் தேர்தலில், தலைவர் பதவிக்காகச் சமூக நீதிக் கூட்டணியின் சார்பாக ரோஹித் வெமூலா இயக்கத்தில் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீராக் என்பவர் போட்டியிடுகிறார். ரோஹித் வெமூலா தற்கொலையின் பொருட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் அப்பா ராவுக்கு எதிராகப் போராடியதற்காகச் சிறை சென்ற மாணவர்களுள் ஸ்ரீராக்கும் ஒருவர். ‘'தலித்கள், பகுஜன்கள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மைனாரிட்டிச் சமூகங்கள் அனைத்தும் தற்போது இருக்கும் பிராமணிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஓர் அணியில் திரள வேண்டிய நேரம் இது. ஓர் அணியில் திரள்வது என்பது உங்களது கொள்கையில் சமசரம் செய்துகொள்வதாக அர்த்தமாகாது. அரசியல் சார்ந்தும் சமகால அரசியல் சூழல் சார்ந்த நமது அறிவு முதிர்ச்சியையே காட்டும்’' என்கிறார் ஸ்ரீராக்.

பொதுக்குழுவின் துணைத் தலைவர் பதவிக்கு லுனவத் நரேஷும், பொதுச் செயலாளர் பதவிக்கு ஆரிப் அஹமதுவும், இணைச் செயலாளர் பதவிக்கு முகமது ஆசிக்கும், விளையாட்டுத் துறை செயலாளர் பதவிக்கு லோலம் சரவணக்குமாரும், பண்பாட்டுத் துறைச் செயலாளர் பதவிக்கு குண்டேத்தி அபிஷேக்கும், பாலியல் தொடர்பான வழக்குகளுக்கான செயலர் பதவிக்குத் தமிழ்நாட்டு மாணவி ஆர். சாரு நிவேதிதாவும் போட்டியிடுகின்றனர். இவர்களில், இரண்டு முஸ்லிம் மாணவர்களும், மூன்று தலித் மாணவர்களும், ஓர் ஆதிவாசி மாணவரும் போட்டியிடுவதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டணியின் சிறப்பே, தலித் - பகுஜன், ஆதிவாசி, முஸ்லிம் ஆகிய மாணவ அமைப்புகளிலிருந்து மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதாகும்.தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 22-ல் வெளியிடப்படும்.

புதிய களத்தை எதிர்நோக்கியிருக்கிறது ஹைதராபாத் மாணவ அமைப்புக்கான பொதுக்குழுத் தேர்தல்.

 

 


டிரெண்டிங் @ விகடன்