வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (21/09/2017)

கடைசி தொடர்பு:11:20 (21/09/2017)

இந்தியச் சிறுமிகளைத் திருமணம் செய்ய முயன்ற 8 வளைகுடா நாட்டவர்கள் கைது!

ந்தியச் சிறுமிகளைத் திருமணம் செய்து, சொந்த நாட்டுக்கு அழைத்துச்செல்ல முயன்ற வளைகுடா நாடுகளைச் சேர்ந்த 8 பேரை, ஹைதராபாத் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

ஹைதரபாத்தில் பிடிபட்ட அரேபியர்கள்

இந்தியச் சிறுமிகளை, வளைகுடா நாட்டவர்கள் சட்டவிரோதமாகத் திருமணம் செய்வது அதிகரித்துவருகிறது. குழந்தைகளுடன் வறுமையில் வாடும் பெற்றோர்களை அடையாளம் கண்டு, புரோக்கர்கள் அவர்களை அணுகுவார்கள். வீட்டில் மூத்த சிறுமி இருந்தால், பணத்தாசை காட்டி விலைபேசி, அரேபியர்களுக்கு விற்பனை செய்துவிடுவார்கள். பணத்துக்கு ஆசைப்பட்டு, பெற்றோரும் மகள்களை விற்பனைசெய்கின்றனர். 

 சமீபத்தில், ஓமனைச் சேர்ந்த 65 வயது முதியவர், ஹைதராபாத் சிறுமியைத் திருமணம் செய்து, தன் நாட்டுக்கு அழைத்துச் சென்று,  உடல்ரீதியாக சித்ரவதை செய்துள்ளார். தன் நிலைகுறித்து தாயிடம் அந்தச் சிறுமி போனில் கதறியிருக்கிறார். இந்தச் சம்பவத்தையடுத்து, ஹைதராபாத் போலீஸ், சிறுமிகளைத் திருமணம் செய்வதற்காகத் தங்கியிருக்கும் வளைகுடா நாட்டவர்கள் மீது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியது. 

தேடுதல் வேட்டையில் முதல்கட்டமாக, வளைகுடா நாடுகளைச் சேர்ந்த 8 பேர் நேற்று பிடிபட்டனர்.  இவர்கள், ஓமன் மற்றும் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு உதவிசெய்த 5 புரோக்கர்களும் தங்குவதற்கு இடமளித்த லாட்ஜ் உரிமையாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்வதற்காக இவர்கள் ஸ்டீராய்ட்  ஊக்க மருந்து எடுத்துக்கொள்வதாக போலீஸார் கூறுகின்றனர். 

சிறுமிகளை திருமணம் செய்யக் காத்திருந்த அரேபியர்கள்

வளைகுடா நாட்டவர்களுக்கு, சட்டவிரோதத் திருமணம் செய்துவைக்க மும்பையிலிருந்து வந்து ஹைதராபாத்தில் தங்கியிருந்த மூன்று மதகுருக்களும் கைதாகியுள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஃபரீத் கான் என்பவர், சிறுமிகள் விற்பனைக்கு முக்கிய ஏஜென்ட்டாகச் செயல்படுவது தெரியவந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க