'ரோஹிங்யா முஸ்லிம்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்' - ராஜ்நாத் சிங்

"ரோஹிங்யா முஸ்லிம்கள், அகதிகள் அல்ல. அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்" என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 


மியான்மர் நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் காரணமாக ஏராளமான ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். ஆனால், இந்திய அரசு அவர்களைத் திரும்ப அனுப்பவுள்ளதாகத் தெரிவித்தது. இந்திய அரசின் இந்த அறிவிப்புக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. தேசிய மனத உரிமைகள் ஆணையமும் இதுதொடர்பாக மத்திய அரசிடம் விளக்கத்தைக் கேட்டிருந்தது. இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், 'ரோஹிங்கியா முஸ்லிம்களை திரும்ப மியான்மருக்கு அனுப்புவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது அடிப்படையில்லாதது. மியான்மர் அவர்களைத் திரும்ப வரவேற்க தயாராக இருக்கும்போது இங்குள்ளவர்கள் ஏன் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்? அவர்கள் இந்தியாவுக்கு முறைப்படி வரவில்லை. மேலும் அவர்கள், அகதிகளாக இங்கே தங்குவதற்கு விண்ணப்பிக்கவும் இல்லை. அவர்கள் சட்டவிரோதமாக இங்கு குடியேறியவர்கள்.

அவர்களை இங்கிருந்து வெளியேற்றுவதன் மூலம் இந்தியா எந்த சர்வதேசச் சட்டத்தையும் மீறாது. 1950-ம் ஆண்டு ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. அடுத்தவர்கள் மீதான மனித உரிமைகள் பற்றி பேசுவதற்கு முன்னதாக இங்குள்ள பிரச்னைகள் குறித்து பார்க்க வேண்டும். ரோஹிங்யாக்களைத் திரும்பப் பெறும் முயற்சிகளை மியான்மர் தொடங்கும் என்று நம்புகிறேன்' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!