அடுத்தடுத்து அணி மாறுதல் எதிரொலி: குடகில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை | Dinakaran met his supporters in Kodagu resort

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (22/09/2017)

கடைசி தொடர்பு:16:45 (22/09/2017)

அடுத்தடுத்து அணி மாறுதல் எதிரொலி: குடகில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம், அடுத்தடுத்து தனது ஆதரவாளர்கள் அணி மாறுதல் என்று தொடர் நெருக்கடியில் இருக்கும் டி.டி.வி.தினகரன் குடகு ரிசார்ட்டில் இருக்கும் தன் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

டி.டி.வி தினகரன்

அ.தி.மு.க அணிகளுக்கு இடையேயான மோதல் தொடர் கதையாகிவிட்டது. முன்பு சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல் கொடுத்துவந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது அதே எடப்பாடியுடன் இணைந்து துணை முதல்வராகிவிட்டார். இதையடுத்து, பன்னீர்செல்வமும் பழனிசாமியும் இணைந்து டி.டி.வி.தினகரனுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம், எம்.எல்.ஏ-க்களாக இருந்த தினகரன் ஆதரவாளர்கள் கடிதம் வழங்கினர். இதைத்தொடர்ந்து, அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு, அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருந்தார். அதனடிப்படையில், 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் கடந்த வாரம் தகுதி நீக்கம் செய்தார்.

இதனிடையே, தினகரன் அணியில் இருக்கும் அவரின் ஆதரவாளர்கள் எடப்பாடி அணிக்கு தாவி வருகின்றனர். ஏற்கெனவே, எம்.எல்.ஏ ஜக்கையன் அணி மாறியிருந்த நிலையில், தற்போது வசந்தி முருகேசன் எம்.பி-யும் எடப்பாடி அணிக்கு மாறியுள்ளார். இந்த அடுத்தடுத்த அணி மாறுதல்களால் தினகரன் கடும் அதிருப்தியிலும் நெருக்கடியிலும் உள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் குடகில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களை, டி.டி.வி.தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அணி மாறுதல் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.