வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (23/09/2017)

கடைசி தொடர்பு:13:55 (23/09/2017)

வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குக்குத் தடை?: அரசிடம் விளக்கம் கேட்கும் நீதிமன்றம்

வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை செயல்படத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுதொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வி.டி.மூர்த்தி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், ’வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள், இணையம்மூலம் அளிக்கும் போன் வசதிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை அளித்துவரும் மற்ற நிறுவனங்களைப் போலவே, மேற்கூறிய இரண்டு நிறுவனங்களின் இணைய வழி செல்போன் சேவையையும் ஒழுங்குபடுத்த வேண்டும். அதுவரை, வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை செயல்படத் தடை விதிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒழுங்குபடுத்தப்படாமல் இணையம்மூலம் வாய்ஸ் கால் சேவை அளித்துவருவது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். அந்த நிறுவனங்கள் அளித்துவரும் வாய்ஸ் கால் சேவையின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் என்கிரிப்ஷன் குறியீடுகள், எளிதில் ஹேக் செய்ய முடியாதவை. இந்த வசதியைப் பயன்படுத்தி, தீவிரவாதிகள் எளிதில் தங்களுக்குள் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்கிறார்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனு மீதான விசாரணை, டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி ஷங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடுகுறித்து அக்டோபர் 17-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல்செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.