கிரண்பேடி செய்த மூன்று தவறுகள்... அடுக்கும் நாராயணசாமி! - இது புதுவை பஞ்சாயத்து | "The Chief Minister threatens the governor without denying the officer" Kiran Bedi's obsession

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (25/09/2017)

கடைசி தொடர்பு:17:03 (25/09/2017)

கிரண்பேடி செய்த மூன்று தவறுகள்... அடுக்கும் நாராயணசாமி! - இது புதுவை பஞ்சாயத்து

கிரண்பேடி

“தேவைப்பட்டால் ஆளுநர் கிரண்பேடிமீது, மான நஷ்ட வழக்கு தொடருவோம்” என்று முதல்வர் நாராயணசாமியும், “முறைகேடுகள் குறித்து தலைமைச் செயலாளரை அழைத்து விளக்கம் கேட்பதை விட்டுவிட்டு பணியைச் செய்த ஆளுநரை முதல்வர் மிரட்டுகிறார்” என்று கிரண்பேடியும் மருத்துவச் சேர்க்கை விவகாரத்தில் வார்த்தைப் போரை நடத்தி வருகின்றனர்.

சென்டாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார். இந்நிலையில், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புதுச்சேரி சுகாதாரத் துறையின் இயக்குநர் மற்றும் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

அரசும் அதிகாரிகளும்தான் மருத்துவ முறைகேடுகளுக்குக் காரணம் என்று கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் சென்டாக் மூலம் மருத்துவ உயர்கல்வி பட்டம் மற்றும் பட்டயப்படிப்புக்கான சேர்க்கை தொடர்பான சர்ச்சை இருந்து வருகிறது. சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்து சென்டாக் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். மருத்துவப் படிப்புக்காக 2017-18-ம் கல்வியாண்டில் நடைபெற்ற சென்டாக் கலந்தாய்வு தொடர்பாக துணை நிலை ஆளுநர் கருத்து கூறும்போது ’முதல்வர், அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் சென்டாக் அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். சென்டாக் சம்மந்தமாக எங்கள் அரசு அனுப்பிய கோப்புகள் அனைத்திலும் துணை நிலை ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். அப்படி இருக்கும்போது அவருக்கு பொறுப்பு இல்லாமல் இருக்க முடியுமா?  சென்டாக் மருத்துவ மேற்படிப்பு சம்பந்தமாக சட்டப்பேரவையில் விவரமான அறிக்கையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். மாணவர்களை சேர்ப்பதற்கான கடிதம் வழங்குவது மட்டும்தான் சென்டாக்கின் வேலை. 

கிரண்பேடி

கடிதம் வழங்கிய பிறகு மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தால் சேர்க்கப்பட்டார்களா இல்லையா என்பதைக் கண்காணிக்க வேண்டியது மத்திய மருத்துவக்கழகம்தான். அதைக் கண்காணிக்கும் பொறுப்பு சென்டாக்கிடம் இல்லை.  அங்கீகாரம் வழங்கிய மருத்துவ கவுன்சிலிங்குக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. இதில் மாநில அரசுக்கு உரிமையில்லை. மாணவர் சேர்க்கை சம்பந்தமான விதிமுறைகளைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் இருக்கிறார். 

ஆளுநர் சென்டாக் அலுவலகம் சென்று மத்திய தொகுப்புக்குச் செல்ல வேண்டிய 26 இடங்களை மாநில மாணவர்களுக்குத் தரவேண்டும் என  உத்தரவிட்டார்.  கலந்தாய்வு சரியாக நடைபெறவில்லை என்றால் மாநில அரசின் கவனத்துக்குத்தான் ஆளுநர் கொண்டுவர வேண்டும். ஆளுநர் நேரிடையாக சென்றது மிகப்பெரிய தவறு. சென்டாக் கலந்தாய்வு நடைபெறும் இடத்துக்குச் செல்லும் அதிகாரத்தை ஆளுநருக்கு  யார் கொடுத்தது? அங்கே அமர்ந்துகொண்டு கலந்தாய்வை நடத்தியது இரண்டாவது தவறு. விதிமுறைகளை மீறி 26 பேருக்கு சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது மூன்றாவது தவறு. ஆளுநர்  2 உத்தரவுகளைப் போட்டுள்ளார். சேர்க்கப்படாத இடங்களைப் பொறுத்தவரை தேசியக் கலந்தாய்வுக்கு அனுப்பியிருந்தால் ரத்துசெய்ய வேண்டும் என கூறியுள்ளார். இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. அதிகாரிகள், தலைமைச்செயலர், அமைச்சர்கள், முதல்வர் மீது குறை சொல்வது புதுச்சேரி மக்களை அவமதிக்கும் செயல். சிபிஐ விசராணை நடக்கும்போது இப்படிப் பேசுவதன் காரணம் என்ன? ஆளுநரின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ளது. 

 


சென்டாக்

ஆளுநர் விதியை மீறி செயல்பட்டதற்கு பொறுப்பேற்கவேண்டும். முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நிர்பந்திக்கிறார். ஆளுநராக இருப்பதற்குத் தகுதியில்லாதவர் கிரண்பேடி. அதிகாரிகளை மிரட்டிப் பொய்யான வாக்குமூலம் பெற்று அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் செய்துவருகிறார். ஆளுநர் அதிகாரிகளைத் தூண்டிவிடுவது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்து வருகின்றோம். தேவைப்பட்டால் ஆளுநர்  மீது மானநஷ்ட வழக்குத் தொடருவோம். அதேபோல சமூக வலைதளங்களில் கவர்னர் தெரிவிக்கும் தகவல்களை ஆராயாமல் வெளியிடும் பத்திரிகைகளும் அந்த வழக்கில் சேர்க்கப்படுவார்கள்” என்று ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

முதல்வர் நாராயணசாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதில் அளித்த கிரண்பேடி, “முதல்வர் உணர்ச்சி வசப்படுகிறார். அவர் தலைமையிலான அரசில் பணிபுரியும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள், மூத்த அரசு செயலர், இயக்குநர் ரேங்கில் உள்ள அதிகாரி மற்றும் பிற துறையில் உள்ள மூன்று அதிகாரிகள் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கின்றனர். எனவே, வரும் காலங்களில் மீதமுள்ள அரசு அதிகாரிகள் சட்டவிதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும். முறைகேடுகள் குறித்து தலைமைச் செயலாளரை அழைத்து விளக்கம் கேட்பதை விட்டுவிட்டு பணியைச் செய்த ஆளுநரையும் ஊடகத்தினரையும் முதல்வர் மிரட்டுகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்