வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (25/09/2017)

கடைசி தொடர்பு:08:45 (26/09/2017)

பிரதமர் மோடி அறிவித்த திட்டம் இதுதான்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் மின் இணைப்பு வசதியை உறுதி செய்யும் வகையிலான சௌபாக்யா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.


தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தொடங்கிவைத்த சௌபாக்யா திட்டத்தின் மூலம்  ரூ.500-ல் மின் இணைப்பு வழங்கப்படும். இந்தத் தொகையையும் 10 தவணைகளாகச் செலுத்திக்கொள்ளும் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கான திட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் கல்வி மற்றும் சுகாதாரமும் மேம்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ரூ.16,320 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.12,320 கோடி ஒதுக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்குவது, பொதுமக்கள் பாதுகாப்பை அதிகரிப்பது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, குறிப்பாக பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது போன்ற அம்சங்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தத் திட்டத்துக்கான மொத்த செலவில் 60 சதவிகிதத் தொகையை மத்திய அரசு வழங்கும் என்றும், 10 சதவிகித தொகையை மாநில அரசுகளும், மீதமுள்ள 30 சதவிகித தொகை கடனாகவும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நாட்டு மக்களுக்கு முக்கியமான திட்டம் ஒன்றை மாலை 6.30 மணிக்கு அறிவிக்கவிருப்பதாகக் கூறியது சமூக வலைதளங்கள் தொடங்கி பல்வேறு தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.