வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ-யின் புதிய அறிவிப்பு!

வங்கிக் கணக்குகளில் பராமரிக்கப்பட வேண்டிய மாதாந்திர சராசரி இருப்புத் தொகையைக் குறைத்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) அறிவித்துள்ளது. 


இதுதொடர்பாக அந்த வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மாதாந்திர சராசரி இருப்புத் தொகை பராமரிப்பைப் பொறுத்தவரையில், மாநகரங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பராமரிக்கப்பட வேண்டிய மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ.3,000-ஆக நிர்ணயிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர்ப் பகுதி வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சமாக ரூ.5,000 மாதாந்திர சராசரி இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ. அறிவித்திருந்தது. இந்த தொகை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை சேமிப்புக் கணக்குகள் (Basic Savings Bank Deposit Accounts), பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுபவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. 


அதேபோல், மாதாந்திர சராசரி இருப்புத் தொகையைப் பராமரிக்காத வங்கிக் கணக்குகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 20 முதல் 50 சதவிகிதம் குறைத்துள்ளதாகவும் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது. கிராமங்கள் மற்றும் பேரூர்களில் இந்த அபராதத் தொகை ரூ.20 முதல் ரூ.40 வரையிலும், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் இந்த தொகை ரூ.30 முதல் ரூ.50-ஆகவும் இருக்கும் என்றும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 42 கோடி சேமிப்புக் கணக்குகள் எஸ்.பி.ஐ. வங்கிகளில் உள்ள நிலையில், பிரதமரின் அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டம் மற்றும் அடிப்படை சேமிப்புக் கணக்குகள் என்ற வகையில் 13 கோடி வங்கிக் கணக்குகளுக்கு மாதாந்திர சராசரி இருப்புத் தொகையைப் பராமரிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய இந்த அறிவிப்பின் மூலம் மேலும் 5 கோடி வங்கிக் கணக்குகள் விலக்கு பெறும் என்றும் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!