Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“அரசியல்வாதி பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படிப்பார்களா?” மந்திரியை மடக்கிய மாணவி

து மந்திரிகளை மாணவ சமூகம் கேள்வி கேட்கும் காலம் போல. கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா என்ற பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் நடந்த ஓர் விழாவில், மேடையேறிய கர்நாடகா சமூக நலத்துறை மந்திரி ஆஞ்சநேயா, "நமது அரசுப் பள்ளிகள், அற்புத வசதிகளோடு சிறப்பாக இயங்கிவருகின்றன. இங்கு பயின்றவர்கள் பலர்  உயர்ந்த நிலையில் உள்ளனர். எனவே இனி  நமது மாநிலத்தில் உள்ள  வசதி படைத்தவர்களும் தமது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்." என்கிறார். பலத்த கரவொலி எழும்ப பாராட்டுகளைப் பெற்றபடியே மேடையிலிருந்து  இறங்கிய அந்தத் தருணம், மந்திரியை இடைமறிக்கிறது துறுதுறு மாணவி ஒருவரின் கேள்வி. "நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். இந்தளவுக்கு  உயர்ந்த அரசு பள்ளிகளில், இனி அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாமே?" என்று அந்த மாணவி துணிச்சலாகக் கேட்டார். அவ்வளவுதான். எதிர்பாராத இந்தக் கேள்வியால்,  மந்திரி மட்டுமல்ல அரங்கிலிருந்தோரும் ஆடிப்போயினர். மேற்கொண்டு பேசுகிறார் மாணவி 'நயனா'. 

மந்திரியை மடக்கிய மாணவி

முதல்வருக்குக் கேள்வி:

"இங்க  சித்ரதுர்கா மாவட்டத்தில உள்ள கவர்ன்மென்ட் ஸ்கூல்ஸ் எல்லாமே மிக மோசமான நிலையில இருக்கு. எந்த வசதியுமில்ல. இதெல்லாம் நம்ம சி.எம் சித்தராமையா-கிட்ட கொண்டு போலாம்னு பல டைம் நாங்க ட்ரை பண்ணினோம். ஆனா அவர் கவனத்துக்குக் கொண்டு போகவேமுடியல.  அடிப்படை வசதியில்லாத கவர்ன்மென்ட் ஸ்கூல்ல எத்தனை அரசியல்வாதிகள் குழந்தைங்க படிக்கிறாங்க சொல்லுங்க? மோசமா இருக்குற கவர்ன்மென்ட் ஸ்கூல்களைச் சரி பண்ணுங்க. எங்க ஸ்கூல்ல இருந்து நாங்க 30 ஸ்டூடெண்ட்ஸும் இப்போவே கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு மாறுறோம். நாங்க மாணவிகள் சொன்னோம்னு சி.எம்-கிட்ட எல்லா விஷயமும் சொல்லுங்க." என்றார் உறுதியான குரலில். இதன் நியாயத்தை உணர்ந்ததாலோ என்னவோ மாணவிகள் தரப்பு நயனாவை கொண்டாட, மந்திரி ஆஞ்சநேயாவோ, "அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, இங்கே நீங்கள் தெரியப்படுத்தியவைகளை முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்" என்றபடியே அங்கிருந்து இடத்தைக் காலி செய்கிறார். இந்தக் கேள்வியை கர்நாடகா மாணவி கேட்டாலும் இது தமிழ்நாட்டுக்கும், ஏன், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும்.

பள்ளிகளால் மன உளைச்சல் :

மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் சென்னை வேளச்சேரி ப்ரியா நம்மிடம், “பள்ளிக்கூடம் சேர்கிற வயசுல எனக்கு பாப்பா இருக்கு.  இங்க பக்கத்துல உள்ள அரசுப் பள்ளிக்கூடங்கள் சரியான கட்டடம் இல்லாமலும், புதர் மண்டியும் கிடக்குது. கழிப்பறை வசதி ப்ரியாகூட இல்லை. ஆசிரியர்களும் சரியா வருவதில்லைன்னு சொல்றாங்க. இங்க படிக்கிறது இருக்கட்டும், சுகாதாரமில்லாததால் குழந்தைக்கு ஏதாவது பிரச்னையானால் யார் பொறுப்பேற்பது?  இங்க மட்டுமல்ல, பல இடங்கள்ல அரசுப் பள்ளிக்கூடங்கள் இப்படித்தான் இருக்கு. யோசிச்சுப் பாருங்க இங்க எப்படி சேர்க்க முடியும் ? மீறி சேர்த்தாலும் பிள்ளை பத்திரமா இருக்குமான்னு, நெஞ்சுக்குள்ள ஒரு பயம் இருந்துகிட்டே இருக்குமே. தனியார் கல்வி நிலையங்கள்ல உள்ள கல்விக் கொள்ளையைத்  தடுக்கணும். ஆனா அதைத் தடுக்க வேண்டிய அரசியல்வாதிகள், அதிகாரிகளே அவங்க பிள்ளைகள தனியார்ப் பள்ளிகள்லதான் படிக்க வைக்கிறாங்க. பல லட்சம் செலவு செஞ்சும், அதிகாரத்தைப் பயன்படுத்தியும் கிடைக்கிற கல்வியால அவங்க பிள்ளைங்க  பெரிய நிலைமையை அடையுறாங்க. சாதாரண குடும்பத்தை சேர்ந்த நாங்க, எங்க குழந்தைங்க உயர்ந்த இடத்தை அடையணும்னு நினைக்கிறது தவறா? கல்விக் கட்டணத்தை வரைமுறைப்படுத்தி, தரமான கல்வியை வழங்கணும். அதுக்கு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் அவங்க பிள்ளைகளை அரசு பள்ளியிலதான் சேர்க்கணும்ன்னு சட்டம் போட்டா, தானாகவே  அரசுப் பள்ளிகள்  தரமானதா மாறிடும். அந்தச் சூழல் வந்தா, எங்களப் போன்றவங்க, தாராளமா அரசுப் பள்ளியில சேர்த்துவோம். நாங்க அரசுப் பள்ளிகளுக்கு விரோதி கிடையாது" என்றார் பொறுமையாக.

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுலைமான் பாதிப்போ வேறுவகை. 

"இன்றைய சமூகச் சூழலில், அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது நெருப்பாற்றில் நீந்துவதற்குச் சமம். ஒட்டுமொத்த குடும்பமும் கடுமையாக எதிர்த்த போதிலும் கொள்கையளவில் அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்ப்பதுதான் சரி என்று முடிவெடுத்து என் இரு பிள்ளைகளையும் சேர்த்தேன். என் மகள் இரண்டாம் வகுப்பும், மகன் ஒன்றாம் வகுப்பும் படிக்கிறான். துரதிர்ஷ்டவசமாக, தினமும் பள்ளிக்குச் சென்று விட்டு என் பிள்ளைகள் தெரிவிக்கும் குறைகளைக் கேட்டுக் கடும் மன உளைச்சலுக்குள்ளாகிறேன். கழிவறைகளில் தண்ணீர் வசதி இல்லாமல் முடை நாற்றமெடுக்கிறதாம்...கழிவுகள் அகற்றப்பாடாமல் மிக மோசமாக இருக்கிறதாம். ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வருவது கிடையாதாம். வருகை தருகின்ற ஆசிரியர்களும்  பாடங்களைப் பயிற்றுவிப்பது இல்லையாம்.. இதெல்லாம் என்சுலைமான் பிள்ளைகளின் குற்றச்சாட்டுகள். கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்தது பெரும் மோசடி. அது கல்வியை வியாபாரமாக்கி விட்டது என்று குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கெதிராக வினையாற்ற வேண்டுமென விரும்பும் என்னைப் போன்ற ஆட்களும் கூட அரசுப் பள்ளிகளின் தரத்தைக் கண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாழாக்கி வருகிறோமா என அச்சப்படுகின்ற சூழல்தான் நிலவி வருகிறது. காலந்தாழ்த்தாமல் அரசும் கல்வித்துறையும் அரசுப்பள்ளிகளிலுள்ள குறைபாடுகளை உடனடியாகக் களைய வேண்டும்." என்றார் உணர்வுபூர்வமாக.

கழிப்பிடம் இல்லா கல்வி நிலையம் :

"இந்தியா முழுக்க 100-ல் 32 குழந்தைகள் மட்டுமே அந்தந்தப் பருவத்தில் வகுப்புகளைக் கடக்கின்றனர். 2 விழுக்காடு பள்ளிகள் மட்டுமே ஒன்றாம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை முழுமையான பள்ளிக்கூடங்களாக இயங்குகின்றன. இதில் அரசுப் பள்ளிகளின் நிலை மோசமாகவே உள்ளது. குறிப்பாகப் போதிய வகுப்பறை, கழிப்பறை, வசதியில்லாத பள்ளிகள் பல.  வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் முறையான பள்ளிக்கூடங்கள் இருப்பதில்லை. கல்வியில் ஓரளவு உயர்ந்த தமிழ்நாட்டிலேயே பிரச்னைகள் இருக்கும்போது வடநாட்டில் இருப்பதில் ஆச்சர்யமில்லை " என்கின்றனர் கல்வியாளர்கள். தொடர்ந்து பேசியவர்கள், "தமிழ்நாட்டில் மட்டும்  55,667 பள்ளிகள் உள்ளன. இதில் 63 விழுக்காடு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும். 1,35,05,795 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கு ஏற்றளவில் போதுமான ஆசிரியர்கள் இருப்பதில்லை. 75 விழுக்காடு தொடக்கப்  பள்ளிகளில், பயிற்சி ஆசிரியர்களை வைத்தே பாடங்களை நடத்துகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சில பள்ளிகளில் மட்டுமே உள்ளது. மற்ற அனைத்துப் பள்ளிகளிலும் ஆழ்குழாய் நீரைச் சுத்திகரிக்காமல் மாணவர்களுக்குக் கொடுக்கின்றனர். இல்லையெனில்  குளத்து நீரைக் குடிக்கின்றனர். பள்ளிகளில் பெயர் அளவிற்கு கழிப்பறைகள் இருந்தும் தண்ணீர் வசதி இல்லாமல் பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள்  பூட்டப்பட்டிருக்கின்றன. கழிப்பறை பயன்பாடின்றி இருப்பதால் திறந்த வெளியே கழிப்பறைகளாகப் பயன்பட்டு வருகிறது. கிராமப் பகுதிகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்நிலைப்பள்ளியாகவோ அல்லது  மேல்நிலைப்பள்ளியாகவோ செயல்பட்டுவரும் அரசுப்பள்ளிகளுக்குப் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ தேர்வு மையம் வழங்குவதில் கூட கல்வித்துறை அலுவலர்கள் அலட்சியமாக உள்ளனர். 91 % விழுக்காடு  பள்ளிகளில் பெண்களுக்குக் கழிப்பிட வசதி உள்ளதாக அரசுப் புள்ளிவிவரம் கூறுகிறது. 100 விழுக்காடு இருப்பதுதானே சரி.?" என்கின்றனர் கல்வியாளர்கள் வேதனையான குரலில்.

அரசு பள்ளி மாணவர்கள்

தனியார்ப் பள்ளிகள் நடத்தும் அரசியல்வாதிகள் :

சமகல்வி இயக்கம் என்ற கல்வி அமைப்பு சில நாட்களுக்கு முன்பு  சென்னை, விருதுநகர், ராமநாதாபுரம், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, வேலூர் ,கரூர் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒரு சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 155 அரசு பள்ளிகளில் '37 விழுக்காடு  பள்ளிகளில்  மேற்கூரையே இல்லை. 38 விழுக்காடு பள்ளிகளில்  குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லை' என்று தெரியவந்துள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். சமீபத்தில் தங்கள் பிரச்னைகளுக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், "தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் தலைமையாசிரியர்களே இல்லாமல் செயல்படுகிறது" என்று கூறியதை இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மிடம் பேசிய கல்வித்துறை சார்ந்த ஒரு நேர்மையான அதிகாரி, "பள்ளிக்கல்வித்துறையை வளர்த்தெடுக்க அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், அது முறையாக செலவழிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. பல மாவட்டங்களில் மந்திரிகளும், அவர்களின்  நெருங்கிய வட்டமும், ஆளும்கட்சி பிரமுகர்களும் தனியார்ப் பள்ளி, கல்லூரிகளை நடத்துகின்றனர். இதனால், அரசுப் பள்ளி, கல்லூரிகள் அடிப்படை வசதியற்று காணப்படுகின்றன. அரசுப் பள்ளிகள் மோசமாக இருந்தால்தான் தங்கள் கல்வி நிலையங்களை நோக்கி மக்கள் வருவார்கள், கல்வி கொள்ளையும் நிகழ்த்தலாம் என்ற நோக்கமோ என்னமோ " என்றார் நொந்தபடி.

பள்ளிகளைக் கோயில் என்றும் அழைப்பார்கள். காவிரி புஷ்கரத்தின்போது காவிரியில் புனித நீராடியவர்களுக்கு எளியவர்களின் பிள்ளைகள் பயிலும் பள்ளிக்கூடங்கள் எனும் கோயில்கள் நினைவுக்கு வரவில்லையா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement