Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளை மிரட்டும் மோடி அரசு!” - முத்தரசன் கண்டனம்

 முத்தரசன்

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை தனது கைப்பாவையாக மத்திய பி.ஜே.பி அரசு பயன்படுத்தி வருகிறது. ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளாத அனைத்துக் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தி மக்களுக்கு துரோகம் இழைக்கின்றது எடப்பாடி அரசு” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் சிறப்புத் தகுதி, உடனே உள்ளாட்சித் தேர்தல் நடத்துதல், உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணக் குறைப்பு, வீட்டுவரி மற்றும் குடிநீர் வரி உயர்வைக் கைவிட வேண்டும்' உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பிரசார நடைபயணம் செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.

கவுண்டன்பாளையத்தில் ஆரம்பித்த நடை பயணத்தை அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தேர்தலின் மூலம் எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். குறைந்த வாக்குகள் பெற்ற கட்சிகூட ஆட்சிக்கு வருகின்றன. அப்படி வெறும் 31 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற பி.ஜே.பி-தான் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. 

'வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை 100 நாள்களில் மீட்டு இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும்' என மோடி தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும்  15 ஆயிரம்  கூட யாருடைய வங்கிக் கணக்கிலும் செலுத்தப்படவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. வாக்கு வங்கியை அதிகரிக்க அவர்கள் கொண்டுவர நினைத்த பசு வதை தடுப்புச் சட்டமும் வெற்றி பெறவில்லை. மோடியின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமை முழுவதுமாக பறிக்கப்பட்டுள்ளது. பி.ஜே.பி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை வைத்து மாநில அரசை மிரட்டி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி வரியால் மாற்றுத் திறனாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பது இரக்கமற்ற செயல்.
 

இந்திய கம்யூனிஸ்ட்

இந்தி மொழியை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் முயற்சியில், மத்திய அரசு செயல்படுகிறது. 'நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டுமென்று வலியுறுத்தி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பிய பிறகும் எந்தவித பதிலையும் மத்திய அரசு அளிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்குமென 6 மாத காலமாக நம்பிக்கை கொடுத்தார்கள். விலக்கு கிடைக்காததன் விளைவுதான் அரியலூர் மாணவி அனிதாவின் மரணம். அனிதாவின் தற்கொலைக்குக் காரணம் மத்திய, மாநில அரசுகள்தான். ஆர்.எஸ்.எஸ்-ஸின் குழந்தைதான் பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ் கொள்கையை மோடி அரசு, மறைமுகமாகச் செயல்படுத்துகிறது. மோடி அரசு, அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுவதோடு நாடாளுமன்றத்தையும், அமைச்சரவையையும் மதிப்பதில்லை. மாற்றுக் கருத்து கூறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மாற்றுக் கருத்து கூறிய 5 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், மோடி அரசுக்கு மக்களிடையே கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை, தனது கைப்பாவையாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளாத அனைத்துக் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தி மக்களுக்குத் துரோகம் இழைக்கின்றது எடப்பாடி அரசு. தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்த எடப்பாடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்டோபர் 3-ம் தேதி அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement