வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (27/09/2017)

கடைசி தொடர்பு:11:57 (27/09/2017)

'ஆஃப்கானிஸ்தானுக்கு உதவிகள் செய்வோம்; துருப்புகளை அனுப்ப மாட்டோம்..!' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


நிர்மலா சீத்தாராமன் ஜேம்ஸ் மேட்டிஸ்

''ஆஃப்கானிஸ்தான் நாட்டின் அடிப்படை கட்டமைப்புக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருகிறோம். அதற்கான நிதி உதவியை அதிகரிக்கவும் ஆர்வமுடன் இருக்கிறோம். ஆனால், அங்கு இந்தியத் துருப்புகளை அனுப்பும் திட்டம் இல்லை'' என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ், அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ளார். அவரை இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றார். இருவரும் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது, நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், ''ஆஃப்கானிஸ்தான், இந்தியாவின் நட்பு நாடு. அந்நாட்டு மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருகிறோம். கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் என்று அந்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படையான உதவிகளைச் செய்துவருகிறோம். அந்த உதவிகளை இன்னும் அதிகரிக்கவும் இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால், அந்நாட்டுக்கு இந்தியத் துருப்புகளை அனுப்பும் திட்டம் இல்லை'' என்றார்.

சீனா பற்றி எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், ''உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் பிரச்னைகளைப் பேச்சுவார்த்தைகள்மூலம் தீர்த்துக்கொள்ள விரும்புகிறோம். அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும்போது, இரு நாட்டு வீரர்களும் நிறையக் கற்றுக்கொள்ள முடியும்' என்றார். அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் பேசுகையில், ''அமைதி, முன்னேற்றம் மற்றும் தீவிரவாதத்தை ஒழிப்பது போன்றவற்றில் இந்தியாவோடு இணைந்து செயல்படுவதில் ஆர்வமுடன் இருக்கிறோம். பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் பயனுள்ளதாக இருந்தது''என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க