வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (29/09/2017)

கடைசி தொடர்பு:19:20 (29/09/2017)

பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவில் உள் இடஒதுக்கீடு ஏன் அவசியம்?! சொல்கிறார்கள் பெண் செயற்பாட்டாளர்கள் #WomenReservationBill

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா 2010 இல் மாநிலங்களவையில் நிறைவேறியபோது

“பாதி முடியைக் கத்தரித்துக்கொண்ட பெண்கள் (பர்காத்தி) எங்களது பிரச்னைகளைப் பேசுவார்களா?” என நாடாளுமன்றத்தின் மைய அவையில் சரத்யாதவ் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியினால் தகித்தது நாடாளுமன்றம். 

1997 ஜூன் மாதம் மக்களவையில் சரத் யாதவ் எழுப்பிய இந்தக் கேள்விக்கு உரிய பதில் இப்போதுவரை கிடைக்கவில்லை. விஷயம் இதுதான்... 1996-ம் ஆண்டு, பிரதமர் தேவகவுடா தலைமையிலான மத்திய அரசு, மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவைச் சமர்ப்பித்தது. அதுபற்றிய விவாதம் அவைக்கு வந்தபோதுதான், சர்ச்சைக்குரிய இந்தக் கேள்வியை எழுப்பினார் சரத் யாதவ்.

சரத் யாதவின் அந்தக் கேள்வி, பிற்போக்குத்தனம் பூசப்பட்ட, மிக முற்போக்கான கேள்வி என்பதை இந்தியா அப்போது உணர்ந்துகொள்ளவில்லை. பெண் அரசியல்வாதிகளிடமும் முற்போக்கு சமூக செயற்பாட்டாளர்களிடமும் சரத் யாதவுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால், சரத் யாதவுக்கு ஆதரவாக பீகாரிலிருந்து லாலுவின் குரல் ஒலித்தது. அவரும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை, 'இது சமூக நீதியையும் சிறுபான்மையினரையும் நெறிக்கும் செயல்' என்றார். இதில் சமூக நீதி எங்கே நெறிக்கப்படுகிறது? பெண்ணுரிமைதானே காக்கப்படுகிறது என்று இந்தியா குழம்பித் திரிந்தது. உருப்படியான தெளிவும் ஏற்படவில்லை; சிக்கலும் தீர்ந்தபாடில்லை.

சரியாக ஒரு வருடம் கழித்து, பன்னிரண்டாவது மக்களவை கூடியது. அப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவினை சபாநாயகரிடமிருந்து பிடுங்கி கிழித்தெறிந்தார் சுரேந்திர பிரசாத் யாதவ். இத்தனை சர்ச்சைகளைச் சுமந்த, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, ராஜீவ் காந்தியின் கனவுத் திட்டம். அவர் பிரதமராக இருந்தபோதுதான், இதுகுறித்து முதன்முதலாக விவாதிக்கப்பட்டது. எனவே, இதனை காங்கிரஸ் முழுமையாக ஆதரிக்கும் என்று நினைத்து, வாஜ்பாய் அரசு 1998-ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்தது. ஆனால், விவகாரம் பூமராங் ஆனது. காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி காலத்தில் விவாதிக்கப்பட்ட விஷயத்தை, வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, காங்கிரஸில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்களே எதிர்த்தனர்.

பிறகு 2005-ம் ஆண்டு, இந்த மசோதாவுக்கு முழுமையான ஒத்துழைப்புத் தருவதாக பி.ஜே.பி அறிவித்தபோது, பி.ஜே.பி-யைச் சேர்ந்த உமா பாரதி அதை எதிர்த்தார். 1998 ஜூலை 13-ம் தேதி இந்த மசோதா நிறைவேறாமல் போனதற்கு லாலு பிரசாத் யாதவும் முலாயம் சிங் யாதவும்தான் காரணம். அவர்கள் மிகத் திறமையாக, காங்கிரசில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்... குறிப்பாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசி, அந்த மசோதாவை நிறைவேறாமல் செய்தனர். ஆனால், இவர்களை வெறும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த, பெண்களுக்கு எதிரான தலைவர்கள் என்று சுருக்கிப் பார்க்க முடியாது. அவர்கள் தங்கள் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கோரினார்கள் என்றுதான் கருத வேண்டும். ஏனென்றால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து நாடாளுமன்ற குழு அறிக்கை சமர்ப்பித்தபோது, அதில் மிக முக்கியமான பரிந்துரை ஒன்று வெட்டித் தூக்கப்பட்டிருந்தது. அதைத்தான் சரத் யாதவ், லல்லு பிரசாத் போன்றவர்கள் எதிர்த்தனர். 'பெண்களுக்கான 33 சதவிகிதத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடி, இஸ்லாமியப் பெண்களுக்கு தனியாக உள் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்' என்று பரிந்துரைதான் நீக்கப்பட்டிருந்தது.

பெண்களுக்கான இடஒதுக்கீடு கிடைப்பதே பெரிய மாற்றம். அதற்குள் உள்இடஒதுக்கீடா என்று கேட்பவர்களுக்கு விவகாரத்தின் விஷமம் சரியாகப் புரியாது. திராவிட இயக்கங்களின் சீர்திருத்தங்களுக்குட்பட்ட தமிழகம், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா தவிர்த்து, மற்ற மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்துக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அந்தக் குறைவான எண்ணிக்கையும் முழுமையாக ஆக்கிரமித்து இருப்பவர்கள் உயர் சாதி பெண் அரசியல்வாதிகளே என நாடாளுமன்றத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. உதாரணமாக, நடாளுமன்றத்தில் (ஆண்-பெண் இருபாலரும் சேர்த்து) 1989-க்கு முன்பு பிற்படுத்தப்பட்டவர்கள் 11 சதவிகிதம் இருந்தனர். அது 1989-க்குப் பிறகு 21 சதவிகிதமாக அதிகரித்தது. 2004-ல் 26 சதவிகிதமாக உயர்ந்தது. ஆனாலும், கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் 18 முதல் 20 சதவிகிதமாக குறுகத் தொடங்கிவிட்டது. அதேநேரத்தில், உயர் சாதி வகுப்பைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் 43 முதல் 44.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

 

அரசியல் ஆய்வாளர்கள் கிருஸ்தஃப் ஜாஃப்ரீலாட், கில்லெஸ் வெர்னியஸ் ஆகியோரின் இந்த ஆய்வு முடிவு, 'மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்ட 10 வருடங்களுக்குப் பிறகுதான், பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல் எழுச்சி ஏறுமுகத்தில் இருந்தது' என்பதை புள்ளிவிபரங்களுடன் தெரியப்படுத்துகிறது. ஆனால், அந்த எழுச்சி கடந்த இரண்டு தேர்தல்களில் இறங்குமுகமாக இருப்பதையும் அதே ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 2014 தேர்தல் முடிவில் வெறும் 4 சதவிகிதத்துக்கும் குறைவான இஸ்லாமியர்களே நாடாளுமன்றப் பிரதிநித்துவம் பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவம் என்பது அதிகபட்சகமாக யாதவ்களின் பிரதிநிதித்துவமாக மட்டுமே உள்ளது. குறிப்பாக, நிதிஷ்குமாரின் (ஐக்கிய) ஜனதா தல், முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாதி கட்சியின் முன்னால் தலைவர்), லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தல் என்று மூன்று பெரிய கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் யாதவ்களாக இருப்பதாலும், அந்தப் பகுதியில் யாதவ்களின் மக்கள்தொகை அதிகம் என்பதாலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தற்போதைய மோடி அமைச்சரவையில் 13 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களும், 6 சதவிகிதம் பழங்குடிகளும், 3 சதவிகிதம் தலித்துகளும் இடம்பெற்றுள்ளனர். மற்றவர்கள் உயர் சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

இப்படிச் சம அளவில் பிரதிநித்துவம் இல்லாத நிலையில், ஒரு பிற்படுத்தப்பட்ட/ ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஆணுக்குப் பதிலாக, ஓர் உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்ணை நிறுத்துவது, இருக்கும் மிச்சசொச்ச சமூக நீதியையும் அடித்து நொறுக்கும் சூழ்ச்சி என்பதே உள் இடஒதுக்கீடு கேட்பவர்களின் வாதமாக இருக்கிறது. அம்பேத்கர் இதை அப்போதே உணர்ந்ததால்தான், 'இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 16-ல், நான்காம் விதியில் கல்வியிலும், சமூகத்திலும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், அட்டவணை சாதியினருக்கும், பழங்குடியினருக்கும் வேலைவாய்ப்பில் வாய்ப்பளிக்க வேண்டும்' என்ற சட்டத்தில், பெண்களையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது கடுமையாக எதிர்த்துத் தடுத்தார்.

நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் என்பவருக்கான பணிகள் மிகவும் அதிகம். பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டும்; நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் பேச வேண்டும்; எதிர்க் கட்சிகளைச் சமாளிக்க வேண்டும் என்கிறபோது அதற்கொரு ஆளுமை தேவை. அந்த ஆளுமையைப் பெறுவது காலம் காலமாக அரசியலில் கோலோச்சும் பெரிய தலைவர்களின் பெண் வாரிசுகளைத் தவிர, சாதாரண குடும்பங்களில் இருக்கும் பெண்களுக்கு இன்றும் கிட்டவில்லை. வாய்ப்புள்ள குடும்பங்களும் தங்களின் பெண்களை அரசியலில் ஈடுபடுவதை 99 சதவிகிதம் விரும்புவதில்லை. இப்படிப்பட்ட சூழலில், உள் இடஒதுக்கீடு இல்லாத, 33 சதவிகித ஒதுக்கீடு என்பது, இயல்பாகக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னிலையில் இருக்கும் உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கே மொத்தமாகச் சென்றுசேரும். அதில், இருவித கருத்துகளுக்கு இடமில்லை.

தமிழகம், கர்நாடகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா தவிர்த்து, மற்ற மாநிலங்களில் பெண்களின் கல்வி விகிதம்... குறிப்பாக, கிராமப்புறப் பெண்களின் கல்வி விகிதம் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. சில வட இந்திய மாநிலங்கள் மொத்தமாகவே இன்னும் 60 சதவிகித கல்வி அறிவையே எட்டவில்லை. ஜார்க்கண்ட் மாநிலம் 50 சதவிகிதத்தையே தொடவில்லை எனும்போது, அந்தப் பெண்களை யார் பிரதிநிதித்துவப்படுத்துவது என்கிற கேள்வி எழுகிறது. அதனால்தான், கழிப்பறைக் கட்டியதால் வெட்டப்பட்ட பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணிபோல, வேறெந்த பஞ்சாயத்து தலைவராலும் ‘கழிப்பறை பிரச்சனை’ குறித்துச் சிந்திக்க முடியவில்லை. மூணாறு தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒருங்கிணைத்த கோமதியால்தானே அவர்களுடைய பிரச்னைகள் பற்றிப் பேசமுடியும்? அதனால், எளிய மக்களின் பிரச்னைகளையும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களின் பிரச்னைகளையும் பிரதிநிதித்துவப்படுத்த 33 சதவிகிதத்துக்குள் இடஒதுக்கீடும் காலத்தின் தேவை. ஏனென்றால், சமூக நீதி என்பது சவலைப் பிள்ளையாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அதைச் சமூக நீதி என்று சொல்லவும் முடியாது.

இன்றைய நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக எம்பி கனிமொழியும், 2010-ல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற பிரதமர் மோடியை வலியுறுத்தி இருக்கிறார்கள். இதுபற்றியும், உள் இடஒதுக்கீடு பற்றிய கோரிக்கையைப் பற்றியும் கட்சிகள் மற்றும் இயக்கங்களில் இருக்கும் பெண்களின் கருத்துகளைக் கேட்டோம்.

அருள்மொழி, திராவிடர் கழகம்:

''மகளிருக்கான இடஒதுக்கீடு எந்தெந்த கரணங்களுக்காக கோருகிறோமோ, அதே காரணங்கள் உள் இடஒதுக்கீடுக்கும் இருக்கிறது. இன்றைக்கு உள் இடஒதுக்கீடு காரணமாகவே இந்த மசோதாஅருள்மொழி தள்ளிப்போகிறது என்று சொல்பவர்கள், நாளைக்கு உள் இடஒதுக்கீடு குறித்து தனியாகப் பேசி முடிவெடுப்பார்கள் என்று எப்படி நம்புவது? இயல்பாகவே, இதுபோன்ற நிலையில் யார் ஏற்கெனவே முன்னேறி இருக்கிறார்களோ அவர்களே அந்த இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள் அதிகம். அதில் வாய்ப்பற்றவர்களை உள்ளே கொண்டுவர வேண்டும் என்ற பரந்த நோக்கம் இல்லாமல்தான் இந்த சாதிய சமூகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் செயல்படுகிறார்கள்; ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அப்படி இருக்கும் நேரத்தில் இந்தச் சட்டம் வருமாயின், பிற்படுத்தப்பட்ட/ ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு விகிதாச்சாரம் கிடைக்காது. எனவே, இப்போதே உள் இடஒதுக்கீட்டுக்கும் சேர்த்தே அழுத்தம் கொடுப்பது சரியாக இருக்கும்.''

குஷ்பு, காங்கிரஸ்:

''மொத்தமாக பெண்களுக்காக இடஒதுக்கீடு வேண்டும் என்றுதான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே தலித்துகளுக்கு தனியான இடஒதுக்கீடு இருக்கிறது. சிறுபான்மையினருக்கு குஷ்புஇருக்கிறது. ஏற்கெனவே, தனித் தொகுதிகள் இருக்கும்போது, இதிலும் தனியாகப் பிரிவு வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரு உள்பிரிவு வந்தால், அடுத்தடுத்து உள்பிரிவுகள் நீண்டுகொண்டே செல்லும். 33% இடஒதுக்கீடு நிறைவேறினால், அதிலேயே அனைத்துப் பெண்களும் அடங்குவர்.''

பால பாரதி, மாக்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்:

பாலபாரதி''ஆண் - பெண் என்று வரும்போது, மக்கள்தொகையில் கிட்டத்தட்ட சரிசமமாக இருக்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் அது இல்லை. எனவே, அந்தச் சட்டத்தை பெண்களுக்காக நிறைவேற்ற வேண்டும். அதன்பின், நாடாளுமன்றத்தில் மீண்டும் உள் இடஒதுக்கீடு குறித்துப் பேசலாம். இவர்கள் உள் இடஒதுக்கீடு கேட்பதே, இந்த மசோதா நிறைவேறக்கூடாது என்ற உள்நோக்கத்தில்தான். பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது அக்கறைகொண்ட கட்சிகள், அந்தப் பெண்களை தேர்தல்களில் நிறுத்த வேண்டியதுதானே?''

ஓவியா, சமூக செயற்பாட்டாளர்:

''மகளிர் இடஒதுக்கீடு விஷயத்தில் உள் இடஒதுக்கீடு என்ற கோரிக்கைக்கு எதிராக நானே பலமுறை பேசியிருக்கிறேன். என்னுடைய இத்தனை வருட அரசியல் களத்தில் முதன்முதலாக என் ஓவியாநிலைப்பாட்டினை மாற்றிக்கொள்கிறேன். எங்கள் பிள்ளை மருத்துவராகவே முடியாது என்கிறபோது, எப்படி எம்பி ஆக முடியும்? கட்சிகள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண்களை நிறுத்த வேண்டும் என்பதும் உண்மைதான். அதுகுறித்து அவர்களிடம் விவாதங்களை நடத்த வேண்டும். ஆனால், அதனை ஒரு பிரச்சனையாக இழுக்க விரும்பவில்லை. இன்றைக்குக் கட்சிகளில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வரும் பெண் ஆளுமைகளே பெரிதளவில் இல்லாதபோது, இந்த மசோதா நிறைவேறினால், கட்டாயம் உயர் ஜாதிப் பெண்களுக்கு பயன்படும் சட்டமாக மாறிப்போகும். உள் இடஒதுக்கீடு என்ற ஒன்று வந்தால், கட்டாயத்தின் பேரிலாவது அந்தச் சமூகங்களிலிருந்து வரும் பெண் ஆளுமைகளைக் கட்சிகள் வளர்த்தெடுக்கும்.''

உமா தேவி, பாடலாசிரியர்:

உமாதேவி''முதலில் 33% இட ஒதுக்கீடு என்பதே தவறு. 50% சதவிகிதமாக இருக்க வேண்டும். அதிலும் உள் இடஒதுக்கீடு அவசியமாக இருக்கிறது. இன்றைக்கும் எல்லாப் பெண்களும் படித்துவிடவில்லை. எல்லாப் பெண்களும் வேலைக்குப் போய்விடவில்லை. இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்றபோது, அண்ணல் அம்பேத்கர் இங்கிருக்கும் சாதிய கொடுமைகள் பற்றி பேசினார். அவரை ஒரு தேசத் துரோகியாக சித்தரித்தார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு இந்த உள் முரண்களைப் பார்த்துக்கொள்ளலாம் என்றார்கள். ஆனால், என்ன ஆனது? இன்றும் இந்த நாட்டில் ஜாதிய கொடுமைகள் மாறவில்லை. எனவே, முதலில் இது; பிறகு அது என்பது நடைமுறையில் தோற்றுப்போன ஒரு கருத்தாக்கம்.''

சல்மா, திமுக:

''மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தள்ளிப்போடவே உள் இடஒதுக்கீடு குறித்த விவாதம் எழுப்பப்படுகிறது. முதலில், மசோதாவை நிறைவேற்றிவிட்டு அதன்பின் உள் இடஒதுக்கீடு குறித்த குழுசல்மா அமைத்து, அதனை முடிவுச்செய்யலாம். அதனுள் மாற்றங்களை ஏற்படுத்தலாம். எது உடனடித் தேவையோ அதனை முதலில் செய்ய வேண்டும். அதன்பின் செயல்கள் அனிச்சையா நடைபெறும். இந்த மசோதாவை நிறைவேற்றாவிட்டால், எங்களது கட்சிக்குள் 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவோம் என்றெல்லாம் அன்றைக்குப் பேசிய பாஜக, இன்றைக்குப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறது. ஒருவேளை இந்த மசோதாவினை நிறைவேற்றினால், இறங்குமுகத்தில் இருக்கும் பாஜகவின் பெயர், மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, இதனை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.''

தமிழினி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநில செயலாளர்:

தமிழினி''இந்தச் சமூகம் ஆணாகவும் பெண்ணாகவும் பிரிந்திருக்கும் வேலையில், ஜாதியாகவும் பிளவுபட்டு கிடக்கிறது. நானும் ஆரம்பத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறினால் போதும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், காலப்போக்கில் என்னுடைய புரிதல் மாறி இருக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது, உள் இடஒதுக்கீடுடன் சேர்த்தே நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், கட்சிகள் முடிவெடுக்கக்கூடிய பொறுப்புகளில் பெண்களை நியமிக்க வேண்டும். கட்சிகளே 33% இடத்தைப் பெண்களுக்குக் கொடுத்து வளர்த்தெடுக்க வேண்டும்.

 


டிரெண்டிங் @ விகடன்