"நதிநீர் இணைப்புப் பெருமுதலாளிகளுக்கானது" - பிரதமரைச் சாடும் மேதா பட்கர் | "River water connection is for only large businessman" slams Medha Patkar

வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (29/09/2017)

கடைசி தொடர்பு:18:33 (29/09/2017)

"நதிநீர் இணைப்புப் பெருமுதலாளிகளுக்கானது" - பிரதமரைச் சாடும் மேதா பட்கர்

மோடி

த்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, ''இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அரசின் நீண்டநாள் திட்டமான தேசிய நதிநீர் இணைப்புக்கான பணிகள் தொடங்கும்'' என்று அண்மையில் அறிவித்திருந்தார். இதற்கிடையே குஜராத்தில் நர்மதா ஆற்றின் மீது சர்தார் சரோவர் அணை கட்டப்படுவதற்கு எதிராக 32 ஆண்டுகாலமாகப் போராடிய மேதா பட்கர் தற்போது தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு எதிராகத் தனது அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

சர்தார் சரோவர் பெருமுதலாளிகளுக்கானது!

நதிநீர் இணைப்புத் தொடர்பாக அண்மையில் பேசிய அவர், ”20,000 கோடி ரூபாய் செலவில் அரசாங்கம் திட்டமிட்டுள்ள இந்த நீர்வழி இணைப்புத் திட்டம், லட்சக்கணக்கானப் பொதுமக்களின் வாழ்வினைப் பணயம்வைத்து, பெரு முதலாளித்துவத்தின் கனவுகளை அரசே நிறைவேற்றும் திட்டம்தான் இது. ஆறுகளை வாழ்வாதாரமாகக் கொண்டுதான் மனிதர்களின் வாழ்க்கை ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. ஆறுகளுக்கும் அதைச் சார்ந்து வாழும் பொதுமக்களுக்கும் எப்போதுமே உணர்வு ரீதியான தொடர்பு உண்டு. ஆனால், அரசு தன்னை அண்டியிருக்கும் பெரும் தொழில் வணிகர்களின் லாபத்துக்காக இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறது. 'நீர்வழிகளை மீட்கவுள்ளேன்' என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் பயணம் மேற்கொண்டிருப்பதும் வணிகரீதியிலான சுரண்டலுக்காகத்தான். நதிநீர் இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு அமைச்சர் நிதின் கட்காரி, சூழலியலாளர்களுடன் இது தொடர்பாக விவாதிக்க வேண்டியது அவசியம்” என்றார்.

உண்மையில் மக்களுக்கானதா?

மேதா, சர்தார் சரோவர் அணைக்கு எதிராகப் போராடி வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாள் அன்று சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆனால், அவர் அர்பணித்துள்ளது முட்டாள்தனமானது என்று மேதா கருத்து கூறியுள்ளார்.  ''நீர்ப்போக்குவரத்து பெரும்பாலும் தொழில் துறைக்கு மட்டுமே தற்போது பயன்படப் போகிறது. இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு இன்னும் புனர்வாழ்வுக்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது, நாட்டுக்கு அர்ப்பணிப்பது யாருடைய பயனுக்காக” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேதா கூறியதுபோல, நர்மதா அணைத்திட்டத்தில் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்த மகாராஷ்டிர மாநிலமும் மத்தியப் பிரதேசமும் அதிலிருந்து ஒரு ரூபாய்கூட லாபம் அடையவில்லை. மகாராஷ்டிராவுக்குத் தரப்படுவதாகச் சொல்லப்பட்ட மின்சாரமும் இன்னும் அவர்களுக்குச் சென்று சேர்ந்தபாடில்லை. குஜராத்தில் அணையை நிரப்ப வேண்டும் என்று நர்மதை திசை திருப்பப்பட்டதால் மத்தியப் பிரதேசத்தில் 37 மாவட்டங்களும் மகாராஷ்டிராவில் 17 மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு மாநிலங்களும் தற்போது குஜராத்திடம் 1,800 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை கோரியுள்ளது. 

மேதா பட்கர்

நீரில் மூழ்கிய 244 கிராமங்கள்!

13 மீட்டர் உயரமுள்ள அணை மொத்தம் 244 கிராமங்களை மூழ்கடித்துவிட்டுத் தண்ணீரைத் தேக்கிவைத்துள்ளது. ஆனால், இந்த நீரை ஒரு விவசாயிகூடப் பாசனத்துக்காக உபயோகப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில்தான், குஜராத்தில் நடக்கப்போகும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் சர்தார் சரோவர் அணையைப் பற்றி விவரிக்கும் ஒரு நிகழ்வும் நடைபெறவிருக்கிறது. விவசாயிகளுக்கு விளக்கம் கொடுக்க வராத அரசு முதலீட்டாளர்களுக்கு விளக்கம் கொடுக்கப் போகிறது. ''மோடியும் அவரது நண்பர்களும் சர்தார் சரோவர் அணையில் மூழ்கிய 382 கோயில்களைக் கருத்தில் கொண்டாவது இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்திருக்கலாம்" என்று முரண்நகையாகக் கூறி முடித்தார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்