வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (02/10/2017)

கடைசி தொடர்பு:11:20 (02/10/2017)

காஷ்மீரை இந்தியா உணர்வுபூர்வமாக இழந்துவருகிறது..! - யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

காஷ்மீரை இந்தியா உணர்வுபூர்வமாக இழந்துவருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 


வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. பா.ஜ.க-வின் மூத்த தலைவரான அவர், பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி தொடர்பாக அரசுக்கு எதிராகப் பேசி வருகிறார். மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் தவறான நடவடிக்கை காரணமாக இந்தியப் பொருளாதார நிலை மோசமாக இருப்பதாக நேரடியாகக் குற்றம்சாட்டிவந்தார். இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சிப் பேட்டியில் பேசியவர், 'காஷ்மீரில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. காஷ்மீரை இந்தியா உணர்வுபூர்வமாக இழந்துவருகிறது. காஷ்மீர் மக்களும் இந்திய அரசின் மீது நம்பிக்கையை இழந்துவருகின்றனர். காஷ்மீர் பிரச்னை குறித்து பிரதமரிடம் பேசுவதற்கு நான் 10 மாதங்களுக்கு முன்பே அனுமதி கேட்டிருந்தேன். ஆனால், எனக்கு இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை. அதனால், நான் மிகவும் புண்பட்டுள்ளேன். சொந்தக் கட்சியினராலேயே நான் இழிவுபடுத்தப்பட்டேன். என் மகனான மத்திய அமைச்சர் ஜெயந்த் உள்ளிட்ட சொந்தக் கட்சியினராலேயே நான் தொடர்ந்து ஓரம்கட்டப்பட்டுள்ளேன். பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டால் மட்டும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும்' என்றார்.