ஒரே நாளில் காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; கண்காணிப்புப் பணிகள் தீவிரம் | Infiltration bid foiled in Kashmir

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (02/10/2017)

கடைசி தொடர்பு:07:43 (03/10/2017)

ஒரே நாளில் காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; கண்காணிப்புப் பணிகள் தீவிரம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில், இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். 

இந்திய எல்லை

இந்திய- பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் அடிக்கடி ஊடுருவும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களாக பாகிஸ்தான் ராணுவமும் இந்தியப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று காலை பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் மூன்று இந்திய சிறுவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், எட்டு பொதுமக்கள் காயமடைந்தனர். 

இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இந்நிலையில், இன்று மதியம் பரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் கைபற்றப்பட்டன. 

இந்நிலையில், தாங்தார் பாகுதியில் ஊடுருவ முயன்ற மேலும் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்தும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் நாச வேலையில் ஈடுபட ஊடுருவுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.