வெளியிடப்பட்ட நேரம்: 21:17 (02/10/2017)

கடைசி தொடர்பு:13:54 (03/10/2017)

ராகுல் காந்தியின் தலைமை காங்கிரஸுக்குக் ‘கை’கொடுக்குமா?

ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி விரைவில் ஏற்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று, மூன்று ஆண்டுகள் கடந்து நான்காவது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 

பிரதமர் மோடியின் பி.ஜே.பி ஆட்சியில் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு, ரயில்வே துறைக்கான தனி பட்ஜெட்டை முடிவுக்குக் கொண்டுவந்து பொது பட்ஜெட்டுடன் சேர்த்தது, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை படிப்படியாகக் குறைத்து வருவது, பெட்ரோலியப் பொருள்களின் விலையை அன்றாடம் நிர்ணயிப்பது போன்ற ஏராளமான நடவடிக்கைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்காலத்தில் தெரியவரும் என்று பி.ஜே.பி. தரப்பிலும், உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறைந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் தரப்பிலும் விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்தாலும், நடுத்தர வர்க்கத்தினர், ஏழை மக்கள் பெரிய அளவில் பலன் அடைந்துள்ளார்களா என்பதை இப்போதைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கணித்து விட முடியாது.

அமித் ஷாஇந்தச் சூழ்நிலையில், பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா, எதிர்வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இப்போதே பல்வேறு மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து, 'அலர்ட்' செய்துவருகிறார். அந்தந்த மாநிலங்களில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றியும் வருகிறார். அடுத்த சில மாதங்களில் கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலங்களிலும் வெற்றியைப் பதிவுசெய்யும் நோக்கில், பி.ஜே.பி. இப்போதே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குஜராத்தில் தற்போது ஆட்சியில் உள்ள பி.ஜே.பி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்ற கேள்விக்குறி, அந்த மாநில பி.ஜே.பி-யினரிடமே ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த பி.ஜே.பி., முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் மீதான லஞ்ச, ஊழல் புகார்களால் கடந்த முறை தோல்வியடைந்தது. காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்து வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், கர்நாடக மாநிலத்தில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்புடனும் பி.ஜே.பி. இப்போதே யுக்திகளை வகுக்கத் தொடங்கி விட்டது.

இதற்கிடையே, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் நாடு முழுவதும் பி.ஜே.பி. மீதான அதிருப்தியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள காங்கிரஸ் கட்சியும் களம் இறங்கத் தயாராகி விட்டது. 

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் இருந்து சற்றே ஒதுங்கியுள்ளார். அதற்குக் காரணம் அவரின் உடல்நிலைதான். சில மாதங்களுக்கு முன் வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்ட சோனியா காந்தி, பெரும்பாலும் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் அன்றாட நடவடிக்கைகளை சோனியாவின் புதல்வரும், கட்சியின் துணைத்தலைவருமான ராகுல் காந்தியே கவனித்துக்கொள்கிறார்.

இந்நிலையில், விரைவில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்றும், அதில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவரான சந்தீப் தீக்சித் அளித்த பேட்டி ஒன்றில், "காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அவர் தேர்வு செய்யப்படுவார். அதற்கான தேதி எப்போது என்பது உறுதிசெய்யப்படவில்லை. என்றாலும் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. வழக்கமான நடைமுறைகள் முடிந்ததும், கட்சியின் அடுத்த தலைவர் தேர்வுசெய்யப்படுவார். காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவருமே ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்ற மனநிலையிலேயே உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான ஷகீல் அகமதுவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான சச்சின் பைலட், "தீபாவளிப் பண்டிகைக்குப் பின் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார்" என்றார்.

நாடாளுமன்றத்துக்கு 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்றதும், சோனியா காந்தி பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதாலும், இந்தியக் குடியுரிமையை தாமதமாகவே பெற்றுள்ளார் என்பதாலும், அவர் பிரதமர் ஆகப் பொறுப்பேற்பதில் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு தெரிவிப்பதாக, அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார். இதையடுத்து, மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றார். 2009-ம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றபோது, சோனியாவுக்குப் பதிலாக ராகுல் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், மன்மோகன் சிங் அமைச்சரவையில்கூட ராகுல் இடம்பெறவில்லை.

எனவே, முதலில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, நாடு முழுவதும் கட்சி இழந்துவிட்ட செல்வாக்கை அதிகரித்த பின்னரே பிரதமர் பதவி ஏற்பது என்று ராகுல் காந்தி நினைத்தாரோ என்னவோ, தற்போது அவர் கட்சியின் தலைவர் பதவிக்கான அனைத்து சூழல்களும் உருவாகி உள்ளன. மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் திறம்பட அறிந்துகொண்டுள்ளார்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அடுத்து நடைபெறும் 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மத்தியில் ஆட்சியில் அமர்த்துவதற்கான பணிகளை கட்சியின் முக்கியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், அகில இந்திய அளவில் செய்தித்தொடர்பாளர்கள் என பல்வேறு நிர்வாகிகளும் இப்போதே தீவிரமாகச் செயல்படத் தொடங்கி விட்டனர்.

பிரியங்கா - ராகுல்சோனியா காந்திக்கு முழுவதுமாக ஓய்வு கொடுத்து விட்டு, ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக தேர்வு செய்வதோடு மட்டுமல்லாமல், சோனியாவின் மகளும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தியையும் தீவிர அரசியலில் களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை, தாய் சோனியா, சகோதரர் ராகுல் காந்திக்காக மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்து வந்த பிரியங்கா, தாமே நேரடி அரசியல் களத்தில் இறங்க சம்மதம் தெரிவித்து விட்டதாக காங்கிரஸ் மேலிட வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரியங்கா வதேராவுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.

'வாரிசு அரசியல்' என்ற குற்றச்சாட்டை பி.ஜே.பி. முன்வைத்தாலும், அதை முறியடித்து, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் செயல்பாடுகளை முன்னிறுத்தியும், மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது நாடு அடைந்த வளர்ச்சியை மக்கள் முன் எடுத்துரைத்தும் பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர்களும், ராகுல் காந்தியும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே பிரசாரம் அமையும் என்கிறார்கள் டெல்லி காங்கிரஸார். தவிர, பிரியங்காவும் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரியவந்துள்ளது.

பி.ஜே.பி-யின் தோல்விகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி வகுத்து வரும் யுக்திகள், ராகுல் காந்தி தலைமைப்பொறுப்புக்கு வருவது போன்றவை 2019 தேர்தலில் காங்கிரஸின் 'கை'-யை ஓங்கச் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்