வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (04/10/2017)

கடைசி தொடர்பு:18:35 (04/10/2017)

முறுக்கு மீசை வைத்தால் தாக்குதல் நடத்தும் முகமூடிக் கும்பல்!

குஜராத்தில் முறுக்கு மீசை வைத்துள்ள பட்டியல் இன இளைஞர்கள்மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் தலித் இளைஞர்கள்

செப்டம்பர் 25-ம் தேதி மீசையை முறுக்கி வைத்ததாக, பியூஸ் பார்மர் என்ற இளைஞர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. செப்டம்பர் 30-ம் தேதி குர்னால் மகாரியா என்பவரைத்  தாக்கினர். நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த டியாகன்ட் மிகாரியா என்ற 17 வயது இளைஞர்மீது தாக்குதல் தொடர்ந்தது. 

இந்த டியாகன்ட் ஏற்கெனவே தாக்கப்பட்ட பியூஸ் பார்மரின் சகோதரர் ஆவார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டியாகன்ட்டை பிளேடால் கீறியதாகவும் சொல்லப்படுகிறது காயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முறுக்கு மீசை வைத்திருக்கும் பட்டியல் இனத்தவர்கள்மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மீசை வைத்திருப்பவர்களைத் தாக்கியவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,  மீசையை முறுக்கிவிட்டவாறு புகைப்படம் எடுத்து 'மிஸ்டர் தலித்' என்று வாட்ஸ் அப்பில் புரோஃபைல் புகைப்படமாக வைத்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் இந்தப் புகைப்படங்கள் பரவி வருகின்றன.

குஜராத்தில் பட்டியல் இன மக்கள்மீது தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் இன மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க