Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜாமீனில் வந்த திலீப்... ஆதாரங்கள் கிடைக்காமல் திணறும் கேரள போலீஸ்!

dileep, திலீப்

85 நாள்களாக சிறைக்கம்பிகளை மாறி, மாறி எண்ணி முடித்துவிட்டு ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் மலையாள நடிகர் திலீப். ஒருநாள் கால்ஷீட் தராமல் இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் வறுத்தெடுத்த அவருக்கு இந்த 85 நாள்களின் ஒவ்வொரு மணித்துளிகளும் அவருக்கு ஒரு புதிய பாடத்தைக் கொடுத்திருக்கும். இயக்குநர் வினயன் முதல் மூத்த நடிகர் திலகன் வரை திலீப்பால் கட்டம் கட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை நிழலளவில் பல.

பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சிறைச் சென்று, ஜாமீன் பெற்றிருக்கும் நடிகர் திலீப்பின் பின்னணி அவரது படங்களைவிட திகில் நிறைந்தது. எதிர்த்துப் பேசினால் கால்ஷீட் கிடையாது, பிடிக்காத தயாரிப்பாளர் முன் சேரில் கால்நீட்டி உட்கார்ந்து பதில்சொல்லுவார், தன்னைப்பற்றி குற்றம் சுமத்தினால் திரை சங்கத்தையே இரண்டாக உடைப்பார், இது நடிகர் திலீப் பற்றிய எடுத்துக்காட்டுகளின் சுமார் ரகம்.

திலீப்பின் பின்னணி:

கொச்சி அருகேயுள்ள ‘ஆலுவா’தான் திலீப்புக்கு சொந்த ஊர். மிமிக்ரி, மேடை காமெடி நிகழ்ச்சி என சிறுவயதில் இருந்தே ஆர்வம் காட்டிய திலீப்பின் இயற்பெயர் கோபாலகிருஷ்ணன். எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பட்டம் முடித்தவர், 90-களில் உதவி இயக்குநராக மலையாள சினிமாவுக்குள் நுழைந்தார். 1992-ல் வெளியான ‘என்னோடு இஷ்டம் கொள்ளாமோ’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் . 1994-ல் வெளியான ‘மனதே கொட்டாரம்’ படத்தில் கதாநாயகன் ஆனார். அந்தப் படத்தில் அவருக்கு நடிகை குஷ்புதான் ஜோடி. அந்த கதாபாத்திரத்தின் பெயரான ‘திலீப்’ இவருடன் ஒட்டிக்கொண்டது.

பின்னர், இவரது சினிமா வாழ்க்கையில் ஏறுமுகம்தான். நடிப்பு, தயாரிப்பு, விநியோகம் என கொடிக்கட்டிப் பறந்த திலீப், மலையாள சூப்பர்ஸ்டார்களைவிட வேறு லெவலுக்குப் போனார். மலையாள சினிமா உலகில் திலீப் வைத்ததுதான் சட்டம் என்றானது. தொடர் சர்ச்சைகளும் அவரைச் சுற்றி, சுற்றி வட்டமடித்தன. வினயன், திலகன் போன்ற முக்கியப் புள்ளிகளையே ஓரம் கட்டிய திலீப்பின் வில்லப்பார்வையின் வீச்சு அதிகம். காதல் மனைவி மஞ்சு வாரியருடன் விவாகரத்து, நடிகை காவ்யா மாதவனுடன் மறுதிருமணம் என வலம் வந்த திலீப்பின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டது இந்த விவகாரம். பிப்ரவரி மாதம் 17-ம் தேதி கொச்சிக்கு காரில் செல்லும்போது கடத்தப்பட்ட நடிகை, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அன்றிலிருந்து திலீப்பின் பெயர் தலைப்புச் செய்தியாகிப்போனது.   

dileep, திலீப்

இதுதொடர்பாக, மலையாள சினிமா வட்டாரத்தில் இருந்து பேசிய நபர் ஒருவர், “நடிகர் திலீப்புக்கு இப்போது நிபந்தனை ஜாமீன்தான் கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் 90 நாள்களுக்குள் போலீஸ்தரப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் விசாரணையில் பெரிய அளவில் முன்னேற்றமே இல்லை. திலீப்புக்கு எதிராக ஆதாரங்களைச் சேர்க்க அவர்கள் முயன்றுவருகிறார்களே தவிர, சரியான ஆதாரங்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. அவர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தால் திலீப்புக்கு ஜாமீன் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸார் தவறியதால் 85 நாள்களில் நிபந்தனை ஜாமீன் அளித்திருக்கிறது நீதிமன்றம்.

பல்சர் சுனிலால் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த மொபைல் வீடியோ ஆதாரம் கிடைக்கவில்லை. காவ்யா மாதவன் அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த மெமரி கார்டு பற்றிய விவரங்கள் முறையாகத் தெரிவிக்கப்படவேயில்லை. மேலும், பல்சர் சுனிலுடன் திலீப் இருந்த சி.சி.டி.வி ஆதாரங்கள், நேரடி ஆதாரங்கள் என எவையும் கைப்பற்றப்படவில்லை. தாக்குதலுக்கு உள்ளான அந்த நடிகை முன்னர் அளித்த பேட்டியில்கூட, திலீப்புக்கும், இந்த விவகாரத்துக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது என சொல்லவில்லை.   ‘எங்களுக்குள் பிரச்னை இருந்தது உண்மைதான்’, என முடித்துவிட்டார். இவை, எல்லாம் தற்போது திலீப்புக்கு ஆதரவான சூழலையே இங்கு ஏற்படுத்தி இருக்கிறது”, என பேசி முடித்துவிட்டு, ‘பெயர் வெளியிட வேண்டாமே’, எனக் கோரிக்கை வைத்தார்.

dileep, திலீப்

திலீப்புக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்ட போலீஸ் தரப்பு சற்று போராட வேண்டியிருக்கிறது. 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாதபோதே விமர்சனங்கள் எழத்தொடங்கிவிட்டன. நடிகையை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய பல்சர் சுனில், நடிகர் திலீப்பின் நண்பரான நாதிர்ஷாவுடன் பேசிய ஆதாரங்கள், திலீப்பின் உதவியாளர் அப்புண்ணியிடம் பேசிய ஆதாரங்கள் வடிவிலும் சற்று குழப்பங்கள் நீடிக்கின்றன.

திலீப்புக்கும், தாக்குதலுக்கு உள்ளான அந்த நடிகைக்கும் இருந்த முக்கியப் பிரச்னைகளாகக் கூறப்படுவது இரண்டுதான். திலீப் - காவ்யா மாதவன் பற்றிய விவரங்களை அவரது மனைவி மஞ்சு வாரியரிடம் தொடர்ந்து கூறிவந்தார் எனவும், திலீப்பிடம் இருந்து மஞ்சு விவாகரத்து பெறுவதற்கு காரணமாக இருந்ததால் அந்த நடிகை மீது திலீப்புக்கு கோபம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ரியல் எஸ்டேட் தொழிலில் திலீப்பும், பாலியல் தாக்குதலுக்கு உள்ளான அந்த நடிகையும் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறார்கள். அப்போது, திலீப்பின் சொத்துக்களில் பலவற்றின் பினாமியாக அந்த நடிகை இருந்திருக்கிறார் எனவும், மஞ்சு விவாகரத்துப் பெற்றதும்தான் பினாமியாக இருந்த சொத்துக்களை மஞ்சுவிடம் அளிக்க அந்த நடிகை முயன்றார் எனவும் கூறப்பட்டு வருகிறது. மேலும், மலையாள சினிமா உலகையே தன்வசப்படுத்தியிருந்த திலீப்புக்கு எதிராக அந்த நடிகை ‘கெத்தாக’ செயல்பட்டதும், திலீப்பை உச்சகட்ட ஈகோவுக்கு தள்ளியதாகவும் காரணத்தை அடுக்குகிறார்கள்.

“இதுபோன்ற காரணங்களால் பல்சர் சுனிலிடம், அந்த நடிகை தொடர்பான ‘அசைன்மென்ட்’ கொடுத்தது உண்மைதான். ஆனால், திலீப் சொன்னதுவேறு, பல்சர் சுனில் செய்ததுவேறு. பின்னர், திலீப்பிடம் இருந்து அதிகத்தொகையை பெறுவதற்காகவே பல்சர் சுனில் திட்டம் போட்டுள்ளான்”, என தெரிவிக்கிறார்கள். ஆனால், போலீஸ் விசாரணையின்போது திலீப்பும் சரி, காவ்யா மாதவனும் சரி பல்சர் சுனிலை தங்களுக்குத் தெரியாது. பரிச்சையமும் இல்லை என மறுத்திருக்கிறார்கள். போலீஸுக்கு இந்த வழக்கு இப்போது பெரும் சவாலாகவே மாறியிருக்கிறது. இவ்வழக்கில் உள்ள ‘லூப் ஹோல்’களை பிடித்து, வலுவான ஆதாரங்களைத் திரட்ட மெனக்கெட்டு வரும் போலீஸுக்கு திலீப் ஜாமீனில் வெளிவந்துவிட்டதால் சற்று அதிக அவகாசம் கிடைத்திருக்கிறது.

dileep, திலீப்

திலீப் சிறையில் இருந்த நேரம் எக்கச்சக்க வதந்திகள். லாலேட்டனுக்கும், மம்மூட்டிக்கும் சமமான களத்தில் இருந்த திலீப்பின் சினி மார்க்கெட் இனி அவ்வளவுதான் என பலரும் நினைத்திருக்கக் கூடும். ஆனால், அதில் ட்விஸ்ட் வைத்துவிட்டது திலீப் நடித்து வெளியாகியிருக்கும் ‘ராமலீலா’ திரைப்படம். இரண்டு மாதங்களுக்கு முன்னரே வெளியாகியிருக்க வேண்டிய ‘ராமலீலா’ கடந்த 28-ம் தேதி ரிலீஸானது. ‘திலீப் மீதான இமேஜ் காலி.. படம் படுதோல்வி அடையப்போகிறது’, என்ற விமர்சனங்களை மீறி பம்பர் ஹிட் அடித்திருக்கிறது ‘ராமலீலா’. வசூலை வாரிக்குவித்துவரும் இந்தப் படத்தை குடும்பம், குடும்பமாக பார்த்து வருகிறார்களாம். படத்தின் கதை என்ன தெரியுமா?.. தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்னையில் யாரோ மாட்டிவிட.. வழக்கு, சிறை அத்தியாயங்களுக்குப் பின்னர், தான் நல்லவன் என நிரூபித்து அனைத்துத் தடைகளையும் மீறி வெளிவருகிறாராம் கதாநாயகன் திலீப். ஆனால், ரீல் உலகம் வேறு.. ரியல் உலகம் வேறு என்பதை இந்த 85 நாள்கள் திலீப்புக்கு நன்கு கற்றுக்கொடுத்திருக்கும். நிஜ வாழ்க்கையில் திலீப் கதாநாயகன் இல்லை என்பது அவர் மனசாட்சிக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement