வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (05/10/2017)

கடைசி தொடர்பு:17:13 (05/10/2017)

மோடிக்கு மாற்றாக முன்னிறுத்தப்படுகிறாரா யோகி ஆதித்யநாத்?!

யோகி ஆதித்யநாத்

ரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் மோடிக்குப் பதிலாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. அதற்கான சூழல் என்னவென்பதைப் பார்ப்போம்....

கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் உள்ளார். இவரின் சொந்த ஊர் கன்னூர். இந்நிலையில், கேரள மாநிலத்தில் அண்மைக்காலமாக ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலர், வெவ்வேறு வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டனர்.

இந்தப் படுகொலைகளைக் கண்டித்த பி.ஜே.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 'மக்கள் பாதுகாப்பு பேரணி (ஜன ரக்‌ஷா யாத்திரை)' என்ற பெயரில் இரண்டுவாரம் நடைபெறவுள்ள பேரணியை பி.ஜே.பி. தொடங்கியுள்ளது.

கேரள மாநில பி.ஜே.பி. தலைவர் கும்மானம் ராஜசேகரன் தலைமையில் தொடங்கிய இரண்டுவார கால கண்டனப் பேரணியில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் கலந்து கொண்டு, கேரள அரசை கடுமையாகத் தாக்கிப் பேசினார். பேரணிக்கு மத்தியில், தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு ஒருபோதும் இடம் கிடையாது. கேரள மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, டெங்குவைக் கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளைச் செய்து தரவில்லை.

யோகி ஆதித்யநாத்

இதுபோன்ற தொற்றுநோய்கள் ஏற்படும்போது, நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை கேரள அரசு, உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பி.ஜே.பி-யின் கொள்கைகள் மற்றும் அரசியல்ரீதியான படுகொலை தொடர்பான விழிப்புஉணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கிலும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் இந்தப் பேரணி நடைபெறுகிறது. முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்" என்றார்.

கடவுளின் சொந்த மாநிலமாகக் கருதப்படும் கேரளாவில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதை ஏற்க முடியாது என்றும், இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே யோகி ஆதித்யநாத் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அம்மாநிலத்தில் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதத்தில் ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் 63 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இதனிடையே உத்தரப்பிரதேச மாநில சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் நீக்கப்பட்டது, அரசியல் கட்சிகள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச அரசு, ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளைப் பின்பற்றி வருவதாகவும், ஜனநாயக நெறிமுறைகளை மீறி முதல்வர் ஆதித்யநாத் செயல்பட்டு வருவதாகவும் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில்தான், நாட்டின் தென்கோடி மாநிலமான கேரளாவில் நடைபெற்ற பி.ஜே.பி. பேரணியில் யோகி ஆதித்ய நாத் கலந்துகொண்டுள்ளார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பி.ஜே.பி, குறிப்பிடத்தக்க தொகுதிகளைக் கைப்பற்றும்வகையிலான பணிகளில் அக்கட்சி இப்போதே ஈடுபடத் தொடங்கியுள்ளது.

கேரளாவில் பி.ஜே.பி. பேரணி உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பி.ஜே.பி. ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தான் பி.ஜே.பி-க்கு போதிய வாக்கு சதவிகிதம் இல்லாத நிலை உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் எப்படியும் தங்களுக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு பி.ஜே.பி. இப்போது யோகி ஆதித்யநாத்தை களமிறக்கி விட்டுள்ளதாகவே தெரிகிறது.

தவிர, ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்து உத்தரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத்துக்கு அண்மைக்காலமாக அந்த மாநிலத்திற்கு அப்பாற்பட்டு, முக்கியத்துவம் அளித்திருப்பதையும் இங்கே கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று நான்காவது ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் செல்வாக்கு மட்டுமே பி.ஜே.பி-யின் வெற்றிக்கு போதுமானதாக அமையாது என்று அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தெரிவித்திருந்தது.  

தவிர, நாடு முழுவதும் மோடி மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதாக, மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இதே நிலை நீடித்தால், மோடிக்கு செல்வாக்கு மேலும் சரியும் என்பது உறுதி. அதுபோன்ற சூழலில் பி.ஜே.பி. சார்பில் மோடியைத் தவிர வேறு ஒரு நபரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வேண்டிய கட்டாயமும் அக்கட்சிக்கு ஏற்படும். அப்படி ஏற்பட்டால், மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த, அல்லது நாடு முழுவதும் அடையாளப்படுத்தப்பட்ட ஒருவரையே பி.ஜே.பி. முன்னிறுத்த வேண்டி வரும். 

எனவே, மோடிக்கு மாற்றாக யோகி ஆதித்ய நாத்தை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்துவதன் மூலம், மோடிக்கு எதிரான அலையை சமாளித்து விடலாம் என்று பி.ஜே.பி. கருதக்கூடும். தவிர, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களும் யோகி ஆதித்யநாத்தை, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்றுக் கொள்வார்கள் என்பது பி.ஜே.பி.-யின் கணக்காக இருக்கலாம். எப்படி இருப்பினும் மோடிக்கு டஃப் சவால் கொடுக்கக்கூடியவராக ஆதித்யநாத் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். அதன் முன்னோட்டமாகவே, அவரை கேரளா போன்ற மாநிலத்தில் நடைபெறும் கண்டனப் பேரணியில் நட்சத்திர தலைவராக முன்னிறுத்துகிறார்களோ என்ற சந்தேகம் கேரள மக்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்