Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“மோடி ஐயா, மாணவர்களின் ஆராய்ச்சிக்காகப் பயிரிடப்பட்ட பருத்திப் பயிரையும் கவனிங்க!”

Chennai: 

புது சர்ச்சையில் நம் பிரதமர் மோடி இருக்கிறார். இரண்டு நாள் பயணமாக அக்டோபர் 7 மற்றும் 8-ம் தேதி தனது சொந்த மாநிலமான குஜராத் செல்லவிருக்கிறார். இந்த இரண்டு நாள் பயணத்தில், புதிதாகக் கட்டப்பட்ட நர்மதா அணையின் நீர் ‘பகட்ஹட்’ என்ற கிராமத்தில் வந்தடைவதற்கான கால்வாய் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், சூரத் நகரிலிருந்து பீகார் மாநிலத்துக்கான ரயில் பயணத்தை, கொடி அசைத்துத் தொடங்கிவைக்க இருக்கிறார். 

மோடி

இந்த நிகழ்ச்சிகளுக்கு வந்து செல்வதற்கு சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்ததில்தான் இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. பாரூச் மாவட்டத்தில் உள்ள வேளாண் கல்லூரியில் நரேந்திர மோடி வந்து இறங்குவதற்காக ஒரு ஏக்கர் அளவிலான நிலத்தில் ஹெலிபேடும், பொதுக்கூட்டத்துக்காகப் பத்து ஏக்கர் அளவிலான நிலத்தையும் வளைத்திருக்கிறார்கள்.

மழைக்காலப் பயிர் குறித்த ஆராய்ச்சி மையம், இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் மட்டும்தான் உள்ளன. இதில் ஒன்றுதான் பாரூச் மாவட்டத்தில் உள்ள வேளாண் கல்லூரியில் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தை, வேளாண் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சிப் பணிக்காகப் பயன்படுத்திவருகிறார்கள். இங்கு 28 வகையான பருத்திப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஆராய்ச்சிக்காகப் பருத்தியைப் பயிர் செய்திருக்கிறார்கள். ஆனால், மோடி வருகைக்காக இந்தப் பருத்திப் பயிர்களை அழித்து, ஹெலிபேடு அமைத்திருக்கிறார்கள். 

மாணவர்கள் ‘எங்களுடைய ஆராய்ச்சிக்கான பருத்திப் பயிரை அழிக்காதீர்கள்' என்று போராடி, எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். பாரூச் மாவட்ட நிர்வாகம், `பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பான பயணத்துக்கான கல்லூரிதான் சரியான இடம்’ என்று விளக்கம் சொல்லியுள்ளது.

Modi

இதுகுறித்து செய்தியாளர்கள் கல்லூரி முதல்வர் கந்திலால் பட்டேலிடம் கேட்டபோது “மாவட்ட ஆட்சித் தலைவர், `பிரதமரின் வருகைக்காக ஹெலிபேடு அமைக்கவும், நிகழ்ச்சிக்காகவும் எங்களுடைய கல்லூரியில் இடம் தேவை' எனக் கேட்டார். பிரதமரின் நிகழ்ச்சி என்பதால் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை" என்று சொல்லிவிட்டார். 

மாவட்ட நிர்வாகத்தில் கேட்டபோது “கல்லூரியின் நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று மட்டுமே ஒரு ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்தியுள்ளோம்'' என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், 40 ஏக்கர் பரப்பளவுகொண்ட கல்லூரி வளாகத்தில், பத்து ஏக்கர் நிலத்தை பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் காலிசெய்திருக்கிறார்கள். வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டான்காரியா “பயிர்கள் நடப்பட்டிருக்கின்றன என்ற தகவலை மாவட்ட நிர்வாகத்திடம் சொன்னோம். ஆனால், பிரதமரின் கூட்டத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் இந்த இடம்வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள். வேறு என்ன சொல்ல?'' என்று பதில் சொல்லியிருக்கிறார். 

வேளாண் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஜுனால் பட்டேல் “ஹெலிபேடு அமைந்த இடத்தில் ஆராய்ச்சிக்காகப் புதிய பருத்தி ரக பயிரை வளர்த்து வந்தோம். அதை ஹெலிபேடு அமைப்பதற்காக அழித்துவிட்டார்கள். இந்த இடத்தை மீண்டும் நாங்கள் எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியவில்லை" என்கிறார் வேதனையோடு.

இரண்டாம் ஆண்டு மாணவர் அர்பிட் பட்டேல் “நாங்கள் விவசாயிகளுக்காகத் தரமான விதைகளைத் தயாரிக்க முனைந்துவரும் வேளையில், எங்களுடைய ஆராய்ச்சி நிலத்தைப் பாழ்செய்து மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அரசாங்கமே கண்களை மூடி பருத்திப் பயிர்களை அழிப்பதை எப்படித் தடுப்பது எனத் தெரியவில்லை" என்கிறார் விரக்தியோடு. 

நரேந்திர மோடி, ‘மன் கீ பாத்' நிகழ்ச்சியில் மாணவர்களின் மனதோடு உரையாடுவதோடு நின்றுவிடுகிறார் போல...!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement