Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிதிலங்களாக நிற்கும் அமானுஷ்யத் தீவு! - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம் - பார்ட் 2

அந்தமான்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அந்தமான் போர்ட் ப்ளேர் படகு குழாமிலிருந்து பார்த்தால் பச்சை பஞ்சு மிட்டாய் போல அடர்த்தியாக உட்கார்ந்திருக்கிறது ஒரு தீவு. அதுதான் ராஸ். அங்கே செல்ல சிறிதும் பெரிதுமாக எக்கச்சக்க தனியார் படகுகள் இருக்கின்றன. நீண்ட க்யூவில் காத்திருந்து படகு ஏறினால் 20 நிமிடங்களில் நம்மை வாரி அணைத்துக்கொள்கிறது ராஸ் தீவு. 

ராஸ் தீவைச் சுற்றிப் பார்ப்பதற்கு முன் அதன் வரலாற்றைப் பார்த்துவிடலாம். முதன்முதலில் ஆங்கிலேயர்கள் அந்தமானுக்கு வந்தது 1788-ல். அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிய ப்ளேரின் நினைவாகத்தான் அவர் தரையிறங்கிய இடத்துக்கு 'போர்ட் ப்ளேர்' எனப் பெயர் வைக்கப்பட்டது. அங்கே குட்டியாய் ஒரு குடியிருப்பை அமைத்தவர் நான்காண்டுகள் கழித்து அருகிலிருந்த தீவு ஒன்றில் ஒரு மருத்துவமனையைக் கட்டினார். ராஸ் தீவில் கட்டப்பட்ட முதல் கட்டடம் இதுதான்.  

அதன்பின்னான 60 ஆண்டுகளில் ராஸ் தீவில் மட்டுமல்ல மொத்த அந்தமானிலும் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. சிப்பாய்க் கலகத்துக்குப் பின்னால், கைதிகளை அடைத்து வைக்க அந்தமான் சிறந்த இடம் என முடிவுசெய்த ஆங்கிலேய அரசு, நூற்றுக்கணக்கான கைதிகளையும் சில அரசு அதிகாரிகளையும் போர்ட் ப்ளேருக்கு அனுப்பி வைத்தது. அங்கே ஜாகை புரிந்தவாறு கைதிகளைக் கொண்டு அருகே இருந்த வைப்பர் என்ற தீவில் சிறை கட்டத் தொடங்கினார்கள் அதிகாரிகள். (அந்தமான் தீவுகளின் முதல் சிறை இதுதான். அதன்பின் கட்டப்பட்டதுதான் செல்லுலார் சிறை) ஆனால், போர்ட் ப்ளேரில் நிலவிய கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஆங்கிலேய அதிகாரிகளை வேறு புகலிடம் தேட வைத்தது.  

அந்தமான்

அப்படி தஞ்சம் புக, சிறந்த தீவாக தேர்ந்தெடுக்கப்பட்டது ராஸ். வைப்பர் தீவிலிருந்து கைதிகள் இங்கு அழைத்து வரப்பட்டார்கள். காடு, மரங்களை எல்லாம் அழித்து ஒரு பக்காவான ஆங்கிலேய காலனியை அமைக்கவேண்டியது கைதிகளின் கடமை என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சிப்பாய்களுக்கான பெரிய தங்குமிடம், கவர்னர் மாளிகை, அதிகாரிகளுக்கான குவாட்டர்ஸ், கிரிக்கெட் மைதானம், டென்னிஸ் கோர்ட், ஆங்கிலேயர்களுக்கு உணவு தயாரிக்க ஒரு பேக்கரி, ஓய்வெடுக்க லேக் ஹவுஸ், நீச்சல் குளம், தேவாலயம், க்ளப் என அனைத்தும் கட்டப்பட்டன. விஷக் காய்ச்சலால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட, அதைத் தடுப்பதற்காகவே பிரத்யேகமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் அமைத்தார்கள். அந்த அளவுக்கான பக்கா செட்டப் அது. வெறும் 0.12 சதுர மைல் அளவேயுள்ள கரடுமுரடு தீவில் இத்தனை கட்டடங்களைக் கட்டியதே ஆச்சர்யம்தாம்.  

இந்தக் கட்டமைப்பு காரணமாகவே இங்கு குடும்பம் குடும்பமாக வந்து குடியேறினார்கள் ஆங்கிலேய அதிகாரிகள். விளைவு, அந்தமானின் தலைநகராக மாறியது ராஸ் தீவு. 1941-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தீவில் பிளவுகள் தோன்றின. உயிருக்குப் பயந்த அதிகாரிகள் வந்தது போலவே கும்பலாக போர்ட் ப்ளேருக்கு இடம் மாறினார்கள். எஞ்சியிருந்த ஒன்றிரண்டு குடும்பங்களும் ஜப்பான் அந்தமானைக் கைப்பற்றிய சமயம் வெளியேறின. 

1947-க்குப் பின் ஆள் நடமாட்டமற்ற அமானுஷ்யத் தீவாக இருந்த ராஸ், 1979-ல் இந்தியக் கடற்படையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இந்தத் தீவின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்த கடற்படை அங்கிருந்த கட்டட சிதிலங்களை லேசாகப் புனரமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற, இப்போது ஆயிரணக்கணக்கில் மக்கள் வந்து போகிறார்கள். படகில் சென்று இறங்கியவுடன் முதலில் வரவேற்பது ஜப்பான் வீரர்கள் இரண்டாம் உலகப்போர் சமயம் கட்டிய பங்கர் ஒன்றுதான்.

சின்னத் தீவுதான். ஆனாலும் புள்ளிமான்கள், முயல்கள், மயில்கள் எனக் கண்ணை நிறைக்கும் விலங்குக் கூட்டம் உள்ளே நுழையும்போதே நமக்குள் சிலிர்ப்பையும் மெல்லிய பரவசத்தையும் வரவழைக்கிறது. தீவில் முழுமையான கட்டடம் என எதுவுமே இல்லை. எல்லாமே காலப்போக்கில் சிதிலமடைந்து மரங்களின் வேர்கள் படர்ந்து காணப்படுகின்றன. 'இதுதான் பேக்கரி, இதுதான் க்ளப்' என முன்னால் இருக்கும் அறிவிப்புப் பலகைகள்தான் அறிவுறுத்துகின்றன. ஒரே ஒரு உறுத்தல் சிதைந்து கிடக்கும் சுவர்களில் தங்களின் வக்கிரங்களை கொட்டி சிலர் எழுதியுள்ள கிறுக்கல்கள். கடல் தாண்டி வந்தும் கழிப்பறைச் சுவர் போல வரலாற்றுச் சிதிலங்களை வதைப்பதெல்லாம் கொடுமை!

தீவின் பிரதான கட்டடம் கவர்னர் மாளிகைதான். ஒரு காலத்தில் பர்மா தேக்கும் பளிங்குக் கற்களும் சீனக் கண்ணாடிகளுமாகக்  காட்சியளித்த அந்த மாளிகை இன்று பாழடைந்த பேய்ப் பங்களா போல இருக்கிறது. 'நீ ஒருகாலத்துல இந்தத் தீவையே கட்டியாண்டிருக்கலாம். ஆனா, நான்தான் எப்பவுமே ராஜா' எனச் சொல்வதுபோல இயற்கை தன் மரக் கரங்களால் சுவர்களைத் துளைத்து கம்பீரமாய் நிற்கிறது. ஆட்டமாய் ஆடும் சாம்ராஜ்யங்களின் முடிவு என்ன என்பதை இதைவிடத் தெளிவாக எப்படி உணர்த்த முடியும்? 

அந்தமான்

ஒவ்வொரு சிதிலமும் ஒவ்வொரு கதை சொல்கின்றன. அமைதியாய் அவற்றின் முன் நின்றால் அது புரியும். தீவின் மறுமுனையில் ஒரு வியூ பாயின்ட் அமைத்திருக்கிறார்கள். அங்கிருந்து காணி நிலத்தைக்கூட நீங்கள் கண்ணால் காண முடியாது. நீலப்போர்வையைப் போர்த்தியபடி சாதுவாய்த் தூங்குகிறது பிரமாண்டக் கடல். கேளிக்கைகள் நிறைந்திருந்த ராஸ் தீவை 'கிழக்கு தேசங்களின் பாரீஸ்' என்பார்களாம் ஆங்கிலேயர்கள். வரலாற்றில் ஆர்வமுடையவர்களுக்கும் போட்டோகிராபர்களுக்கும் ராஸ் தீவு பாரீஸ் அல்ல, பேரடைஸ்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement