கேரளப் பூசாரிகள் தேர்வில் இட ஒதுக்கீடு முறை: தாழ்த்தப்பட்டவர்கள் 36 பேருக்கு வாய்ப்பு!

திருவிதாங்கூர் தேவசம் போர்டு  63 பூசாரிகளைப் பணிக்கு எடுத்துள்ளது. இதில், 36 பேர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் .

கேரள கோயில்களில் தாழ்த்தப்பட்ட பூசாரிகள் நியமனம்

பூசாரிகள் தேர்வில், இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தகுதி, திறமை அடிப்படையில் பூசாரிகள் தேர்வு நடைபெற்றதாகவும் கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலை கோயிலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது, சபரிமலையில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சீழ்சாந்தி, மேல்சாந்தியாகப் பணிபுரிகின்றனர். சபரிமலைக் கோயிலில் பட்டியல் இனத்தவர் பூசாரியாக நியமிக்கப்பட வேண்டுமென கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஆலப்புழை அருகேயுள்ள செட்டிக்குளக்கார தேவி கோயிலில் ஈழுவச் சமுதாயத்தைச் சேர்ந்த சுதிர்குமார் என்பவர் கீழ்சந்நிதியாக நியமிக்கப்பட்டார். உயர் வகுப்பினர் மட்டுமே தேவிக்கு பூஜை செய்ய வேண்டுமென்று, அங்கே பணியில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, சுதிர்குமாரின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, கேரள மனித உரிமைகள் கழகத்தில் சுதிர்குமார் புகார் தெரிவித்தார். தொடர்ந்து, செட்டிக்குளக்கார கோயிலில் மீண்டும் சுதிர்குமார் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் வகுப்பு பூசாரிகள் அவரை பணி ஏற்கவிடவில்லை.

கடந்த வாரத்தில் பாலக்காடு மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பூசாரி பிஜு நாராயணனை ஒரு கும்பல் வீடு புகுந்துத் தாக்கியது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு பணிக்கு எடுத்த முதல்  பட்டியல் இன பூசாரி இவர். நான்கு மாதங்களுக்கு முன், இவர் மீது ஆசிட் வீச்சும் நடந்தது. பட்டியல் இனத்தவரைப் பூசாரியாக நியமித்தால் மட்டும் போதாது. அவர்களுக்குப் பணி பாதுகாப்பை வழங்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!