பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணக்காரர்களுக்குப் பாதிப்பில்லை!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்திருக்கும் நிலையில், நாட்டில் உள்ள பணக்காரர்களின் சொத்துமதிப்பு மற்றும் பங்குசந்தைகள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டிருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவரும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை, இந்தியாவின் டாப்-100 பணக்காரர்கள் பட்டியலையும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், தொடர்ந்து 10 வது ஆண்டாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 15.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளதாகவும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. தற்போது அவர் ஆசிய அளவில் டாப்-5 பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மற்றொரு முக்கியமான விவகாரத்தையும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை கோடிட்டுக் காட்டியுள்ளது. அதாவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மோடி தலைமையில் மத்திய அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தாலேயே வளர்ச்சி இந்த அளவுக்குக் குறைந்துள்ளது. முரணாக, இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு கணிசமான அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும், பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் டாப்-100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் மொத்தமாக 479 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயர்ந்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!