வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (07/10/2017)

கடைசி தொடர்பு:18:00 (07/10/2017)

’ஒரு காலத்தில் அடிபம்புகள் அமைப்பதே அரசின் சாதனையாக இருந்தது’ - பிரதமர் மோடி கிண்டல்

ஒரு காலத்தில் அடிபம்புகள் அமைப்பதே அரசின் சாதனை என்ற நிலையிருந்ததாக பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.  

2 நாள் சுற்றுப்பயணமாக குஜராத் மாநிலத்துக்குச் சென்றடைந்த பிரதமர் மோடி, ராஜ்கோட்டில் அமைய உள்ள க்ரீன்ஃபீல்டு விமானநிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார். அடிக்கல் நாட்டி வைத்து, பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘வளர்ச்சி என்ற சொல்லுக்கான பொருள் மாறிக்கொண்டே இருக்கிறது.

ஒரு காலத்தில் அடிபம்புகள் அமைப்பதுதான் அரசின் சாதனை என்ற நிலை இருந்தது. அடிபம்புகள் அமைக்கப்பட்டதையே சாதனையாக பல தேர்தல்களின்போது அரசியல்வாதிகள் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், அந்தச் சூழல் தற்போது மாறியுள்ளது. மக்களின் நலன்கருதி நர்மதை நதிநீரை கிராமங்களுக்கு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். சுதந்திரம் அடைந்தபின்னர் முதல்முறையாக விமானப் போக்குவரத்துக் கொள்கையை நாம் வகுத்துள்ளோம். விமானப் பயணம் என்பது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல, அது அனைவருக்குமானது என்ற நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது. சிறிய நகரங்களுக்கும் விமானப் போக்குவரத்து அளிக்கும் வகையில் புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது’ என்று பேசினார்.