அக்டோபர் 13-ல் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! | Petroleum Dealers going for one day No Sales on 13th October

வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (07/10/2017)

கடைசி தொடர்பு:17:48 (07/10/2017)

அக்டோபர் 13-ல் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அக்டோபர் 13-ல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 


நாடு முழுவதும் தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. முதற்கட்டமாக கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டம் புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், ஜாம்ஷெத்பூர், சண்டிகர் ஆகிய நகரங்களில் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தினசரி விலை நிர்ணயம் காரணமாக பல்வேறு சிக்கல்களை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சந்தித்து வருவதாகவும், விலை ஏற்றம் கடுமையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்தநிலையில் மும்பையில் இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த சங்கம், பெட்ரோலிய பொருட்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறையைக் கைவிட வேண்டும், பெட்ரோலியப் பொருட்களை நேரடியாக வீடுகளில் விநியோகிக்கும் திட்டத்தைக் கைவிடுதல் மற்றும் நாடு முழுவதும் ஒரே மாதிரியா விலையைக் கடைபிடிக்கும் விதமாக பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று அரசை வலியுறுத்துவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13-ல் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது என்றும் அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அக்டோபர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் உள்ள 54,000 பெட்ரோல் பங்குகள் ஒரு நாள் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.