அரைமணிநேரத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்... ரயில்வே துறைக்கு போடலாம் ஒரு 'சபாஷ்' | Boy rescued by railways immediately after a tweet

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/10/2017)

கடைசி தொடர்பு:10:03 (09/10/2017)

அரைமணிநேரத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்... ரயில்வே துறைக்கு போடலாம் ஒரு 'சபாஷ்'

மூக வலைத்தளங்களை வெறும் அரட்டைக்களமாகவும், வீண் வெட்டிவேலை எனவும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சத்தமில்லாமல் அதனால் நல்ல பல விளைவுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஓடும் ரயிலில் மகன் உடல்நிலை சரியில்லாமல் மயக்கமடைந்த தகவலை ஒரு தந்தை “ஆபத்தில் இருக்கிறேன்...என் மகனைக் காப்பாற்ற உதவுங்கள்” என ட்வீட்  செய்ய, தகவல் தொழில்நுட்பத்தின் அதீத முன்னேற்றத்தினால் இப்போது அந்த குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கிறான். இவை அனைத்தும் அரை மணிநேரத்தில் நடந்திருப்பதுதான் ஆச்சர்யம். 

கர்நாடகா எக்ஸ்பிரஸ்


பெங்களூரிலிருந்து டெல்லி செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ் நேற்று மாலை வழக்கம்போல் பெங்களூரிலிருந்து புறப்பட்டது. அதில் ஹரியானாவைச் சேர்ந்த ஒரு தம்பதி தன் 4 வயது மகனுடன் பயணித்தனர். இரவு 9.30 சிறுவனுக்கு காய்ச்சல் உண்டானது. காய்ச்சல் கட்டுப்படும் என நினைத்த பெற்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விறுவிறுவென கொஞ்சநேரத்தில் பையனின் உடல் வெப்பநிலை 104 டிகிரியை தொட்டது. காய்ச்சல் நீர்ச்சத்துக்குறைவு இவற்றால் சிறுவன் மயக்கமடைந்தான். என்ன செய்வதென்று புரியாமல் தவித்து நின்றனர் அவனது பெற்றோர். அடுத்த ரயில் நிலையம் வர இன்னும் அரை மணிநேரத்துக்குமேல் ஆகும். அதற்குள் மகனுக்கு காய்ச்சல் அதிகமாகி வலிப்பு வந்தால் என்ன நேரும் என தவித்துப்போனார்கள். 

ட்விட்டர்தவிப்பினிடையே அந்த சிறுவனின் தந்தை சமயோசிதமாக, தான் ஆபத்திலிருப்பதாகவும் தன் மகனின் உயிரைப்பாற்ற உதவவேண்டுமென்றும், தான் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கப்போகிற தகவலையும் ட்வீட் செய்தார். அடுத்த இருபது நிமிடங்களில் அடுத்த ரயில் நிலையமான இடார்சி ரயில் நிலையம் வந்தது. மயக்கமடைந்த தன் மகனை தோலில் போட்டுக்கொண்டு கதறியபடி இறங்கிய அந்த பெற்றோரை வரவேற்றது ரயில்வே சிறப்பு மருத்துவக்குழு. இன்ப அதிர்ச்சிக்குள்ளானார் தந்தை. ரயில் நிலையத்திலேயே சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

சிறுவன் இப்போது இடார்சியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கிறான். சின்ன ட்வீட் தன் மகனின் உயிரைக்காத்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார் அந்த தந்தை. 

ஒரு சின்ன ட்வீட்டுக்கு மதிப்பளித்து ரயில்வே நிர்வாகம் மூலம் ஒரு உயிரைக் காக்க உதவியவர் ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி. அவரிடம் பேசினோம். 

“அரியானா மாநிலம், குர்காவ் என்ற இடத்தைச் சேர்ந்த அந்த குடும்பம் ஒரு வேலையாக பெங்களூரு போய் மீண்டும் இன்று டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவசர அவசரமாக கிளம்பியதால் அப்போதே பையனுக்கு லேசான காய்ச்சல் இருந்ததை பொருட்படுத்தவில்லை. ரயிலில் ஏறியபின்னர்தான் காய்ச்சல் அதிகமாகியிருக்கிறது. என்ன செய்வதென்று புரியாமல் இருந்த நிலையில் ரயில் இடார்சி ரயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்த சமயம் சிறுவனுக்கு காய்ச்சல் அளவுக்கு அதிகமாகி மூர்ச்சையாகிவிட்டிருக்கிறான். பதறிய சிறுவனின் தந்தை அந்த தகவலை ட்வீட் செய்து உதவி கோரியிருக்கிறார். அதைக்கண்டு வட இந்திய பெண் பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு ரீட்வீட் செய்தார். முக்கிய விஷயமாக சகாக்களுடன் பேசிக்கொண்டிருந்த நான் நிலைமையை புரிந்துகொண்டு துரிதமாக செயல்பட்டேன்.

உடனடியாக போபால் டிவிஷனல் ரயில்வே மேலாளர் சௌத்ரிக்கு போன் செய்து, விஷயத்தைக் கூறி தாமதிக்காமல் உடனடியாக ரயில்நிலையத்தில் ஒரு டாக்டர்கள் குழுவுடன் ஒரு முதலுதவி வாகனத்தை நிறுத்தும்படி அறிவுறுத்தினேன். அவ்வாறே செய்யப்பட்டது. 

ஆசிர்வாதம் ஆச்சாரிரயில் இடார்சி ரயில் நிலையத்தை அடைந்த சில வினாடிகளில் சிறுவனின் பெற்றோர் இறங்கிய பெட்டியின் அருகே போய் முதலுதவி வாகனம் நின்றது. ரயில் நிலையத்தில்  இறங்கி மருத்துவமனையைத் தேடி ஓடிப்போய் மகனை காப்பாற்ற நேரம் இருக்குமா என துயரமான முகத்துடன் பிளாட்பாரத்தில் இறங்கிய சிறுவனின் பெற்றோருக்கு பிளாட்பாரத்திலேயே முதலுதவி வாகனத்தை கண்டதும் இன்ப அதிர்ச்சியானது. உடனடியாக சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

சிறுவன்  கண்விழித்தபிறகும் காய்ச்சல் குறையாமல் ஆபத்தான நிலைமையே தொடர்வதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து உள்ளுரில் உள்ள எனது பா.ஜ.க நண்பர்கள் மூலம் தாமதிக்காமல் அந்த சிறுவனை இடார்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்தேன்.

சரியான நேரத்துக்குச் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிறுவன் இப்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் இன்னும் இரு நாள்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தியிருப்பதாகவும் இப்போதுதான் நண்பர்கள் தகவல் தந்தனர். இது ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினராக என் கடமைதான் என்றாலும் ஒரு உயிரைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சி” என்றவர், “இந்த விஷயத்தில் ரயில்வே நிர்வாகத்தின் துரித நடவடிக்கையை பாராட்டுவது ஒரு பக்கம் என்றால் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மலைக்கவைக்கிறது” என்றார். 

உண்மைதான், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மை, தீமை இரண்டுமே அதை அணுகுகிற விதத்தைப் பொறுத்ததுதான் என்பது நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 

சபாஷ் ரயில்வே!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க