கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேரின் மரணதண்டனை ஆயுளாகக் குறைப்பு | Godhra riot: death sentence of 11 commuted to life imprisonment

வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (09/10/2017)

கடைசி தொடர்பு:12:46 (09/10/2017)

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேரின் மரணதண்டனை ஆயுளாகக் குறைப்பு

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டைனையாகக் குறைத்து, குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோத்ரா

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி, சபர்மதி ரயிலின் எஸ்-6 பெட்டி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 

இந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு, கடந்த 15 ஆண்டுகளாக விசாரனை நடைபெற்றுவருகிறது. அதேபோல, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின்னர், குஜராத் கலவரம் தொடர்பான வழக்கும் தனியே பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதில், ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாகக் கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டும், 63 பேர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலைசெய்யப்பட்டனர். குற்றம் சுமத்தப்பட்ட 31 பேரில் 11 பேருக்கு மரணதண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன. 

இதில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பலர், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தனர். இந்த மேல்முறையீடு மீதான விசாரணை, இன்று குஜராத உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த விசாரணைக்கான தீர்ப்பில், 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.