''எந்தச் சாதி என்று நான் கேட்கவில்லை!''- கிருஷ்ணாவின் குரு நெகிழ்ச்சி

கேரளத்தில் இட ஒதுக்கீட்டு முறையில், அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். உயர்சாதி அல்லாத 36 பேர் அர்ச்சகர்களாக திருவாங்கூர் தேவசம் போர்டு தேர்வு செய்தது. இதில், 6 பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகேயுள்ள கொரட்டியைச் சேர்ந்த ஏடு கிருஷ்ணா என்பவரும் அதில் ஒருவர். தற்போது, 22 வயதே ஆன கிருஷ்ணா திருவல்லா அருகேயுள்ள மணப்புரம் கோயிலில் அர்ச்சகராகப் பணி நியமனம் பெற்றிருந்தார். நேற்று மணப்புரம் கோயிலுக்குச் சென்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். கோயிலுக்கு வந்த அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

பட்டியல் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணா அர்ச்சகராக பொறுப்பேற்பு

பின்னர், கிருஷ்ணா தன் குரு கே.கே. அனிருத்தன் தந்திரியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். தொடர்ந்து, கோயில் தலைமை அர்ச்சகர் கோபக்குமார் நம்பூதிரியுடன் இணைந்து கர்ப்பகிரகத்துக்குள் சென்று பூஜையில் ஈடுபட்டார். ஏடுகிருஷ்ணா சிறு வயதிலேயே வீட்டருகே இருந்த கோயிலைச் சுத்தப்படுத்தி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். பன்னிரண்டாவது வயதில் அனிருத் தந்திரியின், குருதேவா வைத்ரி தந்த்ரா பீடத்தில் சேர்ந்து சாஸ்திரங்கள், மந்திரங்களைக் கற்கத் தொடங்கினார். வீட்டருகே உள்ள கோயிலிலும் அர்ச்சகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு இருந்தது. தற்போது, சமஸ்கிருதத்தில் முதுகலை இறுதியாண்டு படித்து வருகிறார். 

கிருஷ்ணா கோயில் அர்ச்சகராக நியமிக்கப்பட முக்கியக் காரணமாக இருந்தவர் அனிருத் தந்திரி. கிருஷ்ணாவைச் சந்தித்தது குறித்த நெகிழ்ச்சியானத் தருணங்களைப் பகிர்ந்து கொண்டார். 

'' கிருஷ்ணாவின் ஊரில் உள்ள கோயிலுக்கு ஒரு முறை நான் சென்றிருந்தேன். சிறுவன் ஒருவன் கோயிலைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஒழுக்கமிக்கவனாகவும் பணிவுமிக்கவனாகவும் காணப்பட்டான். நான் அவனிடம் இரு வாழை இலைகள் பூஜைக்குக் கொண்டு வருமாறு கேட்டேன். அவனோ,10 இலைகள் கொண்டு வந்தான். அவனிடம் நான் எந்தச் சாதியென்று கூட கேட்கவில்லை. 'என்னிடம் சிஷ்யனாக இருந்து மந்திரங்களைக் கற்றுக் கொள்கிறாயா?'என்று கேட்டேன்.

பன்னிரண்டு வயதில் என்னிடம் சேர்ந்தான். பிறப்பால் எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை. கிருஷ்ணாவைப் பணியில் அமர்த்தவும் எதிர்ப்புக் கிளம்பத்தான் செய்தது. பாலக்காட்டில் மத்ருகுலா தர்மா ஆசிரமத்தில் அர்ச்சகராகப் பணியாற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிஜு நாராயணன்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செட்டிக்குளக்கார கோயிலில் ஈழுவ சமுதாயத்தைச் சேர்ந்த சுதிர்குமார் மீண்டும் அதே கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்ப்புகளைத் தாண்டிதான் வரலாற்றை மாற்றி எழுத முடியும்'' என்கிறார். 

திருவாங்கூர் தேவசர் போர்டுக்குச் சொந்தமாக 1,200க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. 1936ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி முதல் கேரளக் கோயில்களுக்குள் செல்ல பட்டியல் இன மக்கள் அனுமதிக்கப்பட்டனர். 81 ஆண்டுகள் கழித்து பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

திருவாங்கூர் தேசவம் போர்டில் அர்ச்சகர் நியமனத்தில் 32 சதவிகித இடம் பிற்படுத்தப்பட்டவர்கள் , தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!