Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனியே... தன்னந்தனியே... நண்டுகள் ஓடும் தீவு - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம் மினி தொடர் - பார்ட் 4

அந்தமான்

போர்ட் ப்ளேரின் பரபரப்பான நகரச் சந்தடி, ஹேவ்லாக் தீவிற்கு வந்து குவியும் சுற்றுலாவாசிகள், ராஸ் தீவின் சிதிலங்களோடு செல்ஃபி எடுத்துக்கொள்ளும் இளைஞர்கள், நார்த் பே தீவின் சலசலக்கும் நீர் விளையாட்டுகள் போன்றவற்றிலிருந்து ஒதுங்கியிருக்க நினைக்கும் அமைதி விரும்பிகளுக்கு ஏற்ற இடம் நீல் தீவுகள். அந்தமான் போர்ட் ப்ளேரிலிருந்து 42 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்தத் தீவு. கப்பலில் ஒன்றரை மணிநேரப் பயணம். 

ஹேவ்லாக் போன்ற தீவுகளை ஒப்பிடுகையில் நீல் ரொம்பவே குட்டித் தீவுதான். மொத்தப் பரப்பளவு 14 சதுர கி.மீ. சிப்பாய்க் கலகத்தில் இந்திய வீரர்களை அடக்கி வழிக்குக் கொண்டுவந்த பிரிட்டிஷ் ஜெனரல் ஜேம்ஸ் நீல் நினைவாக இந்தத் தீவிற்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது. வேறு எந்தத் தீவுகளிலும் இல்லாத அளவிற்கு இங்கே வங்காள மொழியின் வாடை தூக்கலாக அடிக்கிறது. காரணம், பங்களாதேஷ் பிரிவினையையொட்டி நடந்த போரில் அகதியான ஏராளமான மக்கள் நீல் தீவில் வந்து குடியேறினார்கள். அவர்களின் வம்சாவழியினர்தான் இன்றும் இங்கே பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். 

அந்தமான்

நீல் தீவின் முக்கியச் சுற்றுலாத்தளங்கள் மூன்று. சீத்தாப்பூர் கடற்கரை, ஹவ்ரா இயற்கைப் பாலம், பரத்பூர் கடற்கரை. வழக்கமான கடற்கரைகளைப் பார்த்துப் புளித்துப்போன கண்களுக்குச் சீத்தாப்பூர் கடற்கரை பஃபே விருந்தே அளிக்கிறது. பாசி படர்ந்த வழுக்குப் பாறைகள் கடற்கரை முழுவதும் புதைந்து கிடக்கின்றன. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு பச்சை மார்பிள் பதிக்கப்பட்ட புது வீட்டுத் தரை போல மின்னுகிறது. சன்னமான ஒலியோடு வந்து மோதும் நீரலைகளால் இந்தப் பாறைகளில் சின்னச் சின்ன நீர் வழித்தடங்கள் உருவாகியிருக்கின்றன. ஒவ்வொரு அலையின்போதும் தெளிந்த தண்ணீர் அந்தத் தடங்களில் குபுகுபுவென மேலேறி மணலைத் தொட முயல்வதும் அதைப் பாறைகள் கீழே தள்ளுவதுமாக அந்த விளையாட்டை மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதிகாலை வேளைகளில் சூரிய உதயத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் இந்தக் கடற்கரையில் குவிகிறார்கள்.  

அந்தமான்

ஹவ்ரா இயற்கை பாலம் - இந்த ஆர்ச் வடிவ பாறைகளைப் பல சினிமாக்களில் பார்க்கலாம். இந்தப் பாலத்தை அடையும் வழியே கொஞ்சம் கரடுமுரடாய்த்தான் இருக்கிறது. வழுவழு பாசி படர்ந்த பாறைகள், பாதங்களை லேசாகக் கீறும் கூர்மையான கற்கள் போன்றவற்றின் மீது நடந்துதான் இந்தப் பாலத்தை அடைய முடியும். போகும் வழி எல்லாம் நண்டுகளும் நத்தைகளும் ஊறிக் கிடக்கின்றன. ஆனால், விண்ணென ஓங்கி நிற்கும் பாலத்தைக் காணும்போது கால் பட்ட வலிகள் எல்லாம் மறந்தே போகின்றன. 'உன்னை நீ வேணா பெரியாளா நினைச்சுக்கலாம். ஆனா, என் முன்னாடி நீ ஒண்ணுமே இல்ல' என இயற்கை தன் பிரம்மாண்டத்தைக் காட்டி மிரட்டுகிறது.

நீல் தீவின் படகு குழாம் அமைந்திருப்பதே பரத்பூர் கடற்கரையில்தான். பார்க்க அலைகளே வராத ராமேஸ்வரம் கடல் போலத்தான் இருக்கிறது. கடலுக்குள் நூறடி தூரம் சென்றாலும் ஆழம் வெறும் ஒன்றரை அடிதான் அதனாலேயே குடும்பம் குடும்பமாக இங்கே தண்ணீரில் ஊறித் திளைக்கிறார்கள். துறுதுறு வாண்டுகளையும் நம்பிக் கடலுக்குள் விளையாட விட்டுவிட்டு கரையில் ஓய்வெடுக்கலாம். போக, இங்கேயும் ஸ்னார்க்கலிங், ஸ்கூபா டைவிங் போன்ற சாகசங்கள் நடைபெறுகின்றன.

அந்தமானைப் பொறுத்தவரை சுற்றச் சுற்றத் தீராத தீவுகள், பார்க்கப் பார்க்க சலிக்காத கடற்கரைகள் என லிஸ்ட் கொஞ்சம் நீளம்தான். குடும்பமாகவோ, கும்பலாகவோ சென்று ரிலாக்ஸாக ஓய்வெடுத்துவிட்டு வரலாம். போர்ட் ப்ளேர் தவிர மற்றத் தீவுகளில் மொபைல் நெட்வொர்க் தெளிவாக இருக்காதென்பதால் நச்சரிக்கும் செல்போனிடமிருந்தும் விடுதலை. இந்தத் தொடரில் சொல்லப்பட்ட இடங்கள் எல்லாமே தெற்கு அந்தமானில் இருப்பவைதான். வடக்கு அந்தமானில் இன்னும் ஏராளமான சுற்றுலாத்தளங்கள் இருக்கின்றன. வாய்ப்பிருந்தால் அந்தத் இடங்களையும் தரிசித்தப்பின் சந்திக்கலாம்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement