வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (10/10/2017)

கடைசி தொடர்பு:19:32 (10/10/2017)

இந்திய போர் விமானத்தை இயக்கவிருக்கும் இந்தப் பெண்களுக்கு தம்ஸ்-அப்!

பெண் போர் விமானிகள்

ந்திய விமானப் படைக்கும், பெண்களுக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணம். அவனி சதுர்வேதி, பாவனா காந்த் மற்றும் மோகனா சிங் என்ற மூன்று பேரும் இந்திய ராணுவத்தின் போர் விமானங்களைச் செலுத்தப்போகும் பெருமைக்குரிய முதல் பெண்மணிகள். 

இந்திய விமானப் படை தோற்றுவிக்கப்பட்டு, 85 ஆண்டுகள் கழித்து நிகழ்ந்துள்ளது இந்தச் சாதனை. அடுத்த மாதம் முதல் இந்திய விமானப் படையின் மிகவும் கடினமான வானூர்தியாக கருதப்படும் மிக்-21 பைசன் (MiG21 Bisons) விமானத்தை இயக்குகிறார்கள். இது, இந்திய விமானப் படையில் பாலினச் சமத்துவத்துக்கு கிடைத்திருக்கும் நம்பிக்கைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. இந்த அசாதாரண சாதனை புரிந்துள்ள மூன்று பெண்கள் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோமா... 

கல்பனா சாவ்லா ரோல் மாடல்! 

அவனி சதுர்வேதி... இவரது பூர்வீகம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டம். தந்தை திவாகர் பிரசாத் சதுர்வேதி, அரசுத் துறையில் பணியாற்றுகிறார். அண்ணன் ராணுவ தளபதியாக இருக்கிறார். சிறுவயதில் இவரின் சக தோழிகள், பார்பியை வைத்து விளையாடியபோது, விமானப் பொம்மைகளோடு விளையாடியவர் அவனி சதுர்வேதி. இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா மறைந்தபோது, அவனியின் குடும்பத்தினர் அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். 11 வயதான அவனி, “நான் அவர்போல பறந்து, இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பேன்” என்று ஆறுதல் கூறினார். சொன்னதுபோலவே, இன்று முதல் போர் விமானியாக நிமிர்ந்து நிற்கிறார். ஹைதராபாத்தில் உள்ள ஏர் ஃபோர்ஸ் அகாடமியில் மூன்று கட்ட பயிற்சிகளுக்குப் பிறகு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 

ரத்தத்தில் ஊறிய ராணுவம்! 

ராஜஸ்தானில் உள்ளது, கடேஹ்புரா (Khatehpura) என்ற குக்கிராமம். ராணுவ வீரர் என்ற வார்த்தைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கிராமம். அங்கே பிறந்து வளர்ந்தவர் மோகனா சிங். இவரின் முதல் ரோல் மாடல், 1948-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரில் உயிர்த் தியாகம் செய்த அவரின் தாத்தா, லடு ராம் ஜத் (Lad Ram Jat). அவருக்கு வீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. மோகனாவின் தந்தையும் இந்திய விமானப் படையில், வாரண்ட் ஆபீஸராகப் பணிபுரிகிறார். பொறியியல் படிப்பில் 83% மதிப்பெண் எடுத்த மோகனா சிங், இந்திய விமானப் படையின் கடினமான பயிற்சிகளையும் அசால்ட்டாக கடந்தவர். ஒருமுறை இவரின் முதல்முறையாக  தனியாக விமானத்தைச் செலுத்தியபோது, விமானத்தைத் தரையிறக்குவதில் குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால், இவரால் நட்சத்திரங்களுக்கும்  கீழே இருக்கும் மின்விளக்குகளுக்கும் வித்தியாசம் கண்டறியமுடியவில்லை. அப்போது இவரின் பேராசிரியர் ஒருவர் ஒரு முறை கூறிய வார்த்தைகள்தான் இவருக்கு கைக்கொடுத்தது.  ”எப்போதும் உன்  வாகனத்தின் மீது நம்பிக்கைக் கொள்”,  என்பதுதான் அவர் கூறியது.  தற்போது, போர் விமானத்தை இயக்க ரெடி! 

நிறைவேறிய பைலட் கனவு! 

பீகாரின் தர்பங்கா என்ற நகரத்தைச் சேர்ந்தவர், பாவனா காந்த். தந்தை அரசு ஊழியர். தான் ஒரு பைலட் ஆகவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், பாவனா காந்த் முதலில் தேர்ந்தெடுத்தது பொறியியல். 

பெங்களூரில் இருக்கும் பி.எம்.எஸ் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங்கில், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் படித்து முடித்தார். கேம்பஸ்மூலம் டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், பாவனா காந்த் தேர்வுசெய்தது, இந்திய விமானப் படை. பாவனாவின் திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசுதான் முதல் இந்திய பெண் போர் விமானிகளில் ஒருவர் என்ற பெயர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்