வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (10/10/2017)

கடைசி தொடர்பு:20:19 (10/10/2017)

அம்பானியா... அதானியா...ஜெய் அமித்ஷாவா? - 'தி வயர்’ பத்திரிகை செய்தியின் பின்னணி என்ன?

டந்த அக்டோபர் 8ம் தேதி, ‘தி வயர்’ என்னும் இணையதளப் பத்திரிகை ‘The Golden touch of Jay Amitbhai Shah' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. பிரதமர் மோடியின் ஆட்சியில், பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகனான ஜெய் அமித்ஷாவின் தி டெம்பிள் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒரே ஆண்டில் 16,000 மடங்கு அதிவேகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றும், இந்தக் காலத்தில் நிறுவனத்தின் வருவாய் வெறும் 50,000 ரூபாயிலிருந்து 80.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று எழுதப்பட்டிருந்தது. இதை எழுதியவர், எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் பத்திரிகையாளர் ரோகினி சிங். 

இந்த செய்தி இணையத்தில் வெளியானதும் சோஷியல் மீடியாக்களில் பரவலாகப் பகிரப்பட்டது. ஒருபக்கம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த செய்தி குறித்து கருத்து தெரிவிக்கத் தொடங்கியது. உடனடியாக பி.ஜே.பி தேசியப் பொருளாளரும் மத்திய ரயில்வே அமைச்சருமான பியூஷ் கோயல் பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ‘‘ ‘தி வயர்’ பத்திரிகையின் அத்தனை குற்றச்சாட்டுகளுமே பொய்யானவை. ஜெய் அமித்ஷா நடத்தும் நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்குகள் அத்தனையும் சரியாக இருக்கின்றன. மேலும், அவர் அத்தனை வரியையும் சரிவரச் செலுத்திவருகிறார். அவரது புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்த நிறுவனம் இவ்வாறு எழுதியுள்ளது. நிச்சயம் ஜெய் அமித்ஷா, இந்த இணைய இதழுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்வார்’’ என்று கூறினார்.

அதற்கு அடுத்த சில நிமிடங்களிலேயே, ஜெய் அமித்ஷா ‘தி வயர்’ பத்திரிகைக்கு எதிராக அகமதாபாத் நீதிமன்றத்தில் நூறு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போதைய சூழலில் ‘தி வயர்’ பத்திரிகையின் ஆசிரியர் ‘எங்கள் நிறுவனம் இதற்கெல்லாம் அஞ்சாது. உண்மையை உரக்கச் சொல்லுவோம். நீதிமன்றத்தில் சந்திக்கிறோம்’ என்று ட்வீட் செய்துள்ளார். கூடவே, பிரச்னையை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள மக்களிடமிருந்து ‘crowd funding' முறையில் பணம் திரட்டவும் தொடங்கியிருக்கிறார்கள். 

ஜெய் அமித்ஷா என்னும் தனிநபர் ஒருவருக்காக மத்திய அமைச்சர் ஒருவர் முன்வந்து விளக்கம் கொடுக்கக் காரணம் என்ன? சற்று விரிவாகப் பார்ப்போம்...

தி வயர் பத்திரிகை குற்றம்சாட்டியுள்ள ஜெய் அமித்ஷா பிரதமர் மோடியுடன்

ஜெய் அமித்ஷாவின் நிறுவனம் 2012-13 மற்றும் 2013-14 நிதியாண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படியாக பெரிய பிசினஸ் எதையும் செய்யவில்லை. அந்த நிறுவனம் இந்த இரு நிதியாண்டுகளில் தனது செயல்பாடுகளின் வழியாக முறையே 6,230 ரூபாய் மற்றும் 1,724 ரூபாய் அளவிலான இழப்பீடுகளைச் சந்தித்துள்ளது. நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் இவை.

அதே நிறுவனம் 2014-15-ம் நிதியாண்டில் 50,000 ரூபாய் அளவிலான வருவாய் வந்தது. இதில் லாபம், 18,728 ரூபாய். இப்படியிருக்கும்போது அதற்கு அடுத்த நிதியாண்டில் (2015-16) 80.5 கோடி ரூபாய் பிசினஸ் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட ஒன்று, இரண்டல்ல... 16,000 மடங்கு அதிகம். 

இந்தக் காலத்தில் ஜெய் அமித்ஷா குஜராத்தின் வங்கியல்லாத நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து 15.78 கோடி ரூபாய் எந்தவித முன் உத்தரவாதமும் இல்லாத கடனாகப் பெற்றுள்ளார். அந்த நிதிநிறுவனத்தை நடத்தி வருபவர் ராஜேஷ் கண்டல்வாலா என்னும் பெருவணிகர். இவர், பி.ஜே.பி ஆதரவுடன் ஜெயித்த ராஜ்யசபா எம்.பி பரிமள் நத்வானியின் சம்பந்தி. ரிலையன்ஸ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார் இந்த எம்.பி.    

நிறுவனத்தின் வருவாய் 80.5 கோடி ரூபாய் என்று இருக்கும் நிலையில், ஜெய் அமித்ஷாவின் நிறுவனம் தங்களது விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரத்தை 2016-ல் திடீரென நிறுத்தியுள்ளது. 1.4 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டத்தில், நிறுவனத்தின் நிதி ஆதாரம் கரைந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறது. இதனை ஜெய் அமித்ஷாவின் வழக்கறிஞரே உறுதிப்படுத்தியுள்ளார். 

ஒரே ஆண்டில் 16,000 மடங்கு ‘வளர்ந்த’ ஒரு பிசினஸ், அடுத்த சில மாதங்களிலேயே மூடப்படும் நிலைக்குப் போனது ஏன்? ‘நஷ்டம் வந்துவிட்டது’ என்று சிம்பிளாகச் சொல்கிறார், ஜெய் அமித்ஷாவின் வழக்கறிஞர்.

மற்றொரு பக்கம் ஜெய் அமித்ஷா 60% பங்குதாரராக இருக்கும் குசும் ஃபின்சர்வ் நிறுவனம் 2015-ம் வருடத்தில் காலுப்பூர் கூட்டுறவு வங்கியில் 25 கோடி ரூபாய் அளவில் கடன் பெற்றுள்ளது. இதற்கு 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அடமானம் வைத்துள்ளார்கள். (இதில் அமித்ஷா பெயரில் இருக்கும் 5 கோடி ரூபாய் சொத்தும் அடக்கம்!) ‘7 கோடி ரூபாய் சொத்துகளை அடமானம் வைத்து 25 கோடி ரூபாய் எப்படிக் கடன் பெற முடிந்தது? கூட்டுறவு வங்கி ஒன்றில் எப்படி தந்தார்கள்?’ இந்தக் கேள்விகளுக்கு ஜெய் அமித்ஷாவின் வழக்கறிஞர், ‘அது கடனே இல்லை. முதலீட்டுக்காகப் பெறப்படும் தொகை. அவ்வப்போது நிறுவனத்தில் இருக்கும் பொருட்களை ஈடாகக் காட்டி பெறப்பட்டது’ என்கிறார்.

அதே நிறுவனம் 15 கோடி ரூபாய் மதிப்பிலான காற்றாலை மின் நிலையத்தை மத்தியப் பிரதேசத்தில் நிறுவுவதற்கு 2015-16-ம் ஆண்டில் இந்திய மீள் எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து 10.35 கோடி ரூபாய் அளவிலான கடன் பெற்றுள்ளது. இந்தக் கடன் அனுமதி தரப்பட்ட சமயத்தில் மத்திய எரிசக்தித் துறை அமைச்சராக இருந்தவர் பியூஷ் கோயல் என்றும் ‘தி வயர்’ பத்திரிகை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. 

குசும் ஃபின்சர்வ் நிறுவனம் பங்குச் சந்தை வர்த்தகத்திலும், ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்திலும் இருந்துவந்த ஒரு நிதி நிறுவனம். திடீரென இந்த நிறுவனம் ஏன் காற்றாலை மின்சாரத் தொழிலுக்கு வந்தது? அதற்காகக் கடன் பெற்றது? இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லை.  

இந்தச் செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் தற்போது ஜெய் அமித்ஷா ‘தி வயர்’ பத்திரிகையின் ஆசிரியர், அதன் நிறுவனர் மற்றும் செய்தியின் ஆசிரியர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் சுவாரசியம் கூட்டும் விதமாக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவும் ‘தேவைப்பட்டால் ஜெய் அமித்ஷாவுக்கு ஆதரவாகத் தான் நீதிமன்றத்தில் ஆஜராகவும் தயார்’ என்று கூறியுள்ளார். 

இத்தனைக்கும் ‘தி வயர்’ பத்திரிகையில் இந்த செய்தியைப் பதிவிட்ட ரோகினி சிங், தி டெம்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்பான விளக்கங்களை ஜெய் அமித்ஷாவிடம் வாட்சப்பில் கேட்டபோது தனது கணக்காளரைக் கேட்டுவிட்டு விளக்கம் அளிப்பதாகக் கூறியுள்ளார். ‘ஆனால் அவர் எதற்காக அரசின் வழக்கறிஞரை விளக்கம் கேட்டிருக்கிறார் என்று புரியவில்லை’   என்று தி வயர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனும் முரண்நகையாக ட்வீட் செய்துள்ளார். ‘அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒருமாதத்திற்கு முன்பாகதான் இத்தனையும் நடைபெற்றிருக்கிறது, அதனால் பயனணடைந்துள்ளது ஷாகின்ஷா அமித்ஷாவின் மகன் மட்டுமே’ என்று காங்கிரஸ் தரப்பு பத்திரிகையான ’நேஷனல் ஹெரால்ட்’ தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. 

உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஆதாயம் அடைந்தது யார்? மக்களா? அம்பானியா? அதானியா? அல்லது தற்போது நான்காவதாகக் கிளைத்திருக்கும் ஜெய் அமித்ஷாவா? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்