வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (12/10/2017)

கடைசி தொடர்பு:18:14 (12/10/2017)

கேரளாவில் தலித் அர்ச்சகர்கள்..! கேரள பெரியாரும் தமிழக பெரியாரும் சாதித்த வரலாற்றுப் பின்னணி

கேரளா முதல்வர் பினராயி விஜயன் அய்யன்காளி மற்றும் பெரியார்

மிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, பார்ப்பனர் சமூகம் அல்லாத 36 பேரை கோவில் அர்ச்சகர்களாக நியமித்துள்ளது. இதில் 6 தலித்துகளும் அடக்கம். கேரள அரசின் இந்த நடவடிக்கை இந்திய அளவில் பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளது. 125 ஆண்டுகால வரலாற்றை உடைய, கேரளத்தின் சாதி ஒழிப்புப் போராட்டத்தைக் கொஞ்சம் திருப்பிப் பார்த்தால் கேரள அரசின் இந்த அறிவிக்கைக்குப் பின்னணியாக வரலாற்றில் நம் தமிழகத்தின் பங்கும் இருப்பது தெரியும்.  

அக்காலத்தில் கேரளத்தின் திருவிதாங்கூர் சமஸ்தானத்து தெருக்கள் பெரும்பாலும் அந்த ஊர் கோயிலுக்குச் செல்லும் பாதையை மையமாக வைத்து அமைந்திருக்கும். எப்படி கீழ் சாதிப் பெண்கள் என்று சொல்லப்பட்டவர்கள் மேலுடை அணியக் கூடாது என்கிற விதிமுறை இருந்ததோ, அதேபோல அவர்கள் மேல்சாதி மக்கள் என்று சொல்லப்பட்டவர்கள் வசிக்கும் அந்த தெருக்களில், அதாவது கோயிலை ஒட்டிச் செல்லும் பாதைகளில் நடக்கக் கூடாது என்கிற தடையும் இருந்தது. இங்கு கீழ்சாதி மக்களில் பெரும்பான்மையானவர்களாகக் குறிப்பிடப்பட்டவர்கள் புலையர் என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

அப்படி அத்துமீறி நடந்தவர்கள் மேல்சமூகத்து மக்களால் சாட்டையடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இதை எதிர்த்தவர்தான் அய்யன்காளி என்பவர். திருவனந்தபுரத்தின் மையப் பகுதியான கௌடியார் சதுக்கத்தில் நல்ல உயரமும் ஆஜானுபாகுத் தோற்றமும் உடைய அவரது சிலையை இன்றும் பார்க்கலாம். அய்யன்காளிதான் சமஸ்தானத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் களம் இறங்கியவர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி மறுக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான பள்ளிக்கூடங்களை நிறுவுவது, ஒடுக்கப்பட்டவர்கள் செல்லக்கூடாது என்று மறுக்கப்பட்ட சாலைகளில் சொந்தமாக காளைமாடுகள் இரண்டை வாங்கி வண்டியில் பூட்டி ஓட்டிச் சென்றது என்று பல செயல்வழி அறப் போராட்டங்களை அவர் முன்னெடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி எந்த தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டதோ அதே தெருக்களின் வழியாக புத்தன் சந்தைக்கு 'விடுதலை ஊர்வலம்' போனார். 1889ல் கேரளத்தில் முதன்முதலில் மக்களுக்கான பொதுவழி உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்ததும் அவர்தான்.

இதன் நீட்சிதான் 1920களின் மத்தியில் வைக்கத்தில் தொடங்கிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை பெறும் போராட்டம். 

வைக்கம் சோமநாதர் கோயில் ஆலயத்துக்குச் செல்லும் பாதையில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்கக் கூடாது என்கிற சட்டத்தை திருவிதாங்கூர் சமஸ்தானம் இயற்றியிருந்தது. இதை எதிர்த்து டி.கே.மாதவன் என்கிற காங்கிரஸ் பிரமுகர் தனது நண்பர்கள் மற்றும் வைக்கம் பகுதி மக்களுடன் களமிறங்கினார். எங்கே தங்களுக்கான உரிமைகளும் பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் போராட்டத்திலிருந்து பின்வாங்குகிறார்கள். சோமநாதர் ஆலயச் சாலையில் தொடர்ந்து நடந்து சென்ற போராட்டக்காரர்கள் காவலர்களால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் பல தலைவர்கள் இணைய, அத்தனை பேரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். போராட்டம் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டால் மட்டுமே விடுதலை என்று நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில்தான் போராட்டக்காரர்களில் ஒருவரும் காங்கிரஸைச் சேர்ந்தவருமான  கேசவ மேனன் தமிழகத்திலிருந்த பெரியாருக்கு கடிதம் எழுதினார். அப்போது பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 

அடுத்தகட்டமாகப் பெரியார் தனது மனைவி நாகம்மை மற்றும் அவரது சகோதரி கண்ணம்மாளுடன் வைக்கம் பயணப்பட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்களும் பெரியாருடன் போராட்டத்தில் இணைந்துகொண்டார்கள். பெரியாரின்  அறவழிப் போராட்ட யுக்தி மக்களை ஒன்றுசேர்த்த அதேசமயம் அரசையும் சமஸ்தானத்தையும் கலக்கம் கொள்ளச் செய்தது. விளைவு, பெரியாரும் நாகம்மையும் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால், பெரியாரைப் பின்பற்றி வந்தவர்கள் தொடர்ந்து தங்களது போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். அப்படி பின்பற்றிச் சென்றவர்களில் ஒருவர்தான் அய்யன்காளி. வைக்கம் போராட்டத்தின் இறுதி வெற்றியாகத்தான் 1936ல் ஆலயப் பிரவேசச் சட்டம் கேரளத்தில் அமலுக்கு வந்தது. 

ஆலயத்தில் மட்டும்தான் பிரவேசிக்க வேண்டுமா?... அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுத்தார் பெரியார். 1970ல் தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டத்தை இயற்றி பெரியாரின் கனவுக்கு செயல்வடிவம் கொடுத்தார். ஆனால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டம் செயலிழக்கச் செய்யப்பட்டது. இறுதிவரை அது தனது நெஞ்சில் தைக்கப்பட்ட முள் என்றே கூறினார் பெரியார். 

யது கிருஷ்ணன்

பெரியாரின் நெஞ்சில் தைக்கப்பட்ட முள்ளை தற்போது அகற்றியுள்ளது கேரளத்தின் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு.  தற்போது நியமித்துள்ள 36 பேரில் முதல் நபர்  அய்யன்காளி போராடி உரிமை பெற்றுத் தந்த அதே புலையர் பிரிவைச் சேர்ந்த 22 வயது யதுகிருஷ்ணன். 

கேரளத்தின் கீச்செரிவாள் பகுதியில் சிவன் கோயில் அர்ச்சகராகப் பொறுப்பேற்றிருக்கும் யதுகிருஷ்ணனுக்கு ஒரு சுவாரஸ்யப் பின்னணி உண்டு. கூலித் தொழிலாளர்களின் மகனான யதுவுக்கு சிறுவயதிலிருந்தே கோயில்களின் மீது ஆர்வம் உண்டு. அருகில் இருக்கும் கோயிலைச் சுத்தம் செய்யும் பணிக்குச் சென்றவர், நாளடைவில் அதே கோயிலின் கருவறை பூஜைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்ளத் தொடங்கினார். கடந்த பத்து வருடங்களாக கொடுங்காலூர் வைதீக வித்யாபீடத்தில் அனிருத்தன் தந்திரி என்பவரிடம் மாணவராகப் பயின்றுவருகிறார். “யதுவிடம் இருந்த ஆர்வத்தைத்தான் நான் பார்த்தேனே தவிர, அவன் என்ன சாதி என்று இதுவரைக் கேட்டதில்லை”என்கிறார் அனிருத்தன் தந்திரி. யது கூறுகையில், “இதுதான் கேரளம். இதை அத்தனை மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்” என்றார். 

பெரியாரும் அய்யன்காளியும் போராடியது,  “உனது கோரிக்கைகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அது உனது உரிமை என்னும் நிலையில் இறுதிவரைப் போராடுவேன்” என்ற வால்டேர் சொன்ன ஒற்றைக் கொள்கையின் அடிப்படையில்தான். 

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியுள்ளது கேரளம் என்னும் ஒரு மாநிலம். தமிழகமும்  இந்திய தேசமும் அதை எப்போது செய்யப் போகிறது? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்