வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (12/10/2017)

கடைசி தொடர்பு:19:55 (12/10/2017)

’டெல்லி முதல்வரின் காரைத் திருடிய மர்மநபர்கள்’: போலீஸார் தீவிர விசாரணை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குச் சொந்தமான நீலநிற மாருதி சுஸூகி வேகன் ஆர் கார் திருடப்பட்டது. 

சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால், பிரசாரப் பயணங்களுக்கு நீலநிற வேகன் ஆர் கார் ஒன்றையே பயன்படுத்தி வந்தார். கெஜ்ரிவாலுக்குப் பரிசாக அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த கார், அவரது அடையாளங்களுள் ஒன்றாக மாறிப்போனது.  

இந்தநிலையில், தலைமைச் செயலகத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ள நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தெளிவற்ற நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியில் மட்டும் நடப்பாண்டில் இதுவரை 30,449 கார்கள் திருடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய டெல்லி காவல்துறை துணை ஆணையர், கெஜ்ரிவால் முன்பு பயன்படுத்தி வந்த அந்த காரை, ஆம் ஆத்மி கட்சியின் மருத்துவர் அணி நிர்வாகி வந்தனா என்பவர் தற்போது பயன்படுத்தி வந்ததாகத் தெரிவித்தார்.