குஜராத் தேர்தல் தேதி அறிவிக்காததற்கு இதுதான் காரணமா? | This is the reason for not announcing Gujarat election date!

வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (13/10/2017)

கடைசி தொடர்பு:15:09 (14/10/2017)

குஜராத் தேர்தல் தேதி அறிவிக்காததற்கு இதுதான் காரணமா?

குஜராத் தேரதலை அறிவிக்கிறார் ஏ.கே. ஜோதி

Credits ANI

மாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம், குஜராத் சட்டசபைத் தேர்தல் தேதியை அறிவிக்காததன் காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு வரும் நவம்பர் 9-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

68 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது வீர்பத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இமாச்சலப் பிரதேச சட்டசபைக்கு 2018 ஜனவரி மாதத்துக்கு முன்பாக தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற நிலையில், நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

"இமாச்சலப் பிரதேச தேர்தலுக்கான முறைப்படியான அறிவிக்கை அக்டோபர் 16-ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் அக்டோபர் 23-ம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். மறுநாள் அக்டோபர் 24-ம் தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசிநாள். வாக்குப்பதிவு நவம்பர் 9-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும்" என்று அவர் குறிப்பிட்டார். இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலுடன் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால், டிசம்பர் 18-ம் தேதிக்குள் அங்கு தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று மட்டுமே தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

'மோடிகுஜராத் மாநில சட்டசபையின் பதவிக்காலமும் வரும் ஜனவரியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அம்மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை அறிவிக்காதது ஏன்?' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அம்மாநிலத்தில் அண்மையில் பெய்த மழை, வெள்ள பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்றும் தேர்தல் ஆணையத்தை குஜராத் அரசு கேட்டுக் கொண்டதாலேயே மற்றொரு நாளில் தேர்தல் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் பதிலளித்தார். ஏற்கெனவே, இமாச்சலப் பிரதேசத்துக்கு ஒரு நாளிலும், குஜராத் மாநிலத்துக்கு வேறொரு நாளிலும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அடுத்த சில தினங்களில் குஜராத் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்லவிருப்பதாகவும், அப்போது அரசு விழாக்களில் அவர் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், உடனடியாக நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். எனவே, அந்த நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும், அண்மைக்காலமாக குஜராத் மாநிலத்தில் ஆளும் பி.ஜே.பி. அரசு மீது அம்மாநில மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருந்து வரும் ஆட்சிக்கு வேறு கட்சிக்கு வாக்களிக்கலாம் என்ற மனோநிலையில் குஜராத் மக்கள் உள்ளனர் என்றே தெரிகிறது. தவிர, காங்கிரஸ் கட்சியில் இருந்து பி.ஜே.பி-யில் இணைந்த முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா தனிக்கட்சி தொடங்கியுள்ளார். அவரும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் களத்தில் குதிப்பார் என்பதால், குஜராத்தில் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிப்பது சற்று கடினம் என்ற தகவல், கட்சியின் தேசிய தலைமைக்குச் சென்றுள்ளது. 

தவிர, காங்கிரஸ் கட்சியும் குஜராத் மாநிலத்தில் இம்முறை எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற மும்முரத்துடன் இப்போதே களத்தில் இறங்கியுள்ளது. அண்மையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 15 ஆண்டுகால பி.ஜே.பி. ஆட்சியில், குஜராத் மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி விட்டதாக அவர் குறைகூறியுள்ளார். இதற்கு பி.ஜே.பி. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்ட போதிலும், ஆட்சிக்கு சரியான தலைமை இல்லாமல் அக்கட்சி விழிபிதுங்கி நிற்கிறது. 

நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதும், ஆனந்தி பென் குஜராத் மாநில முதல்வரானார். ஆனால், அவரின் செயல்பாடு சரியில்லை என்ற புகாரின் பேரில், தற்போது விஜய் ரூபானி முதல்வராக இருந்து வருகிறார். என்றாலும், குஜராத் மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத சூழல் நீடித்து வருகிறது. வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று நம்பப்படுவதால், இரு மாநிலங்களிலும் குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்பதில் பி.ஜே.பி தீவிரம்காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் இப்போதே டஃப் கொடுக்கத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். 

எனினும், குஜராத் மாநில வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளின் போதே தெரிய வரும்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close