கறுப்புப் பணத்தில் பங்கு கேட்டு மோடிக்குக் கேரள விவசாயி கடிதம்!

மோடி''வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கறுப்புப் பணத்தில் எனது பங்கு எங்கே'' என்று கேட்டுப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார் கேரள விவசாயி ஒருவர்.

மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி நடித்த சோப்பு விளம்பரம் தொடர்பாக வழக்குத் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்தவர் கே.சாத்து. அதாவது, சோப்பு விளம்பரத்தில் மம்முட்டி சொன்னதுபோல, அதனைப் பயன்படுத்தியும் தான் வெள்ளையாகவில்லை என்பதால் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். வழக்கில் ஒருவழியாகச்  சோப்பு நிறுவனம் அவருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விவசாயியாக இருக்கும் இவர், தற்போது கறுப்புப் பணத்தில் பங்கு கேட்டு மோடிக்குக் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கறுப்புப் பணத்தை மீட்டால், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் அளவுக்கு வரவு வைக்கப்படும் என்று கூறியதைக் குறிப்பிட்டுள்ள கே.சாத்து, தற்போது ஏற்பட்டிருக்கும் விவசாய நஷ்ட்டத்திலிருந்து மீள, என் பங்கிலிருந்து தற்போதைக்கு 5 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் டெபாஷிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளதுடன் அவர் வங்கிக் கணக்கையும் அதில் இணைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''நீங்கள் பதவியேற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் உங்கள் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விவசாய உற்பத்திப் பொருள்களின் விலை குறைந்துவிட்டது. ஆனால், நுகர்வுப் பொருள்களின் விலை அதிகரித்துவிட்டது. மேலும், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருள்களின் விலையும் உயர்ந்திருப்பது சாதாரண ஏழை, எளிய மக்களை மிகவும் பாதித்துள்ளது. எனவே, நான் உங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தற்போதைக்கு வெறும் 5 லட்சம் ரூபாயை மட்டுமாவது எனது வங்கிக் கணக்கில் டெபாஷிட் செய்யுங்கள் என்பதே'' என்று அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், ''அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எப்போதும் கவலைப்படுவதில்லை. ஆனால், மக்கள் விட்டுவிடக் கூடாது. கேள்வி கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!