வடகொரிய அதிபர் கிம்முடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட உ.பி. வியாபாரிகள்!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-வுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டிய 22 வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கான்பூர் நகரில் செயல்பட்டு வரும் வங்கிகள் வியாபாரிகளிடமிருந்து சில்லறைகளைப் பெற்றுக்கொள்வதில்லை என்று புகார் எழுந்தது. குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னரே, வங்கிகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன என்கிறார்கள் கான்பூர் வியாபாரிகள். இதுதொடர்பாக பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை என்றநிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக போராட்டங்கள் நடத்த அந்நகர வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக கான்பூர் நகர் முழுவதும் விவசாயிகள் சங்கம் சார்பில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டன. அந்த போஸ்டர்களின் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தியில் அச்சடிக்கப்பட்ட அந்த போஸ்டர்களில் அவர்கள் இருவர் புகைப்படத்துடன்,’ கிம் உலகை அழிக்க முடிவு செய்துவிட்டார்; பிரதமர் மோடி வியாபாரிகளை அழிக்க முடிவெடுத்து விட்டார்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, போஸ்டர்களில் இடம்பெற்றிருந்த 22 வியாபாரிகள் மீது கான்பூரின் கோவிந்த் நகர் காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!