வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (16/10/2017)

கடைசி தொடர்பு:17:34 (16/10/2017)

குழந்தையைக் கொன்றது மலேரியாவா... ஆதார் கார்டா?!

”அம்மா சோறு வேணும்” - இதுதான் 11 வயது சந்தோஷி குமாரி தன் தாயிடம் கேட்டது. அதற்கு அடுத்த நொடியே மயங்கி விழுந்தாள் அந்தக் குழந்தை. பசியால் மயங்கி விழுந்திருக்கிறது என்று கூறிய மருத்துவர், ஏதாவது சாப்பிடக் கொடுக்கச் சொன்னார். வீட்டில் இருந்தால்தானே கொடுக்க முடியும்? பசி நோயாலே இரவு 10:30 மணிக்குப் பிரிந்தது அந்தக் குழந்தையின் உயிர். 

ஜார்கண்ட் மாநிலம், சிம்டேகா மாவட்டத்தின் கரிமடி கிராமத்தைச் சேர்ந்த குழந்தைதான் சந்தோஷி குமாரி. தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரது தாய் கொய்லி தேவி, தன் மூத்த மகளுடன் இணைந்து புல் அறுப்பு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இவர்களின் வார வருமானமே 90 ரூபாய்தான். ரேஷன் பொருளும், சந்தோஷி குமாரியின் ஒரு வயது தம்பிக்குத் தரப்படும் அங்கன்வாடி உணவும்தான் குடும்பத்தின் வயிற்றை நிரப்பி வந்தது.

சந்தோஷி குமாரி

Credits :Taramani Sahu

கடந்த பிப்ரவரி மாதம் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அரசு வெளியிட்டது. கரிமடி பகுதியைச் சுற்றியுள்ள எழுநூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. ஆதாரை இணைக்கவில்லை எனச் சொல்லி, உணவு மானியத்துக்குத் தகுதி உடைய கொயிலியின் குடும்பத்துக்கு ரேஷன் கார்டு நீக்கப்பட்டது. அதுபோல வெவ்வேறு பத்து ரேஷன் கார்டுகளும் நீக்கப்பட்டிருந்தன. சமூகச் செயற்பாட்டாளர்களின் கடும் முயற்சிகளுக்குப் பிறகு, அந்த மாவட்ட அதிகாரியுடனான குறை தீர்ப்புக் கூட்டம் ஆகஸ்டு 21-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. 

புதிய ரேஷன் அட்டை வரும் என்று காத்திருந்தபோதுதான் இடியாய் இறங்கியுள்ளது சந்தோஷி குமாரியின் மரணம். இடைப்பட்ட ஆறு மாதங்களாக ரேஷன் கடையிலிருந்து எந்தப் பொருளும் வாங்க முடியவில்லை. நவராத்திரி விடுமுறையினால் பள்ளியில் கிடைக்கும் மதிய உணவும் கிடைக்கவில்லை. ஆறு நாள்களாக உணவின்றி பசியால் வாடியது அந்தக் குடும்பம். அதன் விளைவு. செப்டம்பர் 28-ம் தேதி இரவு இறந்திருக்கிறாள் சந்தோஷி. விண்ணப்பித்த புதிய கார்டு, சந்தோஷி இறந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தது. 

''இந்த மரணத்துக்குப் பொறுப்பற்ற அரசு நிர்வாகமே காரணம். 2013-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஏற்கெனவே அமலில் இருக்கும் பொதுநலத் திட்டங்களுக்கு ஆதார் கார்டை கட்டாயமாக்க முடியாது” என்று கொதிக்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள். 

செப்டம்பர் ஏழாம் தேதிதான் ஜார்கண்ட் மாநிலத்தின் மாநில உணவு மற்றும் குடிமை வழங்குதல் செயலாளர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 100 சதவிகிதம் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டுவிட்டதாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார். ஆனால், பொது விநியோக திட்டத்துக்குள் வரும் 2.3 கோடி கார்டுகளில், 1.3 கோடிதான் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 11.6 லட்சம் போலியானது அல்லது போலியான ஆதாரத்துடன் எடுக்கப்பட்டது என்று நிராகரிக்கப்பட்டுள்ளது. 25% இன்னும் ஆதார் கார்டுடன் இணைக்கப்படவில்லை. லடேஹர் மாவட்ட விநியோக அதிகாரி, நவம்பர் மாதத்துக்குள் ஆதார் கார்டுகளை இணைக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் சில மாவட்டங்களில் இதுபோல பல லட்சம் ரேஷன் கார்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனில், இன்னும் எத்தனை சந்தோஷி குமாரிகளை இழக்கப் போகிறோமோ என்ற பெரும் அச்சம் எழுகிறது. 

”சந்தோஷி குடும்பத்துக்குப் புதிய கார்டு வர தாமதமானதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது என்ன தெரியுமா? சர்வர் டவுன். ஆதார் கார்டுடன் ரேஷனை இணைப்பதிலும் இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள், பல மாநிலங்களில் நிலவுகின்றன” என்கிறார், அந்தப் பகுதியில் உணவுரிமை குறித்துச் செயல்பட்டுவரும் தீரஜ். ஆதார்

சந்தோஷியின் மரணத்துக்கு, அவருக்கு ஏற்பட்ட மலேரியா காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதை மறுக்கிறார் அவரது தாய். மருத்துவமனை சோதனையிலும் மலேரியாவுக்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. பசியால் மயங்கிக் கிடக்கும் தன் ஒரு வயது மகனை மடியில் வைத்துக்கொண்டு கதறுகிறார் அந்தத் தாய். 

இந்தியாவில் உணவுத் தட்டுப்பாட்டின் காரணமாக, ஒருநாளைக்கு 3,000 குழந்தைகள் இறப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ரேஷன் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட, இனி ஏற்படப்போகும் இறப்புகளை ஆதார் கார்டு கொலைகள் என்றுதானே அழைக்க முடியும்?


டிரெண்டிங் @ விகடன்