வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (18/10/2017)

கடைசி தொடர்பு:08:11 (19/10/2017)

எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி மறுப்பு!? - மகளைப் பறிகொடுத்த தந்தை கதறல்!

'பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில், தன் மகளை அனுமதிக்க மறுத்துவிட்டனர்' என்று தந்தை ஒருவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மகளை சுமந்திருக்கும் தந்தை

ரவ்ஷன் குமாரி என்ற பெண், கடந்த ஆறு நாள்களாக கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை வழங்க, அவரின் தந்தை பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளார். ஆனால், ரவ்ஷன் குமாரியை சிகிச்சைக்காக அனுமதிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர் எனவும் அதனால், அவர் இறந்துவிட்டதாகவும் அவரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். ரவ்ஷன் குமாரி, எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திலேயே இறந்ததாகக் கூறப்படுவதால், இந்த விஷயம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ரவ்ஷன் குமாரியின் தந்தை, ஆம்புலன்ஸ் இல்லாததால் தன் தோளிலேயே சடலத்தைத் தூக்கிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து எய்ம்ஸ் இயக்குநர், மருத்துவர் பிரபாத் கே.சிங், 'எனக்கு என்ன விஷயம் நடந்தது என்பதே சரியாகப் புரியவில்லை. ரவ்ஷன் குமாரி பற்றி மருத்துவமனையில் யாரும் அறிந்திருக்கவில்லை. பின்னர், எப்படி இந்தக் குற்றம் சுமத்தப்படுகிறது? எனக்கு அந்தப் பெண் இறந்தது குறித்து சந்தேகம் உள்ளது. மருத்துவமனையில் மிக நீண்ட வரிசை இருப்பதைப் பார்த்து, அவர் தந்தை திரும்பச் சென்றதால், அந்த பெண் இறந்தாரா என்று எண்ணத்தோன்றுகிறது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.