வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (19/10/2017)

கடைசி தொடர்பு:17:28 (19/10/2017)

பாகிஸ்தானுக்கு சுஷ்மா ஸ்வராஜ் வழங்கிய தீபாவளிப் பரிசு!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவக் காரணங்களுக்காக விசா வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

வட மாநிலங்கள் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டிலிருந்து பலர் இந்தியாவிடம் மருத்துவ சிகிச்சை பெற விசாவுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கிறார்கள். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் தனது மகனின் சிகிச்சைக்காக இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என டிவிட்டரில் சுஷ்மாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

 இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியைப் பதிவிட்டார். அதில், உங்கள் குழந்தை இனிமேலும் சிகிச்சைக்காகக் காத்திருக்க வேண்டாம். நான் பாகிஸ்தானில் இருக்கும் உயர் அதிகாரிகளிடம் மருத்துவ விசா வழங்கும்படி கூறிவிட்டேன் என்றார். 

நேற்று பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் விசா வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும், “தீபாவளி நாளில் இந்தியா தகுதியான மருத்துவ விசா வழங்கும்” எனப் பதிவு செய்துள்ளார்.

அதேபோல், பாகிஸ்தானைச் சேர்ந்த அம்னா ஷமின், தனது தந்தை டெல்லியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரைச் சந்திப்பதற்காக தனது அனுமதி வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்த சுஷ்மா, “பாகிஸ்தானில் இருக்கும் இந்திய உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுங்கள். நிச்சயம் அனுமதி வழங்கப்படும்” என்றார். 

சுஷ்மாவின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானிலிருந்து மருத்துவத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.