குஜராத் மக்களுக்கு அடிக்கிறது யோகம்! தேர்தலுக்கு முன்பே சலுகைகள் ஏராளம்! | Gujarat farmers will get loan from banks without interest rate and government employees get salary hike

வெளியிடப்பட்ட நேரம்: 06:46 (20/10/2017)

கடைசி தொடர்பு:07:59 (20/10/2017)

குஜராத் மக்களுக்கு அடிக்கிறது யோகம்! தேர்தலுக்கு முன்பே சலுகைகள் ஏராளம்!

குஜராத் மாநிலத்தில், விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் போட்டிபோட்டுக்கொண்டு தேர்தலை அறிவிப்பதற்கு முன்பே பல கூட்டங்களைத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். ஆளும்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்துவருகிறது. 

குஜராத் மோடி அமித் ஷா


இரண்டு நாள்களுக்கு முன்பு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, 'மாநிலத்தில் உள்ள 25 லட்சம் விவசாயிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்' என்றும், 'விவசாயக் கடனுக்கான ஏழு சதவிகித வட்டியை, மத்திய மற்றும் குஜராத் மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்' என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் சம்பள உயர்வை அறிவித்திருக்கிறது குஜராத் அரசு. 

'இதுவரை, ஆண்டு குடும்ப வருமானம் 1.50 லட்சம் வரை இருப்பவர்களுக்கு 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள இலவச மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இதை மாற்றி, இனி 2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களும் 2 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்' என்று அறிவித்திருக்கிறார், துணை முதலமைச்சர் நிதின் பட்டேல். 

மேலும், 'மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுக்கு ஊதியம் மாறா வகையில் ஒவ்வொரு மாதமும் சம்பளமாக 16,500 ரூபாய் வழங்கிவந்துள்ள நிலையில், இனி மாதச் சம்பளமாக 25,000 ரூபாய் வழங்கப்படும். இதைப்போலவே, நிர்வாக உதவியாளராக இருப்பவர்கள் 11,500 ரூபாய் சம்பளமாகப் பெற்றுவருகிறார்கள். இனி, 19,950 ரூபாய் சம்பளமாகப் பெறுவார்கள்" என்றும் அறிவித்தவர், 'ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைக்காக மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பணியாளர்களுக்கும் சம்பள உயர்வை' அறிவித்திருக்கிறார் நிதின் பட்டேல்.

குஜராத் மோடி அமித் ஷா

தற்போது, பிரதமர் மோடி வெளிநாடு பயணம் மேற்கொள்ளாமல் அடிக்கடி குஜராத் பயணம் மேற்கொண்டுவருகிறார். கடந்த வாரம், காந்தி நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர், 'குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பி.ஜே.பி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அதை மக்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார், 'ஜி.எஸ்.டி வரி கொண்டுவந்ததில் காங்கிரஸ் கட்சிக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது' என்று சொல்லி இருக்கிறார். 

இதுவரை ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தியதை சாதனையாகச் சொல்லி வந்த  பிரதமர், தற்போது காங்கிரஸ் கட்சியின்மீதும் குற்றம்சாட்டுவதற்குக் காரணம், குஜராத் மாநிலத்தில் வணிகர்கள்  ஜி.எஸ்.டி-யை கசப்புடன் ஏற்றுக்கொண்டவர்கள். பிரதமரின் நடவடிக்கையிலும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், வணிகர்கள் கைவிரித்தால் என்னசெய்வது என்பதற்காகவே, கடைசி நேரத்தில் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.