வெளியிடப்பட்ட நேரம்: 19:56 (20/10/2017)

கடைசி தொடர்பு:19:56 (20/10/2017)

வெள்ளைப் புடைவைகள் சூழ மீண்டும் `மணமகள்' ஆன கைம்பெண்!

கனுக்குத் திருமணம் நடந்துகொண்டிருக்கும். கணவரை இழந்த தாயார் வீட்டுக்குள் மறைவாக இருப்பார். திருமணம் முடிந்து அவரிடம் ஆசி வாங்க மணமக்கள் வருவார்கள். `தாலி கட்டும் நேரத்தில் எங்கே சென்று விட்டாய்’ எனக் கேட்பார் மகன். அதற்கு அவரது தாய் `தாலி கட்டுவதை நான் பார்க்கக் கூடாது' என பதில் சொல்வார். இதுேபோன்ற காட்சிகளை சினிமாவில் பார்த்திருப்போம். இதுபோன்ற தாயார்களை சினிமாவில் மட்டுமல்ல, கிராமங்களிலும் காண முடியும். கணவரை இழந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகக் கருதும் பெண்களுக்கு, தன் துணிச்சலான முடிவின்மூலம் வழி காட்டியிருக்கிறார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வினிதா தேவி!

உத்தரபிரதேசத்தில் நடந்த கைம்பெண் திருமணம்

உ.பி மாநிலத்திலுள்ள விருந்தாவன் நகரம், சோகம் ததும்பிய முகங்கள் நிறைந்தது. இந்த நகரில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்ட கைம்பெண்கள் வசிக்கின்றனர். ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஒரு துயரக் கதை ஒளிந்திருக்கிறது. விருந்தாவனில் `கோபிநாத்' என்ற பெயரில் 400 ஆண்டுகால பழைமையான கிருஷ்ணர் ஆலயம் உள்ளது. இங்கு குடிகொண்டுள்ள பகவான் கிருஷ்ணர்தான், இந்தக் கைம்பெண்களின் ஆறுதல்.

வட இந்தியாவில், கணவரை இழந்த பெண்களை வீட்டைவிட்டு துரத்தும் வழக்கமும் இருக்கிறது. அப்படித் துரத்தப்பட்டவர்களுக்கு விருந்தாவன் நகரம்தான் அடைக்கலம். பகவான் கிருஷ்ணர் தங்களைப் பாதுகாப்பதாக நம்புகிறார்கள். கோயிலில் சேவகம் புரிவதைக் கடவுளுக்குச் செய்யும் சேவையாகக் கருதுகிறார்கள். இங்குள்ள ஆசிரமங்களில் தங்கிக்கொள்கிறார்கள். கிடைப்பதை உண்டு, மீதிக் காலத்தைக் கழிக்கிறார்கள்.

விருந்தாவன் நகருக்குள் சென்றால், நான்கைந்து கைம்பெண்கள் சேர்ந்து வீடு எடுத்து வசிப்பதையும் காணலாம். துயரம் நிறைந்த கண்களுடன் நகரம் முழுக்க  அவர்கள் நடமாடுகின்றனர். 15 வயதிலிருந்து 90 வயது வரை உள்ள கைம்பெண்கள் இங்கு உள்ளனர். இந்தியாவில் சிறு வயது திருமணம் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று. அப்படி, இளவயதிலேயே மணவாழ்க்கையில் அடியெடுத்துவைத்தவர்தான் வினிதா தேவி. கணவருடன் இரண்டு ஆண்டுகள்தாம் குடும்பம் நடத்தினார். இரு குழந்தைகளும் பிறந்தன.  2013-ம் ஆண்டு கேதர்நாத்தில் நடந்த நிலச்சரிவில் சிக்கி, அவரின் கணவர் மரணமடைந்தார். கணவர் குடும்பத்தினர் கைவிட, நிர்க்கதியான வினிதா, ருத்ரயாபாக் மாவட்டத்திலுள்ள சொந்த கிராமமான காமோடிக்குச் சென்று தாயுடன் வசித்தார். தாயார் உடல்நலம் சரியில்லாதவர். வினிதா வேலைக்குப் போய், தாயாரையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளவேண்டிய நிலை.

அப்போது ராகேஷ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். இருவருக்கும் பிடித்துப்போக அவரைப் பதிவுத்திருமணம் செய்தார் வினிதா. ஆனால், வினிதாவின் பதிவுத்திருமணத்தை கிராமத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், முழு சடங்கு சம்பிரதாயங்களுடன் ராகேஷைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இந்தியாவில் கைம்பெண்கள் திருமணத்தை ஊக்குவிக்கும் அமைப்பான `சுலப் இன்டர்நேஷனல்' அமைப்பை அணுக, அவர்களே வினிதாவின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முன்வந்தனர். 

மணப்பெண்ணை அழைத்து வரும் கைம்பெண்

கைம்பெண்களுள் மணம் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில், விருந்தாவன் நகரில் வினிதா தேவியின் திருமணத்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய தினத்தில் ராகேஷ் - வினிதா தேவி திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரமாண்டமான  திருமண மண்டபம் அழகுற அலங்கரிக்கப்பட்டது. திருமணத்தில் 500 கைம்பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மணப்பெண் வினிதாவை மணப்பந்தலுக்குக் கைம்பெண் ஒருவர்தான் தோழியாக மாறி அழைத்து வந்தார். வெள்ளைப் புடைவைகள் சூழ மணமகன் ராகேஷ், வினிதாவின் கழுத்தில் தாலி கட்டினார். சுற்றியிருந்தவர்கள் அட்சதை தூவி மனதார வாழ்த்தினர். 

``பெண்களுக்குத் தங்கள் வாழ்க்கை குறித்து தெளிவு இருப்பது அவசியம். கல்வி, வேலை, வாழ்க்கைத் துணைவர் தேர்வு என எதிலும் பெண்களே சுய முடிவு எடுக்க வேண்டும். என்னைப் பார்த்து கைம்பெண்கள் மறுமணம் புரிய முன்வர வேண்டும். கணவரை இழந்துவிட்டால், வாழ்க்கை முடிந்துவிட்டது என முடங்கிவிடக் கூடாது. என் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுப்பேன். என்னைப் பொறுத்தவரை இது ஒரு துணிச்சலான முடிவு'' என்கிறார் வினிதா தேவி!

Photo courtesy: Hindustan times

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்