''குஷ்பு பொதுக்குழு உறுப்பினரானது எப்படி..?'' விசாரணை நடத்த ராகுல்காந்தி உத்தரவு | How khushbu became a member of tncc General Council? " Rahul gandhi orders probe

வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (21/10/2017)

கடைசி தொடர்பு:07:35 (22/10/2017)

''குஷ்பு பொதுக்குழு உறுப்பினரானது எப்படி..?'' விசாரணை நடத்த ராகுல்காந்தி உத்தரவு


ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கட்சி உறுப்பினரே ஆகாத குஷ்பு எப்படிப் பொதுக்குழு உறுப்பினர் ஆனார் என்று புகார் கிளம்பியிருப்பதால், அதைப்பற்றி எல்லாம் விசாரணை நடத்த தேர்தல் அதிகாரியை நியமித்துள்ளார் ராகுல்காந்தி. அந்தத் தேர்தல் அதிகாரி சஞ்சய் தத் நாளை தமிழகம் வருகிறார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உள்கட்சித் தேர்தலை முன்னிட்டு உறுப்பினர் சேர்க்கை, மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வாங்கி சமர்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலை நடத்துவதற்கு பொறுப்பாளர்களாக சஞ்சய் தத், பாபி ராஜு ஆகியோரை டெல்லி மேலிடம் நியமித்தது. முன்னாள் மத்திய மந்திரியும் முன்னாள் திருப்பதி தேவஸ்தான தலைவருமான பாபி ராஜு சென்னை உள்ளிட்ட வடமாவட்ட தேர்தல் பொறுப்பாளராக இருந்தார். உள்கட்சி தேர்தல்கள் எல்லாம் முடிந்து கடந்த 6-ம் தேதி தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள 685 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பபட்டிருந்தது.

பொதுக்குழுவுக்கு வந்த நடிகை குஷ்பு-வுக்கு தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் எதிர்ப்புத் தெரிவித்தார். விண்ணப்பமே செய்யாத குஷ்பு எப்படிப் பொதுக்குழு உறுப்பினர் ஆனார்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், வடமாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளது என்று ராகுல்காந்திக்குப் புகார் போனது. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட்ட ராகுல்காந்தி,  தேர்தல் பொறுப்பாளர்களாக இருந்த சஞ்சய் தத், பாபி ராஜூ ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினார். இதையடுத்து, பாபி ராஜூவைக் கண்டித்த ராகுல்காந்தி, தேர்தல் பொறுப்பிலிருந்து அவரை நீக்கினார். சஞ்சய் தத், தமிழகம் சென்று வடமாவட்டங்களில் தேர்வாகி இருக்கும் நிர்வாகிகள் பட்டியலைச் சரிபார்க்க வேண்டும் என்றும் தேர்தல் குறித்து வந்துள்ள புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். நடத்தப்படாமல் இருக்கும் ஒரு சில பகுதிகளுக்கான உள்கட்சி தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, ராகுல்காந்தி உத்தரவின் பேரில் அக்டோபர் 22-ம் தேதியிலிருந்து தேர்தல் அதிகாரி சஞ்சய் தத் வடமாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். குஷ்பு பொதுக்குழு உறுப்பினர் ஆக்கப்பட்டிருப்பது குறித்தும் அவர் நேரில் விசாரணை நடத்த இருக்கிறார். மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம் பி ராமசுப்பு, அமெரிக்கை நாராயணன், எஸ்.வி.ரமணி போன்ற மூத்த நிர்வாகிகள் பெயர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வில் விடுபட்டு போய் இருக்கிறது. அதுபற்றியும் தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தவிருக்கிறார் என்கிறார்கள். ராஜிவ் வரதன், சி.கே.பெருமாள், சரவணன் உள்பட பலர் கட்சியின் பொறுப்புகளுக்குத் தேர்வாகி இருக்கிறார்கள். அவர்கள் பற்றியும் புகார் போய் இருப்பதால் அதுபற்றியும் சஞ்சய் தத் விசாரணை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

குஷ்பு கராத்தே தியாகராஜன்


குஷ்பு பிரச்னை காங்கிரஸ் கட்சியில் மீண்டும் பூதாகரமாகக் கிளம்பியிருக்கும் நிலையில், குஷ்பு ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள், ''ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாநிலத் தலைவராக இருந்தபோதுதான் காங்கிரஸ் கட்சியில் குஷ்பு சேர்ந்தார். 2019-ம் ஆண்டு வரை அவரது உறுப்பினர் அட்டை செல்லுபடியாகும். அவர்மீது குறை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை'' என்றனர். ஆனால், கராத்தே தியாகராஜன் ஆதரவாளர்களோ, ''கட்சியின் அடிப்படை உறுப்பினராக தன்னைப் புதுப்பித்துக்கொள்ளதாக குஷ்பு எப்படிக் கட்சியின் உறுப்பினராகவும் பொதுக்குழு உறுப்பினராகவும் ஆக முடியும்'' என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். எனவே, இந்தப் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வர தேர்தல் அதிகாரி சஞ்சய் தத் நேரடி விசாரணை பயன்படும் என்கிறார்கள் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள். மேலும், உள்கட்சி தேர்தலை நடத்த பொறுப்பாளர்களாக இருந்த மாவட்ட நிர்வாகிகளிடமும் அவர் விசாரணை நடத்தினால் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள்.

இதற்கிடையில், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத சிலரை இந்த உள்கட்சி தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்தி உயர் பொறுப்புகளில் அமர்த்திவிட்டனர் என்றும் டெல்லிக்குப் புகார் போய் இருக்கிறது. அதாவது, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வில் பணம் விளையாடி இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதுபற்றியும் விசாரணை நடத்த ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று, முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த தலைவர்களுள் ஒருவருமான ப.சிதம்பரத்தை அவரது வீட்டுக்குப் போய் நேரில் சந்தித்தார் திருநாவுக்கரசர். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. ''இருவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசினோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்புத்தான். நான் ராஜினாமா செய்து விட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். அதை நம்பவேண்டாம் ' என்று அப்போது சொன்னார் திருநாவுக்கரசர். பொதுக்குழுவை 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடத்தி முடித்த திருநாவுக்கரசர் மீது உள்கட்சி தேர்தலில் முறைகேடு என்று புகார் கிளம்பியிருப்பது அவரது தலைவர் பதவிக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்