Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குஜராத் தேர்தல் எப்போது..? போட்டியில் முந்துவது யார்?

குஜராத்தில் மோடி

“தேர்தல் ஆணையம், மத்தியப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., வருமான வரித்துறை, மத்திய அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் எல்லாம் தன்னாட்சி பொருந்தியவை. இந்த அமைப்புகளில் மத்திய அரசின் தலையீடோ அல்லது பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களின் குறுக்கீடோ இருக்காது" என்ற நிலைப்பாடெல்லாம் தற்போது மாறிக்கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

டிசம்பர் மாதத்துடன் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டிய நிலையில், கடந்த இருவாரத்திற்கு முன் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை மட்டுமே தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி அறிவித்தார். குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 18-ம் தேதிக்கு முன் நடத்தி முடிக்கப்படும் என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.  ஏற்கெனவே குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வேறொரு நாளில் அறிவிக்கப்பட்ட முன்னுதாரணம் உண்டு என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், குஜராத் மாநிலத்தின் பரூச் மற்றும் வதோதரா மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு 615 கோடி ரூபாய் மதிப்பில் தெற்கு குஜராத்தையும் சவுராஷ்டிரா பகுதியையும் இணைக்கும் படகுச்சேவையைத் தொடங்கி வைத்துள்ளார். மேலும், வதோதரா மாவட்டத்தில் ஆயிரத்து 140 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்டிவைத்துப் பேசியுள்ளார். 

பிரதமர் மோடியின் குஜராத் பயணத்திற்காகவே அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை என்ற காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், குஜராத் பயணத்தின்போது பேசிய மோடி, “தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்வதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அருகதையில்லை” என்று கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய ஒரு அமைப்பு என்று தொடர்ந்து தெரிவித்து வந்தாலும், மத்திய அரசின் நெருக்குதலுக்கு அடிபணிந்தே செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

இதுவரை குஜராத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில மக்கள் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள டிசம்பர் 18-ம் தேதி காத்திருக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம்

ஒரு மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதியை அறிவிக்கும்போது, அம்மாநிலத்தின் பாதுகாப்பு, தேர்தல் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள், போலீஸார் மற்றும் துணை ராணுவப்படையினரை ஓரிடத்திலிருந்து, வேறு பகுதிக்கு மாற்றுவதில் உள்ள சிரமங்கள் போன்றவற்றை கருத்தில்கொண்டு, இரண்டு மாதங்களுக்கு முன்பே தேர்தல் தேதியை அறிவிப்பது வழக்கம். ஆனால், டிசம்பர் 18-ம் தேதிக்கு முன் குஜராத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்திருக்கும் நிலையில், அந்த தேதிக்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாள்களே உள்ளன. கிராமங்களில் ஒரு பழமொழி கூறுவதுண்டு. "மாமியார் உடைத்தால் மண்குடம்; அதுவே மருமகள் உடைத்தால் பொன்குடம்" என்பதுதான் அது.

காங்கிரஸ் கட்சித் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, "தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு ஆட்டுவிக்கிறது. தங்களுக்கு வசதியாக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துகிறார்கள். தேர்தல் ஆணைய நடவடிக்கைகளில் மத்திய அரசின் தலையீட்டைத் தடுக்க வேண்டும்" என்றெல்லாம் உரக்கக் குரல் கொடுத்த பி.ஜே.பி, தற்போது தங்கள் ஆட்சியின்போது, "அதே தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள் குறைகூறினால், மோடி அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்?" என்கின்றனர் விவரம் அறிந்த அரசியல் நோக்கர்கள்.

எப்படி இருப்பினும் அடுத்த சில நாள்களில் குஜராத் தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்துதான் ஆக வேண்டும். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பி.ஜே.பி. ஆட்சிதான் அம்மாநிலத்திலிருந்து வருகிறது. இந்தமுறை பிரதமரின் சொந்த மாநிலத்தில் பி.ஜே.பி.-க்குத் தொடர்ந்து அதிருப்தி நீடித்து வருவதை அறியாதவரல்ல மோடி. அதை மனதில் வைத்தே தற்போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளதாகக் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவே குஜராத் சட்டசபைத் தேர்தல் அறியப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் வெற்றியைப் பதிவு செய்தே ஆக வேண்டும் என்று முனைப்பில் பி.ஜே.பி-யும், மத்திய அரசின் மீதுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி, பி.ஜே.பி-யிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் காங்கிரஸ் கட்சியும் இப்போதே தேர்தல் உத்திகளை வகுக்கத் தொடங்கி விட்டன.

குஜராத் தேர்தல் ரேஸில் வெல்லப்போவது யார் என்பது ஓரிரு மாதங்களில் தெரிந்து விடும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close