'இந்தியாவுக்குக் கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு!' - மோடியை குஷியாக்கிய 'ரோ ரோ' படகுகள்

குஜராத் மாநிலத்தில் இரண்டு குடா பகுதிகள் உள்ளன. ஒன்று, கட்ச் வளைகுடா; மற்றொன்று காம்பெத் வளைகுடா. காம்பெத் வளைகுடாவின் தென் பகுதியில்தான் சூரத், வடோரா உள்ளிட்ட குஜராத்தின் முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. இதன் வடக்குக் கரையில் சௌராஷ்டிரா மாவட்டத்தில் இருப்பது கோஹா நகரம். இங்கிருந்து எதிர்ப்புறமுள்ள தெற்கு குஜராத்தின் தஹேஜ் நகருக்கு, தரைவழியே முந்நூறு கிலோமீட்டரைக் கடந்து செல்வதற்கு, கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஆகும். அதிக நேரம் மற்றும் எரிபொருள் செலவாகும் காரணத்தால், 32 கிலோமீட்டர் தூரம்கொண்ட காம்பெத் குடாப் பகுதியைக் கடக்க, `ரோரோ' என்றழைக்கப்படும்  `ரோல்-ஆன் ரோல்-ஆஃப்' வகை படகுப் போக்குவரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார்

ஒரே நேரத்தில் 100 கார், லாரி மற்றும் பேருந்து போன்ற வாகனங்களையும் 250 பயணிகளையும் ஏற்றிச் செல்லும் திறன்கொண்ட பெரிய படகுகள் இதற்கென இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தப் படகினுள் வாகனங்களை நேரடியாக ஓட்டிச்சென்று ஏற்றும் வசதியும், இறக்கும் வசதியும் உள்ளன. இந்த வசதிகளின் மூலம் டிராக்டர், லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் போன்ற கனரக வாகனங்களும் பயன்படுத்த முடியும். இந்த வகையான ரோல் ஆன் - ரோல் ஆஃப் முறையில் கார்களை ஏற்றிச்செல்வது, தற்போது குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

``இந்தச் சேவை இந்தியாவுக்குக் கிடைத்த `விலைமதிப்பில்லாப் பரிசு'. தென்கிழக்கு ஆசியாவில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு சேவை இல்லை. இந்தச் சேவை கோஹா-தஹேஜுக்கும் இடையில் நடைபெறும் ஒன்று என்றாலும், நாட்டின் மிக முக்கியமான சேவை. இந்தச் சேவையின் மூலம் எட்டு மணி நேரப் பயண தூரத்தை வெறும் 1 மணி நேரத்தில் கடக்கலாம். 310 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊரை, வெறும் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதாக ஆக்கிவிட்டது" என்று இதைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி தன் உரையில் குறிப்பிட்டார். 

``இந்தச் சேவை, சௌராஷ்டிரா மாவட்டத்திலிருந்து சூரத் நகருக்கு வைரம் பட்டை தீட்ட வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்குப் பெரும் நிம்மதியைக் கொடுக்கும் எனத் தெரிகிறது. அதிக தொலைவு இருப்பதால், வைரம் பட்டை தீட்டச் செல்லும் தொழிலாளர்கள் சூரத்தில் வாரம் முழுவதும் தங்கியிருந்து வேலை செய்துவிட்டு வார இறுதியில்தான் ஊருக்குச் செல்வர். இனிமேல் தினமும் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றுவிட்டு திரும்ப முடியும்'' என்று குஜராத் மாநிலக் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் பாடோ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ``இந்தச் சேவை, முதலில் மக்களுக்காகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இரண்டு மாதங்கள் கழித்து இரண்டாம் கட்டம் தொடங்கும்போது கார் போன்ற சிறிய ரக வாகனங்களையும் ஏற்றிச்செல்லப்படும். அதன்பிறகு படிப்படியாகப் பெரிய மற்றும் கனரக வாகனங்களை ஏற்றிச் செல்லப்படும். 250 பேர் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும் என்பதால், இதை `படகுச் சேவை' என்பதைவிட `உள்நாட்டுக் கப்பல் சேவை' என்றே சொல்லாம்" என்றார். 

சபர்மதி ஆறும், மாஹி ஆறும் இந்தக் குடா பகுதியில்தான் வந்து கடலில் கலக்கின்றன. இந்தப் பகுதியில் கடந்த 1960-ம் ஆண்டே படகுப் போக்குவரத்து தொடங்கத்திட்டமிடப்பட்டது. அதன்பிறகு, பல்வேறு காரணங்களால் தள்ளிப்போடப்பட்டு, பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த 2012-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!