வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (24/10/2017)

கடைசி தொடர்பு:18:26 (24/10/2017)

பெங்களூரு, தமிழர்களின் இரண்டாவது தலைநகரமான கதை!

பெங்களூரில் `மெர்சல்' படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் தமிழர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அன்றைய தினத்தில், அங்கு இருந்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். கோவாவில் பணிபுரிந்த அவர், சமீபத்தில்தான் பெங்களூருக்கு மாற்றலாகி வந்திருந்தார். கன்னடம் மொழி தெரியாது. இந்தியை வைத்து சமாளித்துக்கொண்டிருந்தார். `இந்த ஊர்ல தமிழ் பேசவே பயமாக இருக்கு' என்றார் வருத்தத்துடன். கால ஓட்டம், பெங்களூரு நகருக்கும் தமிழர்களுக்குமிடையே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கியிருக்கிறது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது.

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் மேயர்

பெங்களூருக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு, இன்றோ நேற்றோ உருவானதல்ல. ஆயிரம் ஆண்டுகால உறவுமுறை கொண்டது. இந்த நகரத்தின் வரலாற்றை ஆராய்ந்தால், பத்தாவது நூற்றாண்டில் பெங்களூரு நகரம், ராஜேந்திர சோழர் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போதிருந்தே இங்கு தமிழர்கள் குடியேறத் தொடங்கியிருக்கிறார்கள். ராஜேந்திர சோழர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்ப் படைகள்  அதிக அளவில் நிறுத்தப்பட்டிருந்தன. தும்ளுரில் உள்ள சொக்கநாத சுவாமி கோயில், 10-வது நூற்றாண்டில் சோழர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதுதான். பேகுரில் உள்ள சோமேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட 10 கோயில்கள் தமிழர்கள் கட்டியவை. அந்தக் கோயில்களில் தமிழ் மொழியில் பல்வேறு கல்வெட்டுகளையும் காண முடியும். 

பெங்களூரு நகரின் மூத்த குடிகளுள் ஒன்று தமிழ்க் குடி. சோழர் காலத்துக்குப் பிறகு 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்திலும் பெங்களூரில் ஏராளமான தமிழர்கள் குடியேறினர். அப்படிக் குடியேறிய தமிழர்கள் ராணுவத்தில் பணிபுரிந்தார்கள். 1882-ம் ஆண்டு இந்த நகரில் கன்டோன்ட்மென்ட் பகுதி உருவாக தமிழர்களே முக்கியக் காரணம். பல்வேறு போர்களில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே மெட்ராஸ் சேம்பர்ஸ் போர் நினைவுச்சின்னம் உள்ளது. 

மாணிக்க வேலு முதலியார் பங்களா

சிங்கப்பூரை எப்படி தமிழர்கள் வளர்த்தெடுத்தார்களோ...  அதேபோல பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கும் தமிழர்கள் அளித்த பங்களிப்பு அதிகம். 1900-ம் ஆண்டில் பெங்களூரில் நம்பர் ஒன் பணக்காரராகத் திகழ்ந்த மாணிக்கவேலு முதலியார், சுரங்கத் தொழில் செய்துவந்தார். பெங்களூரில் ராஜ்பவனுக்குப் பிறகு மாணிக்க வேலு முதலியர் குடும்பம் வசித்த பங்களாதான் பெரியது. இந்த பங்களா, 2001-ம் ஆண்டு கர்நாடகக் கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

வள்ளியப்பா குடும்பம், 1938-ம் ஆண்டு ஸ்ரீ வள்ளியப்பா டெக்ஸ்டைல் குழுமத்தை உருவாக்கியது. மில்லர்ஸ் சாலையில் அமைந்திருந்த இந்த மில், அப்போது நாட்டிலேயே பெரியதாகக் கருதப்பட்டது. இந்தக் குழுமத்துக்கு ஐந்து மில்கள் பெங்களூரில் இருந்தன. ஸ்ரீ வள்ளியப்பா குழுமம் கட்டிய சோனா டவர்ஸ்தான் பெங்களூர் நகரம் இன்று ஐடி ஹப்பாக மாற முக்கியக் காரணம். இன்ஃபோசிஸ் நிறுவனம் இங்கே செயல்பட்டுவந்தாலும், ஐ.டி தொழில் சூடுபிடிக்கவில்லை. மல்டி நேஷனல் நிறுவனங்கள் இந்தியாவைத்  திரும்பிப் பார்க்கத் தொடங்கிய காலத்தில், 1982-ம் ஆண்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் இந்த நகரில் முதன்முறையாக சோனா டவர்ஸில்தான் தொலைதொடர்புக்காக டிஷ் அமைத்தது. 

அமெரிக்காவின் மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் நிறுவனம், அப்போது பெங்களூரில் அலுவலகம் தேடிக்கொண்டிருந்தது. சோனா டவர்ஸில் உள்ள வசதிகளைக் கேள்விபட்டு, 1984-ம் ஆண்டு முதல்  அலுவலகத்தை இங்கே அமைத்தது. சிலிக்கான் வேலி சிட்டியில் கால் பதித்த, முதல் வெளிநாட்டு நிறுவனம் இதுதான். இதைத் தொடர்ந்தே பல சாஃப்ட்வேர் நிறுவனங்கள் இங்கு வரிசையாக வரத்தொடங்கின. வள்ளியப்பா குழுமத்தைச் சேர்ந்த தியாகு வள்ளியப்பா, பெங்களூரு இண்டஸ்ட்ரீஸ் அண்ட் காமர்ஸ் அமைப்பின் தலைவராக உள்ளார்.

 பெங்களூரு நகரம்

ஸ்ரீராமபுரம், இரும்பு மற்றும் பவுண்டரி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. இங்கேதான் டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு இயந்திரங்களைத் தயாரிக்கும் `சன்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ்' உதித்தது. ஈரோட்டிலிருந்து பெங்களூரில் வசித்த அத்தை வீட்டுக்கு வந்த அருணாசலம், இளைஞர் பின்னி மில்லில் வேலைபார்த்தார். சுயத்தொழிலாக அவர் தொடங்கிய சன்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ், தற்போது டெக்ஸ்டைல் இயந்திரங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. 

சாஃப்டவேர் நிறுவனங்கள் பெங்களூரில் தலையெடுக்க ஆரம்பித்ததும், தமிழகத்தைச் சேர்ந்த ஐ.டி இளைஞர்களுக்கும் இந்த நகரம் வாழ்வாதார நகரமாகியது. கடந்த வருடத்தில் நடந்த காவிரிக் கலவரத்தின்போது, பெங்களூரில் பணிபுரியவே தமிழக இளைஞர்கள் யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சிலிக்கான் சிட்டியில் கன்னடம் பேசுவோர் 41.54 சதவிகிதமும், தமிழ் பேசுவோர் 18.43 சதவிகிதமும் வசிக்கின்றனர். இந்த நகரில் கன்னட மக்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக தமிழர்களே வசிக்கின்றனர். அதனால்தான் இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகும் அந்த நகரில் தமிழர் ஒருவரால் மேயராக முடிந்துள்ளது. தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் பிரச்னை ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது, காவிரி விவகாரம்தான். இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதே இரு இனத்தவர்களும் சிலிக்கான் சிட்டியில் சுமுகமாக வாழ வழிவகுக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்