`நவம்பர் 8 கறுப்பு நாள்' - பணமதிப்பிழப்புக்கு எதிராகத் திரண்ட எதிர்க்கட்சிகள் | Opposition parties announced that they would observe November 8 as a 'black day'

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (24/10/2017)

கடைசி தொடர்பு:17:53 (24/10/2017)

`நவம்பர் 8 கறுப்பு நாள்' - பணமதிப்பிழப்புக்கு எதிராகத் திரண்ட எதிர்க்கட்சிகள்

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, இரவு 8 மணி அளவில், பிரதமர் நரேந்திர மோடி 'இனி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்று பிரகடனப்படுத்தினார். இந்நடவடிக்கை மூலம் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் வெளிக்கொணரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், `பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 98 சதவிகித பணம் மீண்டும் வந்துவிட்டது' என்று அறிக்கை வெளியிட்டது. மேலும் இந்த நடவடிக்கையை அடுத்து, இந்தியாவின் பல இடங்களில் பழைய பணத்தைக் கொடுத்துவிட்டு, புது ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்காக வங்கிகளிலும் ஏடிஎம் வாசல்களிலும் நின்ற பலர் உயிரிழந்தனர். இதனால், எதிர்க்கட்சிகள் தரப்பில் `பணமதிப்பிழப்பு ஒரு மிகப் பெரும் தோல்வி' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. 

எதிர்க்கட்சியினர்

வரும் நவம்பர் 8-ம் தேதியுடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ஓர் ஆண்டு முடிவடையப்போகும் நிலையில், இந்திய அளவில் 18 எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரண்டு, அந்நாளைக் கறுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்துள்ளன. இது குறித்து காங்கிரஸின் குலாம் நபி ஆசாத், திரிணாமூல் காங்கிரஸில் ஓப்ரையன் மற்றும் ஷரத் யாதவ் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஆசாத், `இந்திய அளவில் செயல்படும் 18 கட்சிகள் நேற்று சந்தித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்பு தினமாக அனுசரிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மன்மோகள் சிங், `இது இந்திய ஜி.டி.பி-யை 2 சதவிகிதம் சரிவடையச் செய்யும்' என்று கணித்தார். அதைப்போலவே நடந்தது. பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு இரண்டே வாரத்தில் காஷ்மீர் எல்லையில் இருந்த தீவிரவாதிகளின் கையில் புதிய ரூபாய் நோட்டுகள் இருந்தன. எனவே, அப்போது எதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டதோ அதை எதையுமே அது சாதிக்கவில்லை' என்று குற்றம் சாட்டினார்.