90 லட்சம் பேரை காவு வாங்கிய மாசு... சீனாவை முந்தி இந்தியாவுக்கே முதலிடம்!

ன்றைய தேதியில் உலகின் முக்கியப் பிரச்னை புவி வெப்ப உயர்வுதான். அதற்கு மிக முக்கியக் காரணம் மாசுபாடுதான். மனிதனின் செயல்கள் மூலம் சுற்றுச்சூழல் ஆதார வளங்களான காற்று, நீர், மண் ஆகியவை பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்படைவது தான் மாசுபாடு. இம்மாசுபாட்டால் சூழல் மண்டலத்தில் வாழும் தாவரம், விலங்குகளுக்குப் பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன. உலகை அச்சுறுத்தும் பத்துச் சீர்கேடுகளில் சூழலியல் மாசுபாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தது எனச் சில மாதங்களுக்கு முன்னர் ஐ.நா சபை அறிவுறுத்தியது. ஒவ்வொரு நாளும் மனிதனின் செயல்களால் சூழலியல் மண்டலத்தில் மாற்றம் ஏற்படுவது என்பதை இங்கு மறுக்க முடியாது. இதனை லான்செட் மருத்துவ ஆய்வு இதழ் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது. உலக அளவில் சூழலியல் மாசுபாட்டால்தான் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு உலகில் நடந்த 90 லட்சம் மரணங்கள் சூழலியல் சீர்கேட்டால் நிகழ்ந்தவை என்கிறது அந்த அதிர்ச்சி தரும் ஆய்வு. 

மாசுபாடு

லான்செட் ஆய்வில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் மாசுபாடு காரணமாக இறந்த 90 லட்சம் மக்களில் 25 லட்சம் மக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 18 லட்சம் மரணங்களுடன் சீனா இரண்டாவது இடம் வகிக்கிறது. இரண்டு வருடங்களாக நடந்து வந்த ஆய்வில் சுற்றுச்சூழல் விஞ்ஞானி பிலிப் லாண்டிரிகன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட சர்வதேச சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். உலக அளவில் நிகழும் மரணங்களில் சராசரியாக 6-ல் ஒன்று சுற்றுச்சூழல் சீர்கேட்டால் நிகழ்கிறது. எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா ஆகியவற்றால் ஏற்படும் மரணங்களை விட மூன்று மடங்கு அதிக மரணங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்படுகிறது. இந்த மாசுபாடு வளரும் நாடுகளில் அதிக அளவு இருப்பதாக லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது. 

சுற்றுச்சூழல் மரணங்களில் முக்கியமான இடம் காற்று மாசுபாட்டால் இறந்தவர்களுக்குத்தான். காற்று மாசுபாட்டால் இறப்பவர்கள் மட்டும் 65 லட்சம். இதில் பங்களாதேஷில் மட்டும் 2 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் இறக்கிறார்கள். இந்தியாவில் 18 லட்சம், சீனாவில் 15 லட்சம் என மரண எண்ணிக்கை வரிசைகட்டி நிற்கிறது. மாசுபாட்டினால் இறப்பவர்கள் ஏழை மற்றும் வளரும் நாடுகளில்தான் அதிகம். இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகம் இல்லாததே காரணம். இந்தியா மற்றும் சீனாவில் மாசுபாட்டால் அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழ்வதற்குத் தொழிற்சாலைகளினால் ஏற்பாடும் மாசுபாடுதான் காரணம். 

காற்ரு மாசுபாடு

"லான்செட் கொடுத்த அனைத்துத் தரவுகளும் 2015-ம் ஆண்டு எடுக்கப்பட்டவை. இதற்குப் பிறகும் மத்திய அரசும் மாநில அரசும் இன்னமும் அதிகமாக அனல் மின்நிலையங்களைத் தொடங்கவும், மாசு ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அமல்படுத்தவும்தான் துடித்துக் கொண்டிருக்கின்றன. லான்செட்டின் இந்த அறிக்கையை நாம் கிணற்றில் போட்ட கல்லாக விடப்போகிறோமா அல்லது இந்த அறிக்கையை வைத்து அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கப் போகிறோமா என்பதைப் பொறுத்துதான் இந்த மண்ணின் எதிர்காலம் உள்ளது" என்கிறார், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன். 

இதுவரை இந்தியா உபயோகப்படுத்தும் மாசுபாட்டை அளக்கும் கருவிகூட பழைய தொழில்நுட்பம்தான் என்கிறார்கள் சிலர். மத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!